நான் உயிரோடு இருக்கும் வரை புத்தளத்தில் போட்டியிட மாட்டேன் - ரிஷாத்
ரஸீன் ரஸ்மின்
நான் உயிரோடு இருக்கும் வரை பொதுத் தேர்தலில் புத்தளத்தில் போட்டியிட மாட்டேன். புத்தளத்தில் உள்ள மகன்தான் புத்தளத்தை ஆள வேண்டும் என்பதுதான் எனது விருப்பமாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து புத்தளம் வெட்டுக்குளம் பகுதியில் புதன்கிழமை இரவு இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் பேசிய அவர் மேலும் கூறுகையில்,
ஒரு பாராளுமன்ற உறுப்பினராக வரவேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை இருக்கும். ஆனால், எந்தக் கட்சியின் ஊடாக போட்டியிட்டால் வெற்றிபெறலாம் என்று ஆழமாக சிந்தித்து செயல்படுவதன் மூலமாகவே எமக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
மர்ஹூம் நெய்னா மரைக்காருக்குப் பிறகு புத்தளத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வரவில்லை என்பதுதான் வரலாறாக இருக்கிறது.
இந்த வரலாற்றை மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காகவும், பெரும் வாக்குப் பலத்தை வைத்துக் கொண்டு ஒரு எம்.பியை பெற்றுக் கொள்ள முடியாமல் கஷ்டப்படுகின்ற புத்தளம் மாவட்ட மக்களுக்கு ஒரு எம்.பியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இங்கு அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்தோமே தவிர, புத்தளம் மாவட்ட மக்களை ஆளவும், அடிமைப்படுத்தவும் நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் எமது கட்சியில் ஒரு அமைப்பாளராக இருந்த போது, புத்தளத்தில் காணப்படும் வீதி, பாடசாலை, மஸ்ஜிதுகள் என எல்லா பகுதிகளுக்கும் நிதிகளை ஒதுக்கி அபிவிருத்தி பணிகளை முன்எடுக்குமாறு பல கோடி ரூபா பணத்தை ஒதுக்கியிருந்தேன்.
அப்போது அத்தனை அபிவிருத்தி பணிகளையும் நான் வந்துதான் ஆரம்பிக்க வேண்டும், நான்தான் திறந்து வைக்க வேண்டும் என்று ஒருபோதும் கட்டளையிட்டது கிடையாது.
நீங்களே சென்று அத்தனை அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வையுங்கள் என்று கூறினேன். புத்தளம் நகருக்கும் எமது காலத்தில் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு கல்லைக் கூட நான் வந்து வைக்கவில்லை.
நான் சார்ந்த மக்களை வாழ வைத்த இந்த புத்தளம் மாவட்ட மக்களுக்கு எல்ல வகையிலும் உதவி செய்ய வேண்டும் என்பதுதான் எங்களது ஒரே நோக்கமாக இருந்தது.
வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் இடம்பெயர்ந்து வெறுங்கையுடன் புத்தளத்திற்கு வருகை தந்த போது அவர்களை அன்போடு வரவேற்று அவர்கள் வாழ்வதற்கு தேவையான அத்தனை வசதிகளையும் பெற்றுக் கொடுத்து, வடக்கு முஸ்லிம் சமூகத்தை இந்த புத்தளம் சமூகம் கௌரவித்தது.
இவ்வாறு எமது சமூகத்தை கௌரவப்படுத்திய புத்தளம் சமூகத்திற்கு நாங்கள் ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டோம். புத்தளம் மாவட்ட சிறுபான்மை மக்கள் சார்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பெறுவதற்கு நாங்கள் ஒருபோதும் தடையாக இருக்க மாட்டோம்.
அதுமாத்திரமின்றி, புத்தளத்தில் வாழும் வடமாகாணாத்தைச் சேர்ந்தவர்களும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கும் ஆசைப்படக் கூடாது.
புத்தளத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேல் முஸ்லிம் மக்களின் வாக்குகள் உள்ளன. அதுபோல இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் வடக்கு முஸ்லிம் மக்கள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் புத்தளத்தில் நிரந்தர வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர்.
எனவே, பொதுத் தேர்தலில் இடம்பெயர்ந்து வாழும் சமூகம் சார்பில் வேட்பாளர்கள் புத்தளத்தில் களமிறங்குவது, அவர்களுக்கு மட்டும் வைராக்கியத்துடன் வாக்களிப்பது, தனியாக மேடை அமைப்பது என்பன புத்தளம் மக்களுக்கு மாத்திரமின்றி, இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் வடக்கு முஸ்லிம் மக்களுக்கும் இழைக்கும் மிகப் பெரிய துரோகமாகும்.
எனவே, புத்தளம் மக்களும் இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் வடக்கு முஸ்லிம் மக்களும் இன்றுவரை மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் சூழ்நிலையில் இவ்வாறு தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் ஒற்றுமையில் சீர்குலைவு ஏற்படும். இதற்கு இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் மக்கள் ஒருபோதும் இடமளிக்க வேண்டாம்.
எங்களுக்கு உதவி செய்தவர்களை ஒரு போதும் மறந்து செயல்படவில்லை. புத்தளம் மாவட்ட மக்களை அடிமைப்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை. அரசியல்வாதிகளை பலவீனப்படுத்த வேண்டும் என்று சிந்தித்தது கிடையாது.
ஆனால், இன்று அவர்களது அரசியல் தேவைக்காக எங்கள் மீது அபாண்டங்களை சுமத்துகிறார்கள். காலம் அதற்கு பதில் சொல்லும். புத்தளம் மாவட்ட மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். புத்தளத்தில் உள்ள உலமாக்கள், கல்விமான்கள் என அனைவரும் எமது செயற்பாடுகளின் நியாயத்தை தெளிவாக புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
எனவே, புத்தளத்தில் உள்ள சில்லறை அரசியல் கத்துக்குட்டிகளின் சத்தங்களுக்கும் நாங்களும், எமது அணியும் ஒருபோதும் சோர்ந்துவிடமாட்டோம். எங்களுடைய அரசியல் பயணத்தை அடியோடு இல்லாமல் செய்வதற்கு உள்நாட்டில் இருப்பவர்கள் மட்டுமல்ல வெளிநாடுட்டு சக்திகளும் வரிந்து கட்டிக்கொண்டு சிலரை வேட்பாளர்களாக, அவர்களுடைய ஏஜன்டுகளாக இந்தத் தேர்தலில் களமிறக்கியிருக்கிறார்கள்.
புத்தளத்தில் மாத்திரமல்ல வன்னியிலும் பெரும் சதிகளை செய்கிறார்கள். இவ்வாறான சதிகாரர்களிடம் இருந்து மக்களை பாதுகாக்கும் எமது இந்த போராட்டத்தில் புத்தளம் மாவட்ட மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.
No comments