அறபுக் கல்லூரி மாணவர்களின் உயிரிழப்புக்கு பொலிஸாரின் பொறுப்பற்ற செயற்பாடே காரணம்; மக்களின் குற்றச்சாட்டை ஆளுநரிடம் எடுத்துரைத்தார் மு.கா தலைவர் ஹக்கீம்
(அஸ்லம் எஸ்.மெளலானா)
கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை (29) மாலை மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்த பாதிப்புகள் தொடர்பிலும் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மாவடிப்பள்ளி பாலத்தில் உழவு இயந்திரம் (ட்ரெக்டர்) கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அறபுக் கல்லூரி மாணவர்கள் உட்பட எட்டுப் பேர் உயரிழந்த துயர சம்பவமானது பொலிஸ் மற்றும் முப்படையினரின் அவதானக் குறைவினாலேயே நிகழ்ந்துள்ளதாகவும் குறித்த பாலத்திற்கு மேலாக வெள்ளம் பெருக்கெடுத்திருந்த நிலையில் பாதையை மூடாமல் போக்குவரத்துக்கு அனுமதியளித்தமையானது பொலிளாரின் பொறுப்பற்ற செயற்பாடாகும் எனவும் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு தாம் விஜயம் செய்தபோது அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குற்றஞ்சாட்டியதாக ரவூப் ஹக்கீம் ஆளுநரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகையினால் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய ரவூப் ஹக்கீம் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
அதேவேளை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துரிதமாக இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அவசர உதவிகள், நிவாரண நடவடிக்கைகள் மற்றும் அனர்த்த பாதிப்புகளை நிவர்த்தி செய்து இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் எனவும் ஆளுநரிடம் அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
இக்கோரிக்கைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார்.
அதேவேளை மாவடிப்பள்ளி பாலத்தில் இடம்பெற்ற உயிரிழப்பு சம்பவம் தொடர்பிலும் இதுவரை மீட்கப்படாத மாணவரை தேடிக் கண்டுபிடிப்பதற்கான மேலதிக நடவடிக்கைகள் தொடர்பிலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பொலீஸ் மற்றும் படை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments