Breaking News

இறுதிச் சொட்டு இரத்தம்...! - ஒரு சிவப்புச் சிறுகதை -

நள்ளிரவு தாண்டி சில நிமிடங்கள் போயிருக்கும்....

அந்தக் காட்டுப்பகுதியில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்தான் அவன்... !


பின்னால் துரத்துபவன் யார் என அவனுக்கு விளங்கவில்லை...

எங்கேயோ.. எப்போதோ... கண்டதுபோன்ற ஒரு மெல்லிய நினைவு வந்துபோனாலும்... யார் என்று ஊகிக்க முடியவில்லை...!


காற்றை கிழித்துக்கொண்டு வந்த கருங்கல் துண்டொன்று பிடரியை தாக்க...

'ஆ...' என்ற அலறலுடன்...  கண்கள் மங்க தலையை பிடித்தவாறு நிலத்தில் மயங்கி விழுந்தான்...


###


எத்தனை மணி என விளங்கவில்லை... இன்னும் இருளாகவே இருந்தது...

மெதுவாக உணர்வு வர... கைகள் கட்டப்பட்டு, கால்களும் கட்டப்பட்டு... தான் நிலத்தில் கிடப்பதை உணர்ந்தான்...


மிகுந்த வலியோடு... தலையில் ரத்தம் கசிந்துகொண்டிருந்தது...


பக்கத்தில் எதோ... "ச்சக்..."... "ச்சக்..." என்ற சப்தம்... 

கண்களுக்குள் மங்கலாக விளங்கியது.... துரத்தி வந்தவன்... சற்று தூரத்தில்...ஒரு பாரிய குழியை வெட்டிக்கொண்டிருந்தான்...


###


"யா...ர்.. நீ...? எதற்காக... என்னை... இப்படி...?"

இயலாமையும், மரணபயமும், மயக்கமும் கலந்து... அவனது வாய் மெல்ல முணுமுணுத்துக்கொண்டிருந்தது...!


பக்கத்தில் வந்து நின்றவன்... 

ஒரு பீடியை பற்றவைத்துக்கொண்டான்...


"என்ன... Boss... வெளங்குதில்லையா...? நான் தான் எந்த முகமூடியும் போட இல்லையே...!" 

'ஏன் விளங்குதில்லை..?' என கண்களாலேயே கேட்டபடி... தனது purse இல் இருந்து ஒரு photo வை எடுத்தான்....


"இவர் யாருன்னு தெரியுதா...? 

நீ அணுவணுவா கொலை செஞ்ச... ஒரு School Principal...!"


"இல்லை... இல்லை... நான் எதுவுமே செய்யல்ல... அவர் யாருன்னே எனக்கு தெரியாது....!" 

பதறிக்கொண்டு எழ முயற்சித்து தோற்றவனை...


கண்கள் சிவக்க... காலில் இருந்த செருப்பால் அவனது வாயில் மிதித்தான்... 

"நேரில் பார்த்த என்னிடமே பொய்யாடா சொல்ற..."


###


பற்கள் இரண்டு உடைந்து... 

வாயிலிருந்தும் இரத்தம் வடிந்துகொண்டிருந்தது....


ஒரு பையை திறந்து அதிலிருந்த ஒரு கரல்பிடித்த குறடை எடுத்துக்கொண்டு மீண்டும் நெருங்கினான்...

தனது purse இல் இருந்து மீண்டும் ஒரு புகைப்படத்தை எடுத்தான்...!


"இவங்கள தெரியுதா...?"


அச்சத்தோடு மிரண்டுபோய் நோக்கியவனிடம்.... 

பற்களை கடித்துக்கொண்டு மீண்டும் கேட்டான்...


"சொல்லுடா... இவங்கள தெரியுதா...?"


தலையால் 'இல்லை' என மறுத்துக்கொண்டே... 

தயங்கிய படி... மெல்லிய குரலில் சொன்னான்....


"இங்க பாரு... நீ வேற யாருண்டோ நெனச்சு என்ன கடத்திட்டு வந்திருக்கிற... சத்தியமா நீ நெனைக்குற ஆல் நானில்ல...!

நீ காட்டுற photo ல உள்ளவங்கள எனக்கு யாருண்டே தெரியுதில்ல..."


கையில் இருந்த பீடியை வீசி எறிந்தவன்... 

அந்த கரல்பிடித்த குறடால் வலது கை விரல்களை ஒவ்வொன்றாக வெட்டினான்...


"ஆ... ஆ..."  என்ற அலறல்... அந்த காடு முழுதும் எதிரொலிக்க...

அவன் வெட்டிக்கொண்டே இருந்தான்....


###


மயங்கிக் கிடந்தவன் முகத்தில் நீர் தெளித்து.... 

கண்விழிக்கச் செய்து, இழுத்துப்போய் பக்கத்தில் நின்ற மரம் ஒன்றில் சாய்த்து அமரவைத்தான்...


" டேய்... இவங்கதான் அந்த Pricipal ஓட wife... நீ நெருப்பு வைத்து எரிச்ச இன்னொரு உசுரு...!"


அவனால் பேச முடியவில்லை...

"இல்ல...நா...னில்லை.. நான் யா..ரையும் கொலை... செய்யல்ல...." வாய் மட்டும் அசைந்துகொண்டிருந்தது...!


###


தலையில்... 

ஒரு வாளி தண்ணீரை வீசியடிக்க...

மெல்ல கண்திறந்து பார்த்தான்....


முகத்துக்கு மிக நெருக்கமாக... ஒரு கறுப்பு-வெள்ளை புகைப்படத்தோடு குனிந்தவன்...

"டேய்... இவனையும் தெரியாது என சொல்லப்போறியா...?"  என்றான்... கலங்கிய கண்களுடன்...


அந்த போட்டோ வை பார்த்ததும்.., 

அந்த வேதனையிலும் அவனது கண்கள் அகண்டது.... 


வெள்ளை நிற பாடசாலை சீருடையில்... 

அரும்பு மீசையுடன் ஒரு அழகான மாணவன்...


"இது... இது.... என்னோட ஸ்கூல்... Batch friend... 

இந்த போட்டோ... ஸ்கூல்ல.... படிக்கிற நேரம்... எடுத்து..."


"அப்படியா...? அவன் எங்கடா இப்போ...?"


"சத்தி..யமா... எனக்கு... தெரியாது...! 

நான்... அவனை கண்டு... ரொம்ப காலம்..!!"


###


"ம்ம்... ஒனக்கு தெரியாது...!


Photo வுல பார்த்து அவனை தெரிஞ்சிக்கிட்ட ஒன்னால...

நேர்ல பார்த்து வெளங்குதில்ல...!


ஒனக்கு முன்னால நிக்கிற இந்த பைத்தியக்காரன் தான்...

அவன்னு விளங்குதில்ல....!!


இப்போ தெரிஞ்சிக்கோ...


அவன்தாண்டா நான்... என்டு 

தெரிஞ்சிக்கோ..!! 


அந்த principal இற்கும்... அவரோட wife க்கும் பிறந்த 

பிள்ளை எண்டு தெரிஞ்சிக்கோ...!!"


காடு அதிர்ந்தது... 


இடதுகை விரல்கள்...

ஒவ்வொன்றாய் மண்ணில் விழ ஆரம்பித்தது....!


###


அதுவரை பேசிக்கொண்டிருந்தவன்... 

சிரமத்துடன் மூச்சுவாங்கினான்...


கைகளால் தனது தலையில் அங்கும் இங்கும் தட்டினான்....


வாந்தி எடுத்தான்...!

தட்டுத் தடுமாறி... காதருகில் நடந்து வந்தான்....


"எப்படி டா... 

அடையாளம் தெரியும்...?


என் பல்லெல்லாம் இத்துப்போச்சு...

நரம்பெல்லாம் செத்துப்போச்சு...


கடைசிச் சொட்டு ரத்தமும் 

காய்ந்து போச்சு...!


எப்படி டா... 

அடையாளம் தெரியும்...?


40 வயசுல... 

இந்த 80 வயசு உருவம்...!


என் வாழ்க்கையையே... 

அழிச்சிட்டியேடா....!!


தேம்பித் தேம்பி.... அழ ஆரம்பித்தான்...!!


###


ரத்த வெள்ளத்தில் கிடந்தவனுக்கு...

எதோ புரிய ஆரம்பித்தது... 


"என்ன... விட்டுடு... நீ.. என்ன .கே...ட்டா..லும்... தாரேன்..." 


###


"எதடா...  தருவே...? 


என்னோட ஆரோக்கியத்த தருவியா..? 

ஊருல இல்லாம போன மானத்த தருவியா...? 


மனம் வெந்து செத்துப்போன... எண்ணப் பெத்த உசுருகள தருவியா...?


இல்ல... 25 வருஷத்த தருவியா....?"


காரித் துப்பினான்...

கன்னத்தில் அறைந்தான்.... 

கட்டப்பட்ட கால்களுக்குப் பக்கத்தில் வந்து கத்தியோடு அமர்ந்தான்....!!


"வே...ண்டாம்... வே...ண்டாம்... ப்ளீஸ்... " என்றவனை வெறித்துப் பார்த்தான்...


"நஞ்சு திங்க பழக்கித் தந்த நாயே...

'இத அடிக்காட்டி இனி friendship இல்ல'ன்னு... எனக்கு போதைய பழக்கிய துரோகியே...!


School க்கு படிக்க வந்த என்னை....

'இன்பம் இது என்று...' நரக வாசலில் தள்ளிவிட்ட நயவஞ்சகனே....!


இந்த பூமியில் வாழத் தகுதியில்லாத மிருகமே...!


நீ செஞ்ச பாவம் எவ்வளவு பெருசுன்னு இங்க பாருடா....!!"


தனது T-shirt ஐ கிழித்துக் கழற்றினான்.... மேனி எங்கும் ஊசிகளின் தழும்புகள்...

அங்கும் இங்கும் புடைத்துக் கறுத்துப்போன நரம்புகள்.... காயங்கள்... அருவருப்புகள்...!!


###


காலின் கடைசி விரல்களை வெட்டிக்கொண்டிருந்தான்...!

இப்போது இவன் பேசுவது எதுவும்... அந்த சடலத்தின் காதுகளில் அதிகம் கேட்கவில்லை...!!


ஆனாலும் அவன் பேசிக்கொண்டிருந்தான்...!


###


"என்ன பார்க்கிறே...?

அந்தக் குழி இன்னைக்கு இல்ல... அது நாளைக்கு...!!


நீ முழுசா சாக இன்னும் இரண்டு நாள் எடுக்கும்....!


நாய் கொஞ்சம்... நரி கொஞ்சம்... உன்ன உசுரோட கடிக்கணும்...

கரடி இழுக்கனும்... கழுகு கொத்தனும்...


நான் வாழ்ர வாழ்க்கைய... 

நீ ரெண்டுநாளாவது வாழனும்...!!"


###


அதிகாலை வரை...

அப்படியே அமர்ந்திருந்தான்....


வலித்தது...

வாயிலும் மூக்கிலும் ஏதேதோ வழிந்தது...


வழமைபோல்... உடலுக்குள் ஊசி போல் குத்தியது....!

நரம்புகள் நஞ்சு கேட்பது விளங்கியது...


எழுந்து நடந்தான்... 

தொடர்ந்து சாவதற்கு...!!


---

@ புத்தளம் மரிக்கார்.

20-07-2024




No comments

note