Breaking News

கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பா.உ. அலி சப்ரி ரஹீம் பிணையில் விடுதலை

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

வழக்கு ஒன்றுக்கு ஆஜராகாத நிலையில் இருந்த குறித்த புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீமை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும், மாவட்ட நீதவானுமான அயோனா விமலரத்ன கற்பிட்டி சுற்றுலா நீதவான் நீதிமன்றில் வைத்து திறந்த பிடியாணை ஒன்றை கடந்த 8 ஆம் திகதி பிறப்பித்திருந்தார்.


இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் இன்று காலை கற்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.


இவ்வாறு சரணடைந்த புத்தளம் பாராளுமன்ற உறுப்பினரை புத்தளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர் இரண்டு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் மேலும் எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சிப்பிட்டியில் அமைந்துள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்றின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் பொறுப்புக் கூறும் வழக்கு கடந்த 8 ஆம் திகதி கற்பிட்டி சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


இதன்போது புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் குறித்த வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காத நிலையில், நீதவான் இவ்வாறு கைதுக்கான திறந்த பிடியாணை உத்தரவை வழங்கியுள்ளார்.


இதற்கு முன்னரும், குறித்த பாராளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றும் அவர் சார்பில் சட்டத்தரணியும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.


மதுரஸாவின் பெயரில் பதிவு செய்யப்பட்ட கட்டிடத்தில் அரச சார்பற்ற நிறுவனமொன்று இயங்கி வருவது குறித்து புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீமின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட தன் நிமித்தம் அங்கு சென்றதன் காரணத்தினால் குறித்த மதுரஸா கட்டிடத்திற்குள் அத்து மீறி நுழைந்தமை மற்றும் அங்குள்ள அரச சார்பற்ற நிறுவனத்தின் சொத்துக்களை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கற்பிட்டி பொலிஸாரால் நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




No comments

note