எனை தழுவிய சிறு பராய கால நினைவுகளை எழுத்துருவில் உங்களோடு சில நிமிடங்கள் பகிர்கிறேன் புத்தளம் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். யூ. எம்.சனூன்
எனது பிறந்தகமான, புத்தளம் மூன்றாம் குறுக்குத் தெருவில், அமைந்திருக்கின்ற "கொப்பரா" பள்ளி என அழைக்கப்படும் சிந்தா சேகு மதார் பள்ளிவாசலிலே இன்றைய தினம் (06.06.2024) மஃரிப் தொழுகைக்காக செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது.
பள்ளியை நோக்கி வந்ததுமே அன்றைய 1971 ஆம் ஆண்டு எனது ஏழு வயதில் அங்கு வாழ்வின் முதல் அத்தியாயம் தொழுகைக்காக எனை அர்ப்பணித்த நினைவுகள் நிழலாடியது.
எனக்குள் "ஆன்மீகம்" எழ துவங்கிய அந்த பள்ளியை நிமிர்ந்து பார்த்தேன்..அடடா..என்ன அடக்கம்..பொழுது போக்கு அரட்டை அடித்த முன் விறாந்தா.. அறியாத பருவத்தில் நோன்பையும் பிடித்து உளூ செய்யும் வேளையில் "சற்று தாகம் தீர்த்த" ஹவுல்...இன்னும் இன்னும் அப்படியே..புத்தளம் நகர் பள்ளிகள் எல்லாம் வான் உயர்ந்தாலும் பணிவோடு, அடக்கத்தோடு அன்று போல இன்றும் கொப்பரா பள்ளி..
புத்தளம் நகரின் பிரபலமான போர்த் வீதியில் வசித்து எம்மை விட்டு பிரிந்த இலங்கையின் முதலாவது முஸ்லிம் சபாநாயகர் எச்.எஸ். இஸ்மாயில், நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர் எம்.எச்.எம்.நெய்னா மரைக்கார், டாக்டர் காசிம் (மஹீஸ் டொக்டரின் மாமா), ஈ.எஸ்.எம்.முஹம்மது காசிம் (மம்காசிம்) மரைக்கார், வங்கி சக்கீனின் தந்தை அப்துல் வாஹித் உள்ளிட்ட செல்லமரைக்கார் அப்பா (சாஹிரா முன்னாள் அதிபர் அன்வர் சேரின் வாப்பா) என பலரோடு அன்று இமாம் ஜமாஅத்தோடு தொழுத ஞாபகமும் எனது நெஞ்சிலே நிழலாடியது... ஏழு வயது ஞாபகமல்லவா..பெயர்களில் பிழை இருந்தால் மன்னிக்கவும்....இதிலே அலி மரைக்கார் அவர்களை நான் கண்டதில்லை..1971 க்கு முன்பாக காலமாகி விட்டாரோ தெரியவில்லை...(அலி சிமாக் அல்லது சிமாக் அவர்களே சற்று ஞாபகமூட்டி கொள்ளுங்கள்)
நாங்கள் அங்கு ஓடித் தெரிந்த, சுற்றித்திரிந்த எல்லா சந்து பொந்துக்கும் எனது நினைவுக்குள் உள்வாங்கப்பட்டன..
நானும் காலஞ்சென்ற ராசிக் பரீதும் (துல் கிப்லி) சாலிஹ் மரைக்கார் வீட்டிலே அந்த சின்னஞ்சிறு வயதிலேயே (விபரம் அறியாத பருவம்) மாங்காய்களை திருடிவிட்டு.. அங்கு கடமையில் இருந்த "மொரஹு" இஸ்மாயில் அப்பா துரத்தி வர.. பள்ளிக்கு முன்னால் அமைந்திருக்கின்ற மூன்று பூவரசு மரங்களையும் சுற்றி சுற்றி அடிவாங்காமல் மயிரிழையில் தப்பி சென்றதும் நினைவுக்கு வந்தது.
அந்த 03 பழைமை வாய்ந்த பூவரச மரங்களில் ஒன்று மத்ரஸா அமைக்க தன்னை அர்ப்பணித்து விட இன்னும் 02 மரங்கள் என்னை பார்த்து ஏளனமாக சிரித்தது போல் இருந்தது..அன்று மாங்காய் கள்வனை பாதுகாத்தேன்..எனும் பெருமையுடன்..
அன்று கொப்பறா பள்ளியில் பிரதம பேஷ் இமாமாக இருந்த வித்துவான் அல்லாஹ்பிச்சை அப்பா அவர்களும், முஅத்தினாக இருந்த ஆசிரியர் ஓர்பே அவர்களது மாமா அல்லாஹ் பிச்சை அப்பாவும் நினைவுக்கு வந்து போனார்கள். முஅத்தின் அல்லாஹ் பிச்சை அப்பாவுக்கு ஐந்து ரூபாய் கொடுத்து எனது பாசமிகு உம்மா, ரஸீனா உம்மா அவங்க கோழி அறுக்க எனை அனுப்பியதையும் ஞாபகமூட்டினேன்...கோழிக்கு இறுதி தண்ணீர் வார்த்த மிகப்பெரிய கிணறும் இன்றும் அதே போல கம்பீரமான தோற்றத்தில்...
சாலிஹ் மரைக்கார் வீட்டுக்கு, எமது அந்த கொப்பரா பள்ளியிலே ஓதிய மாணவர்கள் எல்லாம்
நோன்புப் பெருநாள் அல்லது ஹஜ்ஜு பெருநாள் தினத்துக்கு முன்னைய தினம் "ஹம்சு" ஓத சென்று சாலிஹ் மரைக்கார் அவர்களுக்கு முன்பாக ஹம்சு ஓதிவிட்டு எங்களுக்கு 25 சதமும், "சட்டாம்" பிள்ளைக்கு ஒரு ரூபாவும், பள்ளி மாமாவுக்கு இரண்டு ரூபாவும் பெற்றுக் கொண்ட நினைவுகள்...அத்தனை காசுகளும் வெள்ளி நிறத்தில் பளிச்சென மின்னும்..சல்லி போடுவதற்கென்றே உம்மா தைத்து தந்த சிறிய புடவை உறை..சல்லி பாதுகாப்பாக வைக்க.. Money purse ஒன்றும் அன்று இல்லை..
"ஹம்சு" என்ற சொல்லும்..சொல்லி போகும் வழக்கமும் இன்று காணாமல் போன கனவுகள்..
நோன்பு காலத்தில் இரவு வேளைகளிலே குர்ஆன் மஜ்லிஸ் ஹிஸ்பு எனப்படுகின்ற அந்த குர்ஆன் மஜ்லிஸில் கலந்துகொண்டு உணவுகளை பரிமாறிய விடயங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தன.. அந்த ஹிஸ்பு மஜ்லிஸ் இன்றும் கூட கொப்பரா பள்ளியிலே பெரியவர்கள் நடாத்தி வருவது கூட இங்கே குறிப்பிடத்தக்கது...
ஆண்கள், பெண்கள் வேறுபாடு, பாகுபாடு இன்றி சிறுவயதிலே எல்லோரும் கைகளை கோர்த்துக்கொண்டு "பூப்பறிக்க வருகிறோம்" "பூப்பறிக்க வருகிறோம்" "என்னா பூ வேண்டும் என்னா பூ வேண்டும்" என்ற அந்த கோஷத்தோடு மாலை வேலைகளில் பள்ளிக்கு முன்பாக விளையாடியதையும் ஞாபகமூட்டுகின்றேன்... இந்த விளையாட்டுகளும் இந்த பொழுது போக்குகளும் இன்று சிறுபிள்ளைகள் கைகளிலே வெறுமனே கையடக்க தொலைபேசிகளாகவே மாறிவிட்டன.. உறவுகள் எல்லாம் மறந்து கொண்டு போகின்றன.. உறவுகளை தரிசிக்கச் செல்வதற்கு கூட எமது சின்னஞ்சிறுசுகளுக்கு இப்போது நேரமில்லை..
இன்னும் இன்னும் பல நெஞ்சில் நிறைந்த நினைவுகள் எல்லாம் நிழலாடியது..அனைத்தையும் எழுத்துருவில் தந்தால் நீங்கள் சளைத்துப் போவீர்கள்..
என்னதான் செய்ய.. அரை நூற்றாண்டு காலம் கழிந்தாலும் கூட நெஞ்சில் நிறைந்த நினைவுகளை ஒரு தடவை மீட்டு பார்த்து அதனை உங்களோடு நான் பகிர்ந்து கொண்டேன்...
கொப்பறா பள்ளியின் இன்றைய நிர்வாகம் அன்று நிர்வகித்தவர்ளின் பரம்பரை ஹஸீப் நெய்னா மரைக்காரிடமே உள்ளது..இணைப்பாளராக வங்கி சக்கீன் கடமையாற்றுகின்றார்..பேஷ் இமாமாக புறாக் நிறுவன முகாமையாளர் அஷ்ஷெய்க் எம்.ஜே.அஸ்லம் கடமையாற்றுகிறார்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் சிரேஷ்ட ஊடகவியலாளர்.
06.06.2024
No comments