ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் புத்தளம் விஜயம்
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நேற்று (09) புத்தளம், பாலாவி, நாகவில்லு பகுதிக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
பாலாவி நாகவில்லுவிலுள்ள தொழிலதிபர் லாபீர் இல்லத்தில் கட்சியின் மூத்த உறுப்பினரான ஓய்வு பெற்ற கிராம சேவையாளர் றஹ்மத்துல்லா தலைமையில் இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடனான கலந்துரையாடலின் போது இம்மாதம் 22 ம் திகதி காத்தான்குடியில் நடைபெற உள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 31 வது பேராளர் மாநாடு சம்மந்தமாகவும் அதில் புத்தளம் மாவட்டத்தில் இருந்து கலந்து கொள்பவர்கள் மற்றும் அவர்களின் வருகை சம்மந்தமாகவும் மேலும் புத்தளம் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிளைகள் புனரமைப்பு, புனர்நிர்மாணம் சம்மந்தமான வேலைத்திட்டங்களை துரிதப்படுத்துமாரும் தலைவரினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அத்தோடு அண்மையில் புத்தளம் மாவட்டத்தில் பெய்த கடும் மழை வெள்ளத்தில் நாகவில்லு பகுதியில் பாதிக்கப்பட்ட சிறு பாலங்களை மீளமைப்பதற்கான கள விஜயம் ஒன்றையும் தலைவர் மேற்கொண்டார்.
இதன் போது கட்சியின் அரசியல் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினருமான எஸ்.எச்.எம் நியாஸ், கட்சியின் அரசியல் உயர்பீட உறுப்பினரும் புத்தளம் பிரதேச சபை வேட்பாளருமான லரீப், கட்சியின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் அர்ஷாத் , இளைஞர் காங்கிரஸ் முக்கியஸ்தரும் தொழிலதிபருமான இமாத், பாசில் மற்றும் ஏனைய கட்சியின் முக்கியஸ்தர்கள், போராளிகள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments