குருநாகல் : ரணவிரு கிராம மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் வடமேல் மாகாண ஆளுநர் கரிசனை..!
ரஸீன் ரஸ்மின்
குருநாகல் , இப்பாகமுவ பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள ரணவிரு கிராம மக்களின் காணிகளுக்கு இதுவரை காலமும் காணி உறுதி வழங்கப்படாமை உள்ளிட்ட சில பிரச்சினைகளை முன்வைத்து அந்த கிராம மக்கள் இன்று (10) குருநாகல் நகரத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அங்கவீனமுற்ற படை வீரர்கள், உயிரிழந்த படை வீரர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட சுமார் இருநூறுக்கும் அதிகமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதன்போது ரணவிரு கிராமத்தில் தாம் நீண்ட காலமாக காணி உறுதிப்படுத்திரம் இன்றி வாழ்ந்து வருவதாகவும், உறுதிப்பத்திரங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் விசனம் தெரிவித்தனர்.
இந்தக் கிராமம், சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டதாகவும், யுத்தத்தினால் அங்கவீனமுற்றவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இந்தக் கிராமத்தில் ஆரம்பத்தில் நூறு குடும்பங்கள் அங்கு குடியமர்த்தப்பட்டதாகவும், தற்போது அங்கு சுமார் அறுநூறு குடும்பங்கள் வாழ்வதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
இதனையடுத்து, ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்ற வடமேல் மாகாண ஆளுநர் அங்கவீனமுற்ற படைவீரர்கள் மற்றும் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடி, அவர்களின் பிரச்சினைகளையும் அமைதியாக கேட்டறிந்தார்.
இதன்போது, ரணவிரு கிராம மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தான் கரிசனையுடன் செயற்படுவதாக ஆறுதல் தெரிவித்த ஆளுநர், இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடி, துரித கதியில் அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.
வடமேல் மாகாண ஆளுநர் வழங்கிய வாக்குறுதியை அடுத்து, போராட்டக்காரர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
ரணவிரு கிராமம் உள்ளிட்ட அங்கவீனமுற்ற மற்றும் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினர் இதுவரை மேற்கொண்ட போராட்டங்களில், ஆளுநர் ஒருவர் , போராட்டக்களத்துக்கு நேரடியாக சென்று அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்த முதலாவது சம்பவம் இதுவாகும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments