ஹாபிஸ் நஸீருக்கு வாழ்த்து; லக்ஷ்மன் யாப்பாவுக்கு நன்றி - ஐக்கிய காங்கிரஸ்
மக்களின் தேவை அறிந்து சேவை செய்யக் கூடிய சிறந்த நிர்வாக திறன் கொண்ட முன்னாள் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மட், வடமேல் மாகாணத்திற்கு புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது இந்த மாகாண மக்களுக்கு கிடைத்த பெரும் வரம் என ஐக்கிய காங்கிரசின் செயலாளர் சப்வான் சல்மான் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது,
வடமேல் மாகாண ஆளுநராக புதிதாக நியமிக்கப்பட்ட ஹாபிஸ் நஸீர் அஹ்மட், மக்களின் நாடி அறிந்தவர். அவர் மூவின மக்களையும் மதித்து செயற்படக்கூடியவர்.
கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்து அங்கிருக்கும் மூவின மக்களுக்கு எவ்விதமான பாகுபாடுகள் இன்றி எப்படி பணியாற்றினாரோ அதுபோல, வடமேல் மாகாணத்தில் குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் வாழும் மூவின மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் முயற்சிப்பார் என நம்புகிறோம்.
மேலும், மீன்பிடி, விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய பொருளாதார நடவடிக்கைகள் உட்பட வடமேல் மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் புதிய ஆளுநர் முழுமையாக தன்னை அர்ப்பணித்து செயற்படுவார் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இருக்கிறது.
அதுமாத்திரமின்றி, வடமேல் மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை, பாடசாலை பௌதீக வளங்களில் காணப்படும் குறைபாடுகள் என்பவற்றை சரிசெய்வதோடு கல்விக்கும், விளையாட்டுக்கும் முக்கியத்துவம் வழங்கி தேவையான நடவடிக்கைகளையும் புதிய ஆளுநர் முன்னெடுக்க வேண்டும்.
அத்தோடு, அரசியலில் முதிர்ச்சியடைந்த, சிறந்த ஆற்றல் மிக்க ஒருவரை வடமேல் மாகாணத்திற்கு ஆளுநராக நியமித்த ஜனாதிபதிக்கும் , அரசாங்கத்திற்கும் நன்றிகளை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், வடமேல் மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநரின் சேவைக்கு ஐக்கிய காங்கிரஸ் எப்போதும் பக்க பலமாக இருக்கும்.
இதேவேளை, தென்மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள, முன்னாள் வடமேல் மாகாண ஆளுநராக கடமையாற்றிச் சென்ற லக்ஷ்மன் யாபா அபேவர்தன எவ்விதமான பாகுபாடுகளும் இன்றி பல அபிவிருத்தி பணிகளையும் முன்னெடுத்துள்ளமைக்காகவும் எமது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சப்வான் ஸல்மான் மேலும் கூறினார்.
No comments