வடமேல் மாகாணம் தன்னிறைவுப் பொருளாதார ஆற்றலை நோக்கி நகரவேண்டும். ஆளுனர் நஸீர் அஹமட் தெரிவிப்பு.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன் மற்றும் கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
வடமேல் மாகாணம் வெறுமனே மத்திய அரசாங்கத்தின் நிதியை மாத்திரம் எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல், மாகாணத்தின் வருமான வழிகளை அதிகரித்து, அதன் ஊடாக மாகாணத்தின் தேவைகளை சுயமாகப் பூர்த்தி செய்து கொள்ளும் வகையிலான தன்னிறைவுப் பொருளாதார ஆற்றலை நோக்கி நகரவேண்டும் என்று வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
வடமேல் மாகாண அபிவிருத்தி அதிகார சபையின் வருடாந்த அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் (30) குருநாகல், வடமேல் மாகாண ஆளுனர் அலுவலகத்தில் ஆளுனர் நஸீர் அஹமட் தலைமையில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதிகார சபையின் பிரதான வருமானம் தொழிற்பயிற்சி நெறிகளை நடத்துதல் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆலோசனைச் சேவைகளை வழங்குதல் போன்றவற்றின் ஊடாக ஈட்டப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும் நன்னீர் மீன்வளர்ப்பு, கேபிள் கார் செயற்திட்டம், வனஜீவராசிகள் பூங்கா, கமத்தொழில் ஆராய்ச்சி மற்றும் கண்காட்சி மையங்கள், சூழலுக்கு இயைபான சுற்றுலாத் துறை அபிவிருத்திச் செயற்பாடுகள் போன்றவற்றின் ஊடாக மாகாணத்தின் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும், அதற்காக குறுகிய மற்றும் நீண்ட கால செயற்திட்ட அறிக்கைகளைத் தயாரித்து முன்வைக்குமாறும் ஆளுனர் நஸீர் அஹமட் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
அத்துடன் இலங்கையின் மிகப் புராதன ராசதானிகளான தம்பதெனிய, யாபஹுவ போன்றவற்றை ஒருங்கிணைத்தும், கீர்த்தி பெற்ற ரிதீ விகாரை உள்ளிட்ட தலங்களையும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தெடுக்கும் வகையிலான கேந்திர நிலையங்களாக மாற்றியமைக்கத் தேவையான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும்,
பொருத்தமான இடங்களில் கேபிள் கார் வசதிகளை ஏற்படுத்துமாறும், வில்பத்து மற்றும் கல்பிட்டிப் பிரதேசத்தை கடல் வழியாக இணைக்கும் பிரதேசத்தில் சூழலுக்கு இயைபான (எகோ ப்ரெண்ட்லி) சுற்றுலா செயற்பாடுகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், அங்கு சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்துக்கான படகுசேவைகளின் வசதிகளை மேம்படுத்துமாறும் ஆளுனர் நஸீர் அஹமட் சுட்டிக்காட்டினார்
சர்வதேச சந்தையில் மதிப்பு வாய்ந்த நன்னீர் மீன் வளர்ப்பு, அலங்கார மீன்வளர்ப்பு உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் வளர்ப்புப் பண்ணைகள் போன்ற புதிய செயற்திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் ஆளுனர் , அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
இந்தக் கலந்துரையாடலின் போது மாகாண பிரதம செயலாளர் தீபிகா குணரத்தின, ஆளுனரின் செயலாளர் இலங்கக்கோன், ஆளுனர் அலுவலக அதிகாரிகள், வடமேல் மாகாண அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments