புத்தளத்தில் மூன்று பாடசாலைகளில் புதிய கட்டிடங்கள் நிர்மாணிப்பதற்காக இரண்டாம் கட்ட நிதி வழங்கும் நிகழ்வு...!
ரஸீன் ரஸ்மின்
புத்தளம் மாவட்டத்தின் ஆண்டிமுனை தமிழ் வித்தியாலயம், பத்துளுஓயா சிங்கள பாடசாலை மற்றும் தாராவில்லு முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளில் புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டிட நிர்மாணப் பணிகளுக்கான இரண்டாம் கட்ட நிதி வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (13) இடம்பெற்றன.
புத்தளம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆறு பாடசாலைகளில் தலா 38 இலட்சம் ரூபா செலவில் புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளன.
வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், பொதுஜன பெரமுன முன்னணியின் புத்தளம் மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கான அமைப்பாளருமான ஏ.எச்.எம்.றியாஸின் வேண்டுகோளுக்கிணங்க, கொழும்பு சயிதா பவுண்டேஷன் அமைப்பின் பணிப்பாளரும், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான நௌஸர் பௌசி குறித்த கட்டிடங்களுக்கான நிதியை ஒதுக்கியுள்ளார்.
இதன்படி, கடையமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி, ஆண்டிமுனை தமிழ் வித்தியாலயம், தாராவில்லு முஸ்லிம் வித்தியாலயம், பத்துளுஓயா சிங்கள பாடசாலை, மாரவில சிங்கள பாடசாலை மற்றும் ஆராச்சிகட்டுவ ஆகிய பாடசாலைகளுக்கு இவ்வாறு தலா 38 இலட்சம் பெறுமதியான கட்டிடம் வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கான முதற்கட்ட நிதியாக தலா 15 இலட்சம் வழங்கப்பட்டுள்ளன.
மேற்படி ஆறு பாடசாலைகளில் ஆண்டிமுனை தமிழ் வித்தியாலயம், பத்துளுஓயா சிங்கள பாடசாலை மற்றும் தாராவில்லு முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளுக்கு இரண்டாம் கட்ட நிதியாக தலா 13 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளன.
குறித்த இரண்டாம் கட்ட நிதி வழங்கும் நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம். றியாஸின் அழைப்பின் பேரில் சயிதா பவுண்டேஷன் அமைப்பின் பணிப்பாளரும், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான நௌஸர் பௌஸி பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த பெரேராவின் பாரியாரும், சட்டத்தரணியுமான சமரி பிரியங்கா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments