Breaking News

கற்பிட்டி உதைபந்தாட்ட தொடரின் செம்பியனானது யுனைட்டட் அணி

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கற்பிட்டி பேர்ல்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு அணிக்கு 07 பேர் கொண்ட கற்பிட்டி உதைபந்தாட்ட லீக்- 2024 தொடர் கடந்த 13 ம் 14 ம். திகதிகளில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.


கற்பிட்டி நகரில் உள்ள உதைபந்தாட்ட வீரர்கள் ஏலத்தின் அடிப்படையில் பேர்ல்ஸ் , யுனைட்டட் , ப்ளஸி கைஸ் , வெஸ்ட் ட்ரைகர்ஸ் , லேகர்ஸ் மற்றும் ஹைபர் வேல்ஸ் ஆகிய ஆறு அணிகளுக்கு  வீரர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.


இதன்படி இறுதிப் போட்டிக்கு கற்பிட்டி பேர்ல்ஸ் அணியும் யுனைட்டட் அணியும் தகுதி பெற்றது. மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் எவ்வித கோல்களையும் பெற்றுக் கொள்ளாமல் போட்டி சமநிலையில் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து நடப்பாண்டின் செம்பியனைத் தீர்மானிக்க பெனால்டி உதை இரு அணிகளுக்கும் வழங்கப்பட்டது. இதில் யுனைட்டட் அணியின் கோல் காப்பாளர் பர்ஹான் எதிரணியின் இரு கோல்களை தடுத்ததன் காரணமாக யுனைட்டட் அணி 6:5 என்ற பெனால்டி கோல்கள் அடிப்படையில் செம்பியன் கிண்ணத்தை வெற்றி கொண்டது.


செம்பியனான யுனைட்டட் அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் 50,000/- பணமும் இரண்டாம் இடம் பிடித்த பேர்ல்ஸ் அணிக்கு கிண்ணமும் 25,000/- பணமும் வழங்கப்பட்டது. அத்துடன் தொடரின் சிறந்த கோல் காப்பாளராக யுனைட்டட் அணியின் பர்ஹான், சிறந்த வீரராக ஹைபர் வேல்ஸ் அணியின் அஹதீர், சிறந்த இளம் வீரராக பேர்ல்ஸ் அணியின் ஹிசாம் ஆகியோர் தெரிவானார்கள் அத்துடன் இத்தொடரில் அதிக கோல்கள் அடித்து இவ்வாண்டின் தங்கக் காலணி விருதை பேர்ல்ஸ் அணியின் ஜாஹித் தன்வசப் படுத்தினார்.


அத்தோடு இத்தொடரில் பங்குபற்றுவதற்காக கத்தார் நாட்டில் இருந்து விடுமுறை பெற்று வந்து கடந்த 8:ம் திகதி மரணம் அடைந்த ஐயூப் நுஸ்கான் மற்றும் கடந்த 2022 ம் ஆண்டு நோன்புப் பெருநாள் தினத்தில் அகால மரணம் அடைந்த பேர்ல்ஸ் அணியின் வீரரும் முன்னாள் கற்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினருமான அக்மல் ஆகிய இருவரையும் கௌரவிக்கும் முகமாக நினைவுச் சீருடைகள் இருவரின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. மேலும் செம்பியன் கிண்ணத்தை பெற்றுக் கொண்ட யுனைட்டட் அணியின் உரிமையாளர் ஹம்தூன் நஜாத் மரணமான வீரர் ஐயூப் நுஸ்கான் சமர்ப்பணமாக அவரின் சகோதரர் ஐயூப் நுஸ்மிடம் கிண்ணத்தை கையளித்தமை குறிப்பிடத்தக்கது.






No comments

note