மு.கா.கட்சி ஊடாக சம்மாந்துறைக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற முயற்சிக்க வேண்டும் - மு.கா.பிரதி தேசிய அமைப்பாளர் எம்.எஸ். உதுமாலெப்பை
கே. எ. ஹமீட்
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஊடாக சம்மாந்துறைக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற இப்போதிருந்தே முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் - முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளர் எம்.எஸ். உதுமாலெப்பை
சம்மாந்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள 51 கிராம சேவகர் பிரிவுகளில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக் கிளைகள் புணரமைப்பு வேலைத்திட்டம் நிறைவு பெற்றதும் சம்மாந்துறைக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை முஸ்லிம் காங்கிரஸ் ஊடாகவே பெறுவதற்கான முயற்சிகளை இப்போதிருந்தே மேற்கொள்ள வேண்டும் என சம்மாந்துறை நகர வட்டாரத்தில் அமைந்துள்ள சம்மாந்துறை 05ம் கிராம சேவகர் பிரிவில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளைகள் புணரமைப்புக் கூட்டம் சம்மாந்துறை பிரதேச சபை முதன்மை வேட்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி சலீம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நீண்ட கால இடைவெளியின் பின் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக் கிளைகள் புணரமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிராம மட்டத்தில் நமது மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் மன நிலையை அறிய கூடிய வாய்ப்புக்கள் ஏற்படுவதுடன் நமது கட்சிப் பணியில் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கான செயற்பாடுகளையும் முன்னெடுக்க வாய்ப்புக்கள் ஏற்படுகிறது.
கட்சி கிளைகள் புணரமைப்பு பணிகளின் போது புதிய, இளைய தலைமைத்துவத்தை அடையாளம் கண்டு கட்சி செயற்பாடுகளில் ஈடுபடுத்தினால்தான் இன்னும் 20 வருடங்களுக்கு எமது கட்சி செயற்பாடுகளில் இளைஞர்களின் பங்களிப்பு கிடைக்கும் இதே போன்று மகளிர் மத்தியில் கட்சி தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்டுத்த வேண்டும். கட்சிக் கிளைகள் புணரமைப்பு வேலைத்திட்டம் நிறைவு பெற்ற பின் சம்மாந்துறை சமூகத்திடம் சினேகபூர்வமான பேச்சி வார்த்தையில் ஈடுபட்டு முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஊடாகவே ஏற்கனவே பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது என்பதையும் கருத்தில் கொண்டு எல்லோரின் ஒத்துழைப்புடனும் அம்பாறை மாவட்டத்தில் மூத்த பிரதேசமாகவும் கூடுதலான மக்கள் வாழும் சம்மாந்துறை பிரதேசத்துக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பெறுவதற்கான முயற்சிகளை இப்போதிருந்தே மேற்கொள்ள வேண்டும். மறைந்த பெருந்தலைவர் அஷ்ரப் அவர்கள் அன்று நம் மத்தியில் அரசியல் நோக்கத்திற்காக உருவாக்கப்படிருந்த பிரதேச வாத உணர்வை இல்லாமல் செய்து அம்பாறை மாவட்டம் முழுவதும் ஒரு பிரதேசமாக கருதி எம் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தினார் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர், பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர், மாவட்ட குழுவின் செயலாளரும்,முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சீ.சமால்டீன், அரசியல் அதிஉயர் பீட உறுப்பினர் அஸீஸ், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் நளீம் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
No comments