கற்பிட்டி விஞ்ஞான செயற்திட்டப் பிரிவின் விருது வழங்கும் இரவு விழா
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
கற்பிட்டி விஞ்ஞான செயற்த்திட்டப் பிரிவின் விருது வழங்கும் இரவு விழா இரண்டாவது முறையாகவும் கற்பிட்டி வன்னிமுந்தல் டிரீம் ஹவுஸ் முற்றவெளியில் கற்பிட்டி விஞ்ஞான செயற்த்திட்டப் பிரிவின் தலைவரும் கற்பிட்டி கோட்டக் கல்விக் காரியாலயத்தின் விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகருமான எம்.ஜீ.எம் ஹிசான் தலைமையில் நடைபெற்றது.
இவ் விருது வழங்கும் இரவு விழாவின் பிரதம அதிதிகளாக வெளி மாவட்டங்களில் இருந்து வந்து கற்பிட்டி மாணவர்களுக்கு கல்வி வழங்கி வரும் பௌதீகவியல் ஆசிரியர் எஸ். கனேஷன், மற்றும் ஏ.என் அப்ராஹ், உயிரியல் ஆசிரியர் ஏ.எம் நஜீப், இரசாயனவியல் ஆசிரியர் எம்.வசீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கற்பிட்டி பிரதேசத்தில் உயர்தர கணித மற்றும் விஞ்ஞான பிரிவுகளில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் முகமாக ஆரம்பிக்கப்பட்ட கற்பிட்டி விஞ்ஞான செயற்த்திட்டம்.(கே.எஸ்.பி) கற்பிட்டி பிரதேச மாணவர்களை கற்பிட்டியில் இருந்தே மருத்துவ துறை, பொறியியல் துறை மற்றும் இதர விஞ்ஞான பிரிவுகளில் உள்ள சகல துறைகளுக்கும் கற்பிட்டி மாணவர்களை அனுப்பி வைப்பதனை நோக்காக கொண்டு இச் செயற்த்திட்டம் கடந்த 2021 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இப்பிரிவில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கற்பிட்டியின் நலன் விரும்பிகளின் உதவியின் ஊடாக செயற்படுவதாக கற்பிட்டி விஞ்ஞான செயற்த்திட்டத்தின் தலைவரும் கற்பிட்டி கோட்டக் கல்வி காரியாலயத்தின் விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகருமான எம்.ஜீ.எம் ஹிசான் தனதுரையில் குறிப்பிட்டார்.
மேற்படி நிகழ்வில் 2024 ம் மற்றும் 2025 ம் ஆண்டு உயர்தர பரீட்சை எழுத உள்ள மாணவர்களுக்கு வெவ்வேறு பரீட்சைகள் நடாத்தப்பட்டு மாணவர்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட்டதுடன் மேலும் பல்கலைக்கழகங்களில் மருத்துவ மற்றும் பொறியியல் பீடங்களில் கல்வி பயிலும் மாணவர்களால் கற்பிட்டி விஞ்ஞான செயற்த்திட்ட மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்கள் நடாத்தப்பட்டு வருகின்றது. அந்த பல்கலைக்கழக மாணவர்களும் இவ் விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
No comments