Breaking News

விலகிச் செல்லும் பொழுது

நஸ்ரா நிஸாம்தீன்


வைர விழா நாயகனே!

வைகறை உதயம் நீர்!!

பலபேர் வாழ்வதனில்

கலங்கரை விளக்கு நீர்!

நான் ஆசிரியை 

பட்டதாரி பயிற்சி ஆளராய்

உம் பணியகம் 

நுழைந்த போது

ஒரு கைக்குழந்தை...

ஈராறு வருடங்கள்

ஆசிரியை மகளாய்

உம் நிழலில் வளர்ந்திருக்கின்றேன்..

அக்காலங்கள் 

இறை அருளே... 


கிராமத்து பெண்கள்

கிரகங்கள் தொடலாம்

என்று 

சிறகடிக்கும் போதெல்லாம்

இறகுகளுக்கு வலுவூட்டியவர் வரிசையில் 

உள்ளீர் நீர்! 


ஆசு நீங்கி

ஆசு நீக்கும்

ஆசிரியனாய்

அவனியில் பவனி வர

மன்னிப்பும் புன்னகையும்

பரிசாய் தந்தவர் நீர்! 


நூலகம் அதனை

தோளில் தந்து 

எனக்குளொரு நூலகம்

உருவாக்கியவர் நீர்!

புரிதல்களுடன்

பொறுப்புகள் பல

அள்ளித் தந்து

நிருவாகம் 

கற்றுத் தந்தவர் நீர்! 


தட்டுத் தடுமாறும் 

மாணவர்களுக்கு

என் கரம் நீளும் போதெல்லாம்

தட்டிக் கொடுத்து..

அன்பு பாராட்டி..

உற்சாகம் அளித்தவர் நீர்!

என்னில் துளிர்விட்ட

சிறு அறிவொளியை

தீபமாய் சுடர

ஆறாம் விரல் நீட்டியவர் நீர்! 


பட்டங்கள் மேலேறே

பணிவுகள் சென்னியில் வர

அடுத்தவர் முன் 

அணிகலனாக

பட்டை தீட்டியவர் நீர்! 


உங்களுக்கு தெரியுமா

உங்களை 'நீங்களாகவே'

எங்களில் 

துலங்கச் செய்த நினைவலைகள்... 


பணி செய்ய பிறந்தவர்கள்

நாங்களென்று சகோதர பாதையில்

துணை நின்றவர் நீர்! 


போலிகள் கண்டு 

பேதலிக்கும் போது

இறை திருப்தியை

இதயத்தில்

ஊட்டிய 'தாய்' நீர்! 


நேசம் கொண்டவன்

வேசம் கொள்கிறான்

பாசமாய் பழகியவன் 

பாதத்தின் கீழ்

முட்கள் விசுறுகிறான்

சூழ வாழ்பவன்

சூழ்ச்சி செய்ய 

துணை போகிறான்..

இதயம் நொந்த தருணங்கள்...

அப்போதெல்லாம் 

அங்கே

வாழ்வின் நிதர்சனம் 

புரியவைத்த ஆதாரம் நீர்! 


பிள்ளை வளர்ப்பினிலும்

குடும்ப வாழ்வினிலும்

கல்வி அடியெடுப்பிலும்

பதவி உயர்வினிலும்

ஆலோசனை கேட்டிடவே

வாசல் வரும் போதெல்லாம்

'எம் வீடு இதுவென்று'

உறவாய் கலந்து

செவிசாய்த்த அனுபவச்செம்மல் நீர்! 


நீங்கள் அதிபர்தான்..

ஆனால்....

தாய்மை என்னில் தாலாட்டிய போது

சேவையகம் சோதனை 

களமாக போராடிய கணங்கள்..

நீங்கள் தந்த

சலுகைகளும்

ஆறுதல்களும் 

தந்தையே உங்களை 

எப்படி மறக்க முடியும்?!

அகக்கண் ஆயிரம் நன்றிகள்...

  

உங்கள் முன்

சில பொழுது

இடித்துரைத்திருப்பேன்

சில வார்த்தைகள்..

அத்தனையும்

நீங்கள் கற்றுத் தந்தது தான்..

‘நாளைய’ நலவுக்காய்

உள்ளதை சொல்லிட

துணிவை சொல்லித் தந்தவர் நீர்!

மன்னிக்க வேண்டுகிறேன்...! 


அல்லாஹ் 

பொருந்திக் கொள்வான் 

அத்தனையும்..

இருமையிலும்

ஒளி வீசுவீர்

வைர ஒளியாய்..! 



2023.10.20

@5.30 a.m




No comments