ஆரிஹாமத்தின் மாமனிதர் அல் ஷெய்க் ஷாஹித் காஸிமி
ஆரிஹாமம் பிரதேசத்திலும் வடமேல் மாகாணத்தில் பல முஸ்லிம் கிராமங்களிலும் இஸ்லாமிய சமய எழுச்சிக்கு பாரிய பங்களிப்புச் செய்த மூத்த ஆலிம் மௌலவி ஐ.எல்.எம்.ஷாஹித் காஸிமி ஹழ்ரத் அவர்கள் 2023 ஜூன் 16 வெள்ளிக்கிழமை தனது 78வது வயதில் வபாத் ஆனார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அழகான அடுக்குமொழியில் சொற்பொழிவு நிகழ்த்தவும் அழகான குரலில் அல்குர்ஆன் கிராத் ஓதவும் ஸலவாத் ஓதவும் கஸீதா இசைக்கவும் திறமை பெற்ற ஹழ்ரத் அவர்கள் 1945 ஏப்ரல் 13ஆம் திகதி ஆரிஹாமத்தில் பிறந்தார்கள்.
பாவா லெப்பை இப்ரா லெப்பை அவர்களும் முஹம்மது இஸ்மாயில் கதீஜா உம்மா அவர்களும் இப்பெருந்தகையை பெற்றெடுத்த பெற்றோர்களாவர்.
ஆறாம் வகுப்பு வரை ஆரம்பக் கல்வியை யகம் வெல முஸ்லிம் வித்யாலயத்தில் பெற்ற ஹழ்ரத் அவர்கள் பின்பு சன்மார்க்க கல்வி கற்பதற்காக புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரியில் சேர்ந்தார்கள்.
1960 தொடக்கம் 1967 வரை அக்கல்லூரியில் அப்போதைய அதிபர் மர்ஹூம் ஏ.எம்.மஹ்மூத் ஆலீம் அவர்களிடமும் ஏனைய உஸ்தாத்மார்களிடமும் மார்க்க கல்வி கற்று தேர்ச்சி பெற்று ஆலிமாக வெளியேறிய ஹழ்ரத் அவர்கள் ஊரின் முதலாவது மௌலவி என்ற சிறப்பைப் பெற்றார்கள்.
1972 ஜனவரி 17ஆம் திகதி மௌலவி ஆசிரியர் நியமனம் பெற்று ஊரில் முதலாவது ஆசிரியர் என்ற சிறப்பையும் பெற்றார்கள்.
ஆசிரியர் நியமனம் பெற்ற ஹழ்ரத் அவர்கள் குளி/ எஹட்டுமுள்ள முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் முதன் முதலில் பணியாற்றினார். பின்பு எதுன்கஹகொடுவ முஸ்லிம் மத்திய கல்லூரி, சிலாபம் நஸ்ரியா கல்லூரி, சிலா/நாராவில் முஸ்லிம் வித்யாலயம் வல்பொதுவெவ முஸ்லிம் மகாவித்தியாலயம், நம்முவாவ முஸ்லிம் மகாவித்தியாலயம் ஒட்டுக்குளம் முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கடமையாற்றி விட்டு 1990 11.11 முதல் 1999.03. 26 வரை ஊர் பாடசாலையாகிய குளி/ யகம் பல முஸ்லிம் வித்யாலயத்தில் கடமை புரிந்த ஹழ்ரத் அவர்கள் பின்பு புத்தளம் சமீரகம பாடசாலையில் கடமையாற்றி விட்டு 2005. 4 .13 ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
ஆரிஹாமம் பெரிய பள்ளிவாசலில் நீண்ட காலம் இமாமாக கடமையாற்றிய ஹழ்ரத் அவர்கள் தனது குத்பா பேருரைகள் ரமலான் கால பயான்கள் மூலம் வழங்கிய போதனைகள் எமது ஊர் மற்றும் அயலூர் மக்கள் உள்ளத்தில் ஆழமாக பதிந்து சன்மார்க்க அறிவு வளம்பெற காரணமாகியது.
ஆரிஹாமம் முன்னாள் கதீப் முகம்மது ரஷீத் முஅல்லிம் அவர்களின் மருமகனாகிய ஹழ்ரத் அவர்கள் மௌலவி ரஷ்மி ஷாகித் அமீனி அவர்களின் அன்புத் தந்தையுமாவார்கள்.
அல்லாஹுத்தஆலா அன்னாரின் அனைத்து பாவங்களையும் மன்னித்து கல்வி, சமய, சமூக பணிகளை அங்கீகரித்து சுவனத்தை அருள்புரிவானாக ஆமீன்.
தகவல் அஷ் ஷெய்க் ஏ.எல்.அஷ்ரப்கான் மனாரி. ஆரிஹாமம்
திகதி :- 2023.06.16 வெள்ளிக்கிழமை.
ஹிஜ்ரி :- 1444.துல் கஃதா பிறை 27
No comments