நெருக்கடிகள் நீங்க இறைவனை பிரார்த்திப்போம்! - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் விடுத்துள்ள ஈதுல் அழ்ஹா வாழ்த்துச் செய்தி
சமூக, சமய, பொருளாதார, அரசியல் ரீதியிலான பல்வேறு விதமான நெருக்கடிகள் தோன்றியுள்ள இக் காலகட்டத்தில் அவற்றிலிருந்து விடுபடுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள ஈதுல் அழ்ஹா வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது ஹஜ் பெருநாள் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது ,
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் இறை தூதர்களான நபி இப்ராஹீம் (அலை) மற்றும் அவரது புதல்வர் நபி இஸ்மாயில் (அலை) ஆகியோரின் அளப்பரிய தியாகத்தை நினைவு கூரும் வகையில் உலகளாவிய முஸ்லிம்கள் ஆண்டுதோறும் புனித ஹஜ் யாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகெங்கிலும் யுத்தங்களாலும், அனர்த்தங்களாலும், பயங்கரமான நோய்களாலும் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ள சூழ்நிலையில், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் முஸ்லிம்களும் சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் மத்தியில் பெருநாட்களைச் சந்திக்க நேர்ந்திருப்பது கவலைக்குரியது.
அல் குர்ஆனையும், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களது வாழ்க்கை வழிமுறைகளையும் பின்பற்றியொழுகி, சன்மார்க்கக் கடமைகளை சிறப்பாக அனுசரிப்பதோடு, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் நிலவுவதற்கும், அதனூடாக நாட்டில் சமாதானம் ஏற்படுவதற்கும் அர்ப்பண சிந்தையோடு செயற்படுவதற்கு தியாகத் திருநாளில் உறுதி பூணுவோமாக.
அனைவருக்கும் ஈதுல் அழ்ஹா வாழ்த்துக்கள் - ஈத் முபாரக் !
No comments