முன்னாள் எம்.பி.சல்மானின் மறைவு நிரப்ப முடியாத இடைவெளி. - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அனுதாபம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியில் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்எச் எம் சல்மானின் இழப்பு நிரப்ப முடியாத இடைவெளியை தோற்றுவித்துள்ளதாக கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஆன்னாரது மறைவையிட்டு விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அனுதாப செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
எமது மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம் எச் எம். அஷ்ரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை தோற்றுவித்ததை தொடர்ந்து அவரது நம்பிக்கைக்குரியவராக பெரிதும் மதிக்கப்பட்ட எம்எச் எம். சல்மான், தலைவர் கல்முனையிலிருந்து, அன்றைய ஆபத்தான சூழ்நிலையில் கொழும்பிற்கு இடம்பெயர்ந்ததையடுத்து, சட்டத்துறையிலும், ஏனைய விடயங்களிலும் அவருக்கு பக்கபலமாக இருந்து வந்தார்.
அரசியல் மற்றும் சட்ட பிரச்சினைகளை தலைதூக்கிய போதெல்லாம் மறைந்த தலைவருக்கும், எனக்கும் அவ்வப்போது உரிய ஆலோசனைகளை அவர் வழங்கியதோடு, அவற்றுக்கு அவசியமான ஆவணங்களையும் தயாரித்தளித்து உதவினார்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 1989 ஆம் ஆண்டு முதல் முறையாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட முன்வந்த போது, கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிப்பதிலும் அவர் பெரும்பங்காற்றினார்.
1994 ஆம் ஆண்டு எமது மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அமைச்சராக இருக்கும்போது புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவராக சல்மான் நியமிக்கப்பட்டார்.
நான் அமைச்சுப் பதவிகளை வகித்த காலங்களிலும் வர்த்தக நியாய ஆணைக்குழுவின் தலைவராகவும், இலங்கை துறைமுக அதிகார சபை பிரதி தலைவர் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஆகியவற்றின்பிரதி தலைவராகவும், மற்றும் எனது அமைச்சுக்களின் சில பதவிகளிலும் அவரை நியமித்திருந்தேன்.
எந்தவொரு சிக்கலான விடயத்தையும் உடனடியாக கிரகித்துக் கொள்ளும் திறமையை இயல்பாக்கி பெற்றிருந்த அவர், சட்ட நுணுக்கங்களை விரல் நுனியில் வைத்திருந்தார்
வெளிநாடுகளில் நடைபெற்ற சமாதான பேச்சு வார்த்தைகளில் அரசாங்க தரப்பில் முஸ்லிம்களை பிரதிநிதிபடுத்தி நான் கலந்து கொண்ட போது, அவற்றில் சிலவற்றில் மறைந்த சட்டதரணி சல்மான் என்னோடு பங்குபற்றினார்
மறைந்த தலைவரின் காலத்திலும் பின்னரும் கட்சியைக் கருவறுக்க மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நாசகார நடவடிக்கைகளின் போது, சற்றேனும் தயக்கமின்றி சட்ட நடவடிக்கைகளை துணிச்சலுடன் முன்னெடுப்பதில் உந்துசக்தியாகச் செயற்பட்டார்.
குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகம் அமைந்துள்ள 'தாருஸ்ஸலாம்" கட்டிடத்தை நிர்வாகிப்பதற்கான அறங்காவலர்களாக தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் சிலரும், நண்பர்கள் சிலரும் ,கட்சியின் சார்பில் சிலரும் நியமிக்கப்பட்ட போது என்னையும் சட்டத்தரணி சல்மானையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் நியமிக்க மறைந்த தலைவர் நடவடிக்கை எடுத்தார்.
தாருஸலாம் சொத்துக்களை கையாட 'சதி'காரர்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை முறியடிப்பதற்கும், அந்த விவகாரத்தில் நிலவிய சட்டச் சிக்கல்களை சாதுரியமாகத் தீர்த்து வைப்பதற்கும் மறைந்த சட்டத்தரணி சல்மான் வழங்கிய ஒத்துழைப்பு மறக்க முடியாதது.
சகோதரர் சல்மான் தனது 65 ஆவது வயதில் இவ்வுலகை நீத்துள்ளார்.
அன்னாரின் மறைவினால் துயருற்றருக்கும் அவரது மனைவி புதல்விகள் மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா எனப்படும் சுவன பாக்கியம் கிடைப்பதற்கும் தனிப்பட்ட முறையில் கட்சியின் சார்பில் பிரார்த்திக்கின்றேன்.
No comments