Breaking News

கல்விப்பாரம்பரியத்தை பின்புலமாகக்கொண்ட ரவூப் ஹக்கீம்.

எம்.என்.எம்.யஸீர் அறபாத் -ஓட்டமாவடி.

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் விவகாரங்களில் சமகாலத்தில் பாராட்டுவதாக இருந்தாலும், விமர்சிப்பதாக இருந்தாலும் அதிகமாக உச்சரிக்கப்படும் நாமமாக ரவூப் ஹக்கீம் என்பதைப் பார்க்கிறோம். 


இந்த நாமத்திற்குச்சொந்தக்காரரான ரவூப் ஹக்கீமுடைய ஆளுமை விருத்தியில் பங்களிப்புச் செய்த காரணங்களை சற்று ஆராய்ந்து பார்ப்போம்.


முஸ்லிம் அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாகத் திகழும் ரவூப் ஹக்கீம், தன்னகத்தே பல ஆளுமைப் பண்புகளைக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. 


இவ்வாறான ஆளுமைப் பண்புகளை வளர்த்துக் கொள்வதில் ரவூப் ஹக்கீமுக்கு உறுதுணையாக அவரின் குடும்ப கல்விப்பாரம்பரியம் இருந்தைக் காண முடியும்.


ரவூப் ஹக்கீம் வசீகரமான தோற்றமுடையவர், புன்னகையோடு பலரோடும் பழகக்கூடியவர், சரளமாக மும்மொழிகளிலும் பேசக்கூடியவர்.


குறிப்பாக, இலங்கை திருநாட்டின் எப்பாகத்திலுள்ள மக்களின் பேச்சு வழக்கில் அந்த பிரதேசத்து மக்களைப் போல் மொழியை கையாளும் தன்மை கொண்டவர்.


குறித்த தன்மை இலங்கையில் மாத்திரமல்லாது, இந்தியாவின் தமிழ் நாட்டில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் அதிதியாகக் கலந்து கொண்டு அவர்களின் மொழியை அழகாக கையாண்டு பேசுவது அங்கிருக்கு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதையும், பல பிரபலங்கள் இவர் இலங்கையில் பிறந்தவரா? அல்லது இந்தியாவில் பிறந்தவரா? என வியந்து பேசியதையும் குறிப்பிடலாம். 


இவர் சர்வதேச ரீதியாக நன்கறியப்பட்ட ஒரு தலைவராவார்.


கவி இயற்றும் கவிஞன், கவி பாடும் வல்லவன். இந்த ஆளுமையை யாவரும் வியந்து பாராட்டுவதுமுண்டு. குறுகிய நேரத்திற்குள், வேலைப்பளுக்களுக்கு மத்தியிலும் பல கவிகளை இயற்றி பாராட்டுக்களைப் பெற்ற சம்பவங்களுமுண்டு. அழகு சுந்தர மொழியான தமிழை அழகாக கையாண்டு அழகு கவி இயற்றி, அந்தந்த பிராந்திய பேச்சு வழக்கு மொழியில் கவி பாடும் அழகு தனிச்சிறப்பாகும்.


அரசியல்வாதியாக அறியப்பட்ட ரவூப் ஹக்கீம் சிறந்த பேச்சாளர், எழுத்தாளரும் கூட. அதிக வாசிப்புப்பழக்கமுடையவராக ஆரம்பம் காலந்தொட்டு இன்றுவரை காணப்படுகிறார். இதன் காரணமாக தனது பேச்சுக்களில் புதுமையான தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்திப் பேசி பலரையும் சொல்லுக்கு அர்த்தம் தேடி அகராதி படிக்க வைத்தவர். எழுத்துத்துரையில் கவிதைகள் மாத்திரமின்றி, முஸ்லிம் சமூகம் தொடர்பில்  நூலொன்றையும் வெளியிட்டிருந்தார்.


சட்டத்தரணியாக நீண்டகாலம் பணி செய்வதற்கான வாய்ப்புகள் அரசியலுக்குள் பிரவேசித்ததால் கிடைக்காது போனாலும், அவர் திறமையான சட்டத்தரணி என்பதற்கு பல சான்றுகள் உண்டு.


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி. இலங்கை வங்கிக்கொள்ளை வழக்கில் வாதாடி தனது தரப்பிற்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தததையும் இங்கு நினைவுபடுத்துகிறேன். மேலும். அரசியலில் செயற்பாடுகள், வேலைப்பளுக்களுக்கு மத்தியில் சட்டக்கற்கையின் தனக்கிருந்த ஆர்வத்தினால் சட்டமுதுமானி கற்கையை கொழும்பு பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து சட்டமுதுமானியாக வெளிவந்திருக்கிறார்.


அரசியல் பிரவேசம் என்பது தனது ஆளுமைகளைக் கண்டு தன்னை அரசியலுக்குள் அழைத்த முஸ்லிம் காங்கிரஸின் இஸ்தாபக தலைவர் மர்ஹும் அஷ்ரஃப்போடு ஆரம்பமாகி, அன்னாரின் அகால மரணத்திற்குப் பின்னால் ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தை வழிநடாத்தும் பொறுப்பை முஸ்லிம் காங்கிரஸின் தலைமையைப் பொறுப்பேற்றுக்கொண்டார். 


அன்று தொடர்க்கம் இன்று வரை அரசியலில் ஒரு சமூகத்தின் தலைவனாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக, பாராளுமன்ற உறுப்பினராக, பொறுப்புள்ள அமைச்சுக்களின் அமைச்சராக பல்வேறு பாத்திரங்களை ஏற்று தன்னால் முடியுமான பங்களிப்புகளை நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் தான் சார்ந்த சமூகத்திற்கும் ஆற்றி வருகிறார்.


63வது அகவையில் காலடியெடுத்து வைக்கும் ரவூப் ஹக்கீமின் உயரிய பண்புகள், திறமைகள், ஆளுமைகளை ரவூப் ஹக்கீம் தானாக விருத்தி செய்து கொண்டாரா? அல்லது இவரின் குடும்ப பின்னணியின் தாக்கம் இவரை திறமையான, ஆளுமையுள்ளவராக மாற்றியதா? என்பதை சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.


ஹபுகஸ்தலாவை வசித்து வந்த "பத்று மாலை" எனும் பதூர் சஹாபாக்களை பற்றி பாடிய உதுமாலெப்பை ஆலிம் புலவர், இவர் அரபுமொழியிலே நல்ல பாண்டித்தியம் பெற்றவர். 


ரவூப் ஹக்கீம் அவர்களின் தாய் வழிப்பாட்டனார். இவர் ஒரு சன்மார்க்கப் போதகராக சமூக விடயங்களில் அதிக அக்கறையோடு செயற்பட்டவர். அதற்கான சான்றுகளுமுள்ளன. சுமார் 40 வருடங்கள் மஸ்ஜிதுன்நூர் பள்ளிவாயலில் எவ்வித ஊதியங்களும் பெறாது இமாமாக இருந்து தொழுவித்தும் கதீபாக இருந்தும் குத்பா ஓதியுள்ளார்.


இவரின் மகள் ஹாஜரா, ரவூப் ஹக்கீமின் தாயாராவார். இவர் சிறந்த வாசிப்புப் பழக்கமுடையவர். தன் கணவர் ரவூப் எழுதிக்கொடுக்கும் தாலாட்டுப் பாடல்களை மனனம் செய்து தன் பிள்ளைகளுக்கு தனது இனிமையான குரலில் பாடக்கூடியவர். பிறருக்கு உதவும் உள்ளமுடையவர். 


ரவூப் ஹக்கீமின் தந்தை வழிப்பாட்டனார் சிங்கள மொழிப்பாடசாலைகளில் படிப்பித்து முஸ்லிம் அதிபராக கடமை புரிந்த நூர் முஹம்மது ஆவார். இவர் கலகெதர என்ற ஊரில் பிறந்தவர். இப்பிரதேசத்தின் முஸ்லிம்களின் பூர்வீகம் என்று பார்க்கும் போது பவ விடயங்களை அறிய முடிந்தது.


அரேபிய வியாபாரிகளின் வருகையோடு தொடர்புபட்ட பூர்வீகம் காணப்படுகிறது. அம்முஸ்லிம் பூர்வீகத்தோடு தொடர்புடை குடும்பமாக ரவூப் ஹக்கீமுடைய பாட்டனார் நூர் முஹம்மதுவின் குடும்பமும் உள்ளது. 


சிங்கள அரசர்கள் ரவூப் ஹக்கீமின் பாட்டனாரின் குடும்பத்தைக் கௌரவிப்பதற்காக "நாகஹதெனிய கெதர" எனும் பட்டமளித்து கௌரவித்தனர். நூர் முஹம்மதை மக்கள் சிங்கள மொழிப்பண்டிதர் எனவும் அழைத்தார்கள். 


சிங்கள, தமிழ் ஆகிய இரு மொழியிலும் பாண்டித்தியமுடையவர். சிங்கள மொழியில் "சத்திய ஆகமகுமக்த" என்ற நூலையும் தமிழில் "இஸ்லாம் மார்க்க வினா விடை" என்ற நுலையும் வெளியிட்டார்.


சிங்கள பத்திரிகையில் இவர் "தானயன் உதும தானய துகீ தானய" (தானத்தில் உயர்ந்து பரம ஏழைகளுக்கு தானம் செய்வதே) என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை சிங்கள மக்கள் மத்தியில்  வரவேற்பைப் பெற்றிருந்தது. "சமுபகார வர்ணனாவ" (கூட்டுறவு வர்ணனை) என்ற கவிதை நூலையும் எழுதியுள்ளார்.


இவ்வாறான பல்வேறு திறமைகளையும் ஆளுமையையும் கொண்ட நூர் முஹம்மது அவர்களின் புதல்வர் தான் ரவூப் ஹக்கீமின் தந்தையார் ஆசிரியர் ரவூப் ஆவார். 


ஆசிரியராக, அதிபராக இருந்த போது சமூகப் பணிகளிலும் கல்விப்பணிகளிலும் அக்கறையோடு முடியுமானவரை பங்களிப்புச்செய்தவர். வாசிப்புப் பழக்கத்தில் அதிக ஆரவம் கொண்டவர். ஆங்கிலம், சிங்களம், தமிழிலும் அதிகமதிகம் வாசிப்பவராகக் காணப்பட்டார்.


ரவூப் ஹக்கீமின் திறமை, ஆளுமைகளுக்குப் பின்னால் இவ்வாறான விசாலமானதொரு பாரம்பரியமான கல்விப் பின்புலம் காணப்படுவதைப் பார்க்கலாம். பானையில்  இருப்பது தானே அகப்பையில் வரும் என்பார்கள். அதே போன்று தான் ரவூப் ஹக்கிமிடம் காணப்படும் வசீக தோற்றம், திறமை, ஆளுமை, சாணக்கியம் (கவிதை, பேச்சு, எழுத்து, மொழி ஆற்றல்) போன்றவைகள் அவரின் பரம்பரையூடாகப் பெற்று அதனை மேலும் மெருகூட்டிக் கொண்டதாகும்.


சன்மார்க்க, அறிவு ரீதியாக மேம்பட்ட இஸ்லாமிய பாரம்பரியத்தைக் கொண்டமைந்த குடும்பப் பின்னணியைக் கொண்டவராக ரவூப் ஹக்கீம் திகழ்கிறார்.




No comments

note