Breaking News

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த செய்திமடல் வெளியீடு

நூருல் ஹுதா உமர்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2021ஆம் ஆண்டிற்கான செய்தி மடல் (Newsletter) வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்ட மூன்றாவது செய்திமடல் இதுவாகும். செய்திமடலின் இணை ஆசிரியர் பேராசிரியர் ஏ.எம். முஷாதிக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். பல்கலைக்கழக நிருவாகக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற இந்நிகழ்வில், செய்திமடலின் இணை ஆசிரியர் பேராசியர் ஏ.எம். முஷாதிக் வரவேற்புரையினை நிகழ்த்தினார்.    


நிகழ்வில் பிரதம அதிதி உரையினை ஆற்றிய உபவேந்தர், செய்திமடலின் இணை ஆசிரியர்களான பேராசிரியர் ஏ.எம். முஷாதிக் மற்றும் பல்கலைக்கழக நூலகர் எம்.எம். ரிபாயித்தீன் ஆகியோர் உள்ளடங்கலான பதிப்பாசிரியர்கள் குழுவினருக்கு நன்றி கூறியதுடன், நாட்டின் பொருளாதார நிலையினைக் கருத்திற்கொண்டு மேற்படி செய்திமடல் இலத்திரனியல் வடிவில் வெளியிடப்படுவதாகக் குறிப்பிட்டார். பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிப் போக்கினை சமூகத்திற்குக் கொண்டு செல்வதற்கான ஒரு சிறந்த ஆவணமாக இச்செய்திமடல் அமையும் என்று தான் எதிர்பார்ப்பதாக உபவேந்தர் குறிப்பிட்டார். கடந்த காலத்தில் ஏற்பட்ட கொவிட் அசாதாரண சூழ்நிலை காரணமாக செய்திமடலினை உரிய காலத்திற்குள் வெளியிட முடியாமற் போனமையினையும் உபவேந்தர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.


செய்திமடல் வெளியீட்டு விழா நிகழ்வில் உபவேந்தருடன் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி, இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் பீடாதிபதி, செய்திமடலின் இணை ஆசிரியர்கள், பதிப்பாசிரியர்கள், பல்கலைக்கழக நிருவாகப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பதிவாளர், பதில் நிதியாளர், துறைத் தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இச்செய்திமடலினை பின்வரும் இணைப்பின் ஊடாக தரவிறக்கம் செய்யலாம் https://www.seu.ac.lk/newsletter/seunl2021/.








No comments

note