Breaking News

மறைந்த முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி அன்வர் இஸ்மாயிலின் 15 வது நினைவாண்டை முன்னிட்டு வெளியிடப்படும் சிறப்பு கட்டுரை எம்.பிக்கள் பலர் தோன்றியும், 15 ஆண்டுகள் கடந்தும் சம்மாந்துறையில் அன்வரின் இடத்தை நிரப்ப முடியவில்லை !

நூருல் ஹுதா உமர்

வெள்ளிக்கிழமை தினமது தலைநோன்பை நோற்க கடந்த 2007ஆம் ஆண்டின் இன்றைய நாள் போன்ற ஒருநாளில் மக்கள் எழுந்தபோதே அந்த சோகச்செய்தி பரவிக்கொண்டிருந்தது. மிகுந்த சோகத்துடன் விடிந்த சம்மாந்துறை மண் தனது மண்ணின் மகனை இழந்து நின்றது. எல்லோர் முகத்திலும் சோகம் பரவியிருந்தது. தலைவர் அஷ்ரபின் நினைவுநாள் நெருங்கி கொண்டிருந்த காலப்பகுதி அது. ஜனாஸா வைக்கப்பட்டிருந்த அப்துல் மஜீத் (சம்மாந்துறை நகர மண்டபம்) மண்டபத்தை கிழக்கு மக்கள் மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்த மக்களும், அரசியல் பிரமுகர்களும் நிரப்பியிருந்தனர்.


1956 இல் தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது நாடெங்கும் தமிழரசுக் கட்சியினால் பல்வேறு எதிர்ப்புப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் போராட்டங்களில் கலந்து கொண்ட போது தாக்குதலுக்கு இலக்கான இஸ்மாயில் என்ற வீரத்தந்தையின் மகன்தான் ஜனாஸாவாக அங்கு வைக்கப்பட்டிருந்த அன்வர் இஸ்மாயில். சிறிய வயதில் இருந்து சமூகப் பணிகளில் அக்கறை செலுத்தி அரசியல் மேடைகளில் பங்குபற்றி ஆர்வத்துடன் இயங்கியவர். இலங்கையில் இஸ்ரேலியத் தூதரகம் திறப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்ற போது அதற்கு எதிராக செயற்பட்டதனால் அரசினால் கைது செய்யப்பட்டவர்.1990களில் அஷ்ரப் பிரகடனப்படுத்திய 'கறுப்பு வெள்ளி' போராட்டதில் அன்வர் இஸ்மாயில் முக்கிய பங்கெடுத்தார். அரசியல் ரீதியாக பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்த அவர், இளைஞர்கள் மத்தியில் கவர்ச்சிகரமான பாத்திரமானார். இந்தக் கவர்ச்சி அவருக்கு மக்களின் பிரதிநிதியாக ஆகும் சந்தர்ப்பத்தினைக் கொடுத்தது. 2001இல் திகாமடுல்ல மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினராக அவர் தெரிவு செய்யப்பட்டார்.


2004 இல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசின் முக்கிய பங்காளராக அவர் மாறினார். அக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண உட்கட்டமைப்புப் பிரதி அமைச்சராகப் பதவியேற்ற அவர், பின்னர் தேசியப் பட்டியலில் நியமிக்கப்பட்டு நீர்ப்பாசன அமைச்சராகக் கடமையாற்றினார். இவற்றுக்குப் பின்னால் அவரது அரசியல் சாணக்கியம் அதிகம் நிறைந்திருந்தது. முக்கிய அரசியல் தலைவர்களுடன் அவருக்கு மிக நெருக்கமான பழக்கம் இருந்தது. அவர்களது அரசியல் சிந்தனைகளாலும் அவர் அதிகம் ஈர்க்கப்பட்டிருந்தார். அவர் நெருக்கமாகப் பழகிய நல்ல அரசியல் தலைவர்களாக ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, மங்கள சமரவீர ஆகியோரைக் குறிப்பிடலாம். சம்மாந்துறை பிரதேசமே அன்வர் இஸ்மாயிலின் கனவாக இருந்தது. அந்த ஊரின் எதிர்காலம் குறித்து அவர் மிகுந்த அக்கறைப்பட்டிருந்தார்.


அவர் மரணித்து பதினைந்து வருடங்கள் கடந்து விட்டன. இத்தனை காலத்துக்குள்ளும் எத்தனை குழந்தைகள் இந்த மண்ணில் பிறந்திருக்கும். ஆனால் அவரது காலத்துக்குப் பின்னர் இங்கு ஆரம்பப் பாடசாலைகள் கூட உருவாகவில்லை. பல பிரச்சினைகள் இங்கிருக்கின்றன. புதுப்புது பல ஆளுமைகள் உருவாகியிருக்கின்றனர். அவர்களுடன் பேசவும் பகிரவும் பல உள்ளன. சிந்திக்கவும் செயற்படவும் ஆளுமையுள்ள மக்கள் பிரதிநிதி அவர். அவர் ஆற்றியது போல ஆற்ற வேண்டிய கருமங்கள் பல உள்ளன. அவற்றை செய்வதற்கு நாம் தயாராக வேண்டும். இவற்றைத் தூரப்படுத்த முடியாது. அவரது மறைவை நினைவு கூரும் இக்காலகட்டத்தில் அவர் கனவுகளை நனவாக்க நாம் தயாராக வேண்டும் என இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மொழித்துறை தலைவராக இருக்கும் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா விண்ணப்பித்த விண்ணப்பம் இங்கு நினைவு கொள்ள வேண்டியது.


ஏழுமூளைகாரன் என வர்ணிக்கப்பட்ட மொட்டின் மூத்தவர்- ஸ்தாபகர் பசில் ராஜபக்ஸ நேரடி அரசியலுக்கு கால்வைக்க காரணமாக அமைந்தது இந்த மகனின் இழப்பினால் உருவான பாராளுமன்ற வெற்றிடமே. அதனாலையோ என்னவோ இவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக மக்கள் இன்றும் தெரிவிக்கின்றனர். இலங்கை அரசியல் வரலாற்றில் குறுகிய காலத்தில் தனக்கென தனியான தொரு இடம்பிடித்துக் கொண்ட ஒரு இளம் தலைவராக முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி மர்ஹூம் எம்.ஐ. அன்வர் இஸ்மாயில் திகழ்ந்தார். உலகை உலுக்கிய சுனாமி தினத்தன்று முதல் பல மாதங்கள் அம்பாறை மாவட்ட கரையோர மக்களுக்கு சோறு போட்ட சம்மாந்துறை மண்ணுக்கு அந்த காலப்பகுதியில் தலைமை கொடுத்த அன்வர் இஸ்மாயில் அந்த காலப்பகுதியில் முன்னெடுத்த வேலைதிட்டங்களும், அதிரடி முடிவுகளும் இன்றும் சிலாகித்து பேசப்படக்கூடியது.


தலைவர் அஷ்ரபின் தாயக பூமியில் பிறந்த அன்வர் இஸ்மாயில் தலைவருக்கு நெருக்கமான ஒருவராகவும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தொப்பி முகையதீன் என அறியப்பட்ட மர்ஹூம் யூ.எல்.எம்.முகைதீன் அவர்களின் பாசறையில் பயிற்சி பெற்று  அவர்களிடமிருந்து அரசியல் கற்று மக்கள் பிரதிநிதியானவர். மேற்கத்தைய அரசியல் வரம்புகளை உடைத்து வரம்புகட்டும்  விவசாயியும் சந்திக்குமளவுக்கு மக்களுடன் ஒன்றித்து வாழ்ந்தவர். 1967.07.16 ஆம் திகதி ஆசிரியரான எம்.எம். இஸ்மாயில், எம்.எம்.சுபைதா உம்மா தம்பதியருக்கு முதற்பிள்ளையாக சம்மாந்துறையில் பிறந்து 1972இல் சம்மாந்துறை தாறுல்உலூம் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்விையயும், 1977இல் உயர்கல்வியை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்திலும் பயின்று, கொழும்பு பல்கலைக்கழக சட்டபீடத்தில் கற்று 1993 இல் சட்டத்தரணியாக வெளியேறினார்.


கேட்பவர்களை மயக்கும் பேச்சாற்றல், தைரியமான நடவடிக்கைகள், செயற்பாடுகளினால் மக்களின் மனதினை ஆளுதல், கிடைக்கும் சந்தர்ப்பத்தினை சரிவரப் பயன்படுத்தல், அரசியல் தலைவர்களிடத்தில் சாதிக்கக் கூடிய நுட்பம், பரந்த அரசியல் அனுபவம், விரைவில் புரிந்து கொள்ளும் ஆற்றல், சரியான நேரத்தில் சரியான முடிவு, புன்சிரிப்பு போன்ற குணங்களினால் தனக்கென்று ஆதரவாளர்களை வசீகரித்தார். அஷ்ரஃபின் அரசியல் பணியில் பாரியதொரு பகுதியை தனது தலையில் சுமந்து கொண்டு சம்மாந்துறையின் உத்தியோகப்பற்றற்ற பாராளுமன்ற உறுப்பினராகவே அக்காலங்களில் அவர் செயற்பட்டார் என்கின்றனர் சம்மாந்துறை மக்கள்.


அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக உழைத்தமையினால் அந்த அரசாங்கத்தின் நீர்ப்பாசன அமைச்சராக நியமிக்கப்பட்ட அன்வர் இஸ்மாயில் பல நீர்ப்பாசனத் திட்டங்களை தொடக்கி வைத்தார். மர்ஹும் அஷ்ரஃபின் மறைவுக்குப் பின்னர் அவரின் கனவை நிறைவேற்றுவதில் முனைப்புடன் செயற்பட்டு தென்கிழக்குப் பல்கலைக்கழக அபிவிருத்தியில் கூடிய கவனம் செலுத்தினார். அரச அரச சார்பற்ற நிறுவனங்களினதும், வெளிநாட்டு தூதுவர்களினதும் ஒத்துழைப்பைப் பெற்று அர்ப்பணிப்புடன் உழைத்தார். 'மக்கள் மணிமனை' அமைத்து இரவு பகலாக மக்களுக்கு சேவை செய்தார். சம்மாந்துறையின் பௌதிக அபிவிருத்தியில் இவரின் பங்களிப்பு அளப்பரியதாகும் என அவரது சேவைகளை இன்றும் மக்கள் மகிழ்வுடன் நினைவு கூறுகின்றனர். தனது மக்களையும், மண்ணையும் மட்டுமின்றி இலங்கையையும் இலங்கை வாழ் முஸ்லிங்களையும் அதிகமாக நேசித்த அன்வர் இஸ்மாயில் யுத்த காலத்தில் இலங்கை முஸ்லிங்களின் பாதுகாப்புக்காக உயிரை பணயம் வைத்து பல்வேறு முயற்சிகளை செய்து தனது சமூக பற்றையும், வீரத்தையும் வெளிக்காட்டினார்.


40 ஆண்டுகள் வாழ்ந்த அன்வர் இஸ்மாயில் ஒரு சட்டத்தரணியாக, முஸ்லிம் சமூகத்தின் விடிவுக்காக போராடும் பாராளுமன்ற உறுப்பினராக, பிரதியமைச்சராக, அமைச்சராக குறுகிய காலம் பணியாற்றினார். சம்மாந்துறை வரலாற்றில் மட்டுமன்றி முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றிலும் அவர் மறக்க முடியாத ஆளுமை. அவர் மரணிக்கும் போது விட்டுச்சென்ற இடத்தில் சம்மாந்துறை துரித அபிவிருத்தி அப்படியே தரித்து நிற்கிறது. எம்.பிக்கள் பலர் சம்மாந்துறையில் இருந்து பாராளுமன்றுக்கு வந்தனர், சென்றனர். ஆனால் ஆன பலன் எதுவுமில்லை. நிரப்ப முடியா வெற்றிடத்தை அன்வர் இஸ்மாயிலின் இடம் உருவாக்கியுள்ளது மட்டுமின்றி மரணத்தின் சந்தேகமும் நீள்கிறது. ஆண்டுகள் 15 கடந்துவிட்டது.




No comments

note