கல்முனை பிராந்திய மீனவர்களின் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு
(சர்ஜுன் லாபீர்)
அம்பாறை மாவட்ட மீனவர்கள் தற்போதைய சூழ்நிலையில் எதிர்கொள்ளும் எரிபொருள் பிரச்சினை சம்மந்தமான கலந்துரையாடல் ஒன்று இன்று(15) கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
குறிப்பாக கல்முனை பிராந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் டீசல் மற்றும் மண்ணெண்ணை பிரச்சினை சம்மந்தமாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம் ஹரிஸிடம் அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திர படகு மீனவர் உரிமையாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் எம்.எச்.எம் நஸீரினால் எடுத்துரைக்கப்பட்டது.
இதற்கமைவாக கல்முனை,சாய்ந்தமருது ஆகிய பிரதேசத்தில் உள்ள குறிப்பிட்ட 05 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விசேடமாக வாரத்தில் 07 நாட்களும் டீசலினை வரவழைத்து அதனை மீனவர்களுக்கு மாத்திரம் முன்னுரிமைப்படுத்தி வழங்குவற்கு ஆலோசிக்கப்பட்டதுடன் இது சம்மந்தமாக பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடன் பேச்சுவார்த்தை நடாத்தி உடன் தீர்வு பெற்றுத் தருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் உறுதியளித்தார்.
இக் கலந்துரையாடலில் அம்பாறை மாவட்ட மீன்பிடித் திணைக்கள உதவிப் பணிப்பாளர் சிறிரஞ்சன்,பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் நெளபர் ஏ பாவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments