Breaking News

இறைச்சிக்கடைகள் இழுத்து மூடப்பட்டாலும் கட்டுப்பாட்டு விலையில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை; - முதல்வர் உறுதி; பொது மக்கள் ஒத்துழைத்தால் மாபியாவை ஒழிக்கலாம்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகராட்சி ஆள்புல எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மாட்டிறைச்சியின் விலை கட்டுக்கடங்காமல் செல்வதைக் கருத்தில் கொண்டு, மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலையிட்டு, மாட்டிறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்து, அதனை இறுக்கமாக அமுல்படுத்துவதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகளில் இருந்து அவர் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என முதல்வர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


அறிகையொன்றை வெளியிட்டு முதல்வர் ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. அதில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;


2022.08.06ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் அமுல்நடத்துவதற்கு மாட்டிறைச்சி வியாபாரிகள் இணக்கம் தெரிவித்திருந்தனர். ஆனாலும் குறித்த தினமான நேற்றும் இன்றும் அவர்கள் மாடறுத்து- இறைச்சிக் கடைகளை திறக்காமல், வியாபாரத்தை நிறுத்தியுள்ளனர். இன்னும் சில நாட்களுக்கு இந்நிலை தொடரலாம்.


உண்மையில், நிர்ணய விலைக்கு இறைச்சியை விற்காமல், தமது தீர்மானத்தை மீறும் இறைச்சிக் கடைகளை இழுத்து மூடுவதற்கு முதல்வர் தயாராக இருந்தார். அதற்காக நேற்று 06ஆம் திகதி சனிக்கிழமையன்று காலை வேளையில் பொலிஸ் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் சகிதம் முதல்வர் கள விஜயம் மேற்கொண்டு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏற்பாடாகியிருந்தது. ஆனால் வியாபாரம் நடத்தாமல் கடைகளை அவர்களாகவே மூடியிருந்தமை முதல் வெற்றியாகும்.


பொதுமக்கள் பொறுமையுடன் ஒத்துழைப்பு வழங்கினால் அவர்களை வழிக்குக் கொண்டு வந்து விடலாம்.


* 01 கிலோ கிராம் மாட்டிறைச்சி 1600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும். அதில் ஆகக்கூடியது 200 கிராம் மாத்திரமே எலும்பு அடங்கியிருத்தல் வேண்டும்.


* தனி இறைச்சியாயின் 01 கிலோ கிராம்- 1800 ரூபாவுக்கே விற்கப்பட வேண்டும்.


* அனைத்து இறைச்சிக் கடைகளிலும் டிஜிட்டல் தராசு பயன்படுத்தப்பட வேண்டும்.


மாநகர சபைகள் கட்டளைச் சட்டம் பிரிவு 272 (8)(gg) இன் பிரகாரம் மாநகர முதல்வருக்கு உரித்தான அதிகாரத்தின் கீழ் இத்தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.


பொது மக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட இத்தீர்மானங்களில் எவ்வித விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை. இதனை அமுல்படுத்துகின்ற விடயத்தில் மாநகர முதல்வர் மிகவும் உறுதியுடன் இறுக்கமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார் என்பதை பொது மக்களுக்கு அறியத்தருகின்றோம்.


அக்கரைப்பற்று மாநகர சபை எல்லையினுள் இவ்விலைகளிலேயே மாட்டிறைச்சி விற்கப்படுவதை அப்பகுதி வியாபாரிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.


அதேவேளை அட்டாளைச்சேனையில் இவ்விலையை நடைமுறைப்படுத்த அங்குள்ள மாட்டிறைச்சி வியாபாரிகள் தவறியமையால், அப்பிரதேச சபை சபைத் தவிசாளரினால் அப்பகுதி விலங்கறுமனை இழுத்து மூடப்பட்டிருக்கிறது.


நாட்டின் அசாதாரண சூழ்நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, கல்முனை மாநகர பிரதேசங்களில் ஒரு கிலோ கிராம் மாட்டிறைச்சி 2200 ரூபாவுக்கு மேல் விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைக் கவனத்தில் கொண்டே மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள், கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்திருந்தார்.


இவ்விடயம் தொடர்பாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மாட்டிறைச்சி விற்பனையாளர்கள், கடந்த 03ஆம் திகதி புதன்கிழமையன்று மாநகர சபைக்கு அழைக்கப்பட்டு, இறைச்சி வியாபாரத்தின்போது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் செலவீனங்கள் குறித்து கேட்டறியப்பட்டு, அவற்றுக்குரிய தீர்வுகள் முதல்வரினால் முன்மொழியப்பட்ட நிலையில், அவர்களது இணக்கத்துடனேயே மேற்படி தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.


இத்தீர்மானங்களை மீறும் மாட்டிறைச்சி வியாபாரிகள் மீது மாநகர சபைகள் கட்டளைச் சட்டம் பிரிவு 272 (8) (c),(d) இன் கீழ் குறித்த மாட்டிறைச்சிக் கடைகள் உடனடியாக இழுத்து மூடப்படும் எனவும் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் மாட்டிறைச்சிக் கடைக்கான வியாபார உரிமம் இரத்துச் செய்யப்படும் எனவும் முதல்வரினால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.


மாட்டிறைச்சி வியாபாரிகளுடனான குறித்த கலந்துரையாடலில், அவர்களினால் தெரிவிக்கப்பட்ட செலவீனங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் ஆராய்ந்தபோது, அவை மிகைப்படுத்தப்பட்டவை என தெரிய வந்துள்ளது. குறிப்பாக மாடு விற்பவர்கள், தங்களுக்கு ஒரு கிலோ கிராம் இறைச்சியை எலும்புடன் சேர்த்து 1700 ரூபாவுக்கே தருகிறார்கள் என இறைச்சிக்கடை வியாபாரிகள் கூறியிருந்தனர். இவ்விலையைக் குறைத்துத் தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதியளித்ததன் பிரகாரம் வெள்ளிக்கிழமை (05) மாடு வியாபாரிகள், மாநகர சபைக்கு அழைக்கப்பட்டு, கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.


இதன்போது, தாம் மாட்டிறைச்சிக் கடைக்காரர்களுக்கு கிலோவொன்று 1500 ரூபாப்படியே விற்பதாகவும் அத்தொகைக்கு மேல் அவர்கள் வாங்க மாட்டார்கள் எனவும் ஒவ்வொரு மாட்டிலும் 04 சந்துகள் மாத்திரமே நிறுக்கப்பட்டு, மாட்டுக்கான தொகை தீர்மானிக்கப்படுவதாகவும் ஈரல், குடல் மற்றும் இதர பகுதிகள் யாவும் இறைச்சிக் கடைக்காரர்களுக்கு இலவசமாகவே கிடைக்கின்றன எனவும் மாடு வியாபாரிகள் சுட்டிக்காட்டியிருந்தனர். இவற்றின் மூலம் இறைச்சி வியாபாரிகளுக்கு 10,000 ரூபா முதல் 15,000 ரூபா வரை மேலதிக வருமானம் கிடைக்கிறது எனத் தெரிய வந்துள்ளது.


அதேவேளை, முதல்வரின் வேண்டுகோளின் பேரில் இனிவரும் காலங்களில் கிலோவொன்றுக்கு 1400 ரூபாப்படி மாடுகளை விற்பதற்கு மாடு வியாபாரிகள் சிலர் இச்சந்திப்பின்போது இணக்கம் தெரிவித்திருந்தனர்.


மேலும், மாடுகளை அறுவைக்காக கொண்டு வருவதற்கு எரிபொருள் செலவு தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்பதும் மாடுகள் கால்நடைகளாகவே கொண்டு வரப்படுகின்றன என்பதும் சுட்டிக்காட்டபட்டுள்ளது.


ஆக, உண்மைகள் மறைக்கப்பட்டு, செலவீனங்கள் அதிகமாகக் காட்டப்பட்டே மாட்டிறைச்சி வியாபாரத்தில் கொள்ளை இலாபம் அடிக்கப்படுகின்றமை நிரூபிக்கப்பட்டுள்ளதால், இந்த மாபியாவை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என்றும் இந்த விடயத்தில் எத்தகைய விமர்சனங்கள், சவால்கள் வந்தாலும் அவற்றை முறியடித்து ,மக்களுக்கு நியாய விலையில் மாட்டிறைச்சி கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கு மாநகர முதல்வர் அதீத பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றார்.


இந்த விடயம் சம்மந்தமாக கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளுடனும் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஏனைய சில உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களுடனும் முதல்வர் பேசியிருப்பதுடன் அவர்களது ஒத்துழைப்பும் கிடைக்கப் பெற்றுள்ளது.


ஆகையினால், தீர்மானிக்கப்பட்ட விலைகளுக்கு இறைச்சி விற்பதற்கு வியாபாரிகள் முன்வராத வரை மாட்டிறைச்சிக் கடைகளை திறப்பதற்கோ வேறு வழிகளில் மாட்டிறைச்சி விற்பதற்கோ அனுமதி வழங்கப்பட மாட்டாது. இதனால் இன்னும் சில தினங்களுக்கு நுகர்வோருக்கு இறைச்சி கிடைக்காமல் போகலாம். இது விடயத்தில் சகிப்புத்தன்மையுடன் பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் இந்த மாபியாவை முறியடிக்கும் சவாலை ஒன்றிணைந்து வெற்றி கொள்வோம்.


அஸ்லம் எஸ்.மெளலானா

முதல்வர் ஊடகப் பிரிவு




No comments

note