விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு
பாறுக் ஷிஹான்
விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் இன்று(31) காலை இடம்பெற்ற விபத்தில் குறித்த பல்கலைக்கழக மாணவி உயிரிழந்திருந்தார்.
பல்கலைக்கழக மாணவி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது வாகனமொன்றுடன் மோதுண்டு ஸ்தலத்தில் மரணமடைந்திருந்ததுடன் சம்பவ இடத்தில் காயமடைந்த பல்கலைக்கழக மாணவியின் கணவர் தற்போது நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ்விபத்தில் உயிரிழந்த நிலையில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2 ஆம் வருட மாணவியான காத்தான்குடி 5ஆம் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய அக்பர் அலி பாத்திமா அஸ்பா என்பவராவார்.மேலும் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் - ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணை மேற்கொண்டார்.
பின்னர் சடலமாக நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவியின் சடலத்தை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் - ஜவாஹிர் கட்டளையிட்டார்.
மேலும் குறித்த விபத்தில் பல்கலைக்கழக மாணவியின் தலைப்பகுதியில் ஏற்பட்ட பாரிய காயம் காரணமாக அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டிருந்த நிலையில் இம்மரணம் சம்பவித்துள்ளது என பிரேத பரிசோதனையில' குறிப்பிடப்பட்டு பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
No comments