Breaking News

அரசியல் ஆதாயங்களை தேடாமல் சகலரும் ஒருமித்த எண்ணத்தில் பயணித்தால் மட்டுமே நாட்டை மீட்கலாம் : ஸ்ரீ.ல.ஜ.கட்சி வலியுறுத்துகிறது.

நூருல் ஹுதா உமர்

பிழையான அரசியல் முன்னெடுப்பொன்றினால் மிகப்பெரும் பொருளாதார சவாலை எதிர்நோக்கிவரும் எமது நாட்டை மீட்டெடுக்க அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களின் கட்சி சார்ந்த மற்றும் தனிப்பட்ட அரசியல் லாபங்களை கருத்தில் கொண்டு அரசியல் செய்வதை கைவிட்டு நாட்டை ஒன்றிணைந்து கட்டியெழுப்ப முன்வர வேண்டும் என்று ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் தலைவர் கலாநிதி அன்வர் எம் முஸ்தபா கேட்டுக் கொண்டார்.


காத்தான்குடியில் இன்று (22) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், இன்று எமது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஒன்றாகவே பார்க்க முடிகின்றது.  இந்த நிலையில் இருந்து நாட்டை மீட்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சரியான பாதையில் பயணிக்கும் சந்தர்ப்பங்களில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத அரசியல் கட்சிகளும் ஒருமித்து ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், தற்போதுள்ள சவால்களை வெற்றிகொள்ள இப்போது ஒற்றுமையான விட்டுக்கொடுப்பு நிறைந்த அரசியல் கலாச்சாரத்தினால் தான் முடியுமென உறுதியாக தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.


ஜனாதிபதி ரணில் நாட்டை சரியான வழியில் கொண்டுசெல்லும் சந்தர்ப்பத்தில் நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும், உறுப்பினர்களும் சுய அரசியல் இலாபங்களை மறந்து எவ்வித அரசியல் பாரபட்சங்களுமின்றி நாட்டின் நலனை கருத்தில் கொண்டு எமது நாடு இன்றுள்ள நிலையில் மக்கள் படும் கஷ்டங்களை கவனத்தில் கொண்டு மக்களுக்கான அரசியலை ஒற்றுமையுடன் "பல்கட்சி" அரசொன்றை அமைத்து அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தி வெளிநாட்டு முதலீடுகளையும், சர்வதேச நாணய நிதிய உதவிகளையும் பெற்று நாட்டை மீட்டெடுக்க முன்வரவேண்டும்.


நாடு கடலில் சிக்கிய படகுபோன்று திசைதெரியாமல் நடுக்கடலில் தத்தளிக்கும் நிலையில் இப்போது உள்ளது. இந்நேரம் அரசியல் செய்து கட்சியை பாதுகாப்பது குறித்தோ அல்லது வாக்கு வங்கி குறித்தோ எமது பிரதிநிதிகள் சிந்தித்து செயற்படக் கூடாது என்றும் நாளைய தலைமுறைக்கு சகல வளமுமிக்க எமது நாட்டை எப்படி ஒழுங்காக கையளிப்பது என்பது பற்றி சிந்தித்து செயற்பட வேண்டும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் சகல பேதங்களும் துறந்து எமது தனிப்பட்ட விரும்புவெறுப்புகளுக்கு அப்பால் சென்று இலங்கையர்களாக செயற்பட அனைவரும் முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.




No comments

note