பொருளாதார நெருக்கடி நீங்கப் பிரார்த்திப்போம்; கல்முனை முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்களின் பெருநாள் வாழ்த்து
(அஸ்லம் எஸ்.மௌலானா)
வரலாற்றில் என்றுமில்லாதவாறு எமது நாடும் மக்களும் எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெற்று, இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு இப்புனிதத் திருநாளில் பிரார்த்திப்போம் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;
"நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் வீழ்ந்திருக்கின்ற சூழ்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, உணவு நெருக்கடி, செலவுகளை ஈடுசெய்யப் போதுமான வருமானமின்மை போன்ற காரணங்களினால் மக்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். பெரும்பாலான மக்கள் வாழ்வாதாரத்திற்காக திண்டாடி வருகின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை என்றுமில்லாதவாறு நிலைகுலைந்து போயிருக்கிறது. நாட்டில் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன.
இவ்வாறு மிகவும் இக்கட்டான சூழ்நிலையிலேயே இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுகின்றோம். எம்மில் பெரும்பாலான மக்கள் சந்தோசமாக பெருநாளைக் கொண்டாட முடியாத கையறு நிலைமையில் இருப்பதை அறிவோம். இவ்வேளையில் அவ்வாறானவர்களுக்கு உள்ளதைக் கொண்டு உதவ நேசக்கரம் நீட்டுவோம்.
ஹஜ் என்பது தியாகம், சகிப்புத்தன்மை, சமத்துவம், சகவாழ்வு, பிறருக்கு உதவுதல் போன்றவற்றை எமக்கு கற்றுத்தருகின்ற ஒரு மேன்மைமிகு வணக்கமாகும். மேலும், இறைவனின் அன்பையும் நெருக்கத்தையும் அடைந்து, பாவ மீட்சியை பெற்றுத்தருகின்ற ஓர் உன்னத வணக்கமுமாகும். இன்று நாம் எதிர்நோக்கியிருக்கின்ற பிரச்சினைகள், நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கான ஒரே வழி இறைவனின்பால் மீள்வதாகும். அதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பமே ஹஜ் பெருநாளை எமது இஸ்லாமிய மார்க்கம் காட்டித்தந்த வரையறைகளுக்குள் நின்று கொண்டாடுவதும் அதையொட்டி எமது வாழ்வொழுங்கை சீரமைத்துக் கொள்வதுமாகும் என்பதை இப்புனிதத் திருநாளில் வலியுறுத்துகிறேன்.
ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகின்ற அனைத்து இஸ்லாமிய நெஞ்சங்களுக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். ஈத்முபாரக்.
No comments