கல்முனை மாநகரத்தில் குப்பைகள் அகற்றப்படாமல் இருக்க காரணம் என்ன என்பதை அறிவித்தார் மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி அர்ஷத் காரியப்பர்.
நூருல் ஹுதா உமர்
கல்முனை மாநகர பிரதேசங்களில் உள்ள வீதிகள், பொது இடங்கள் அரச, தனியார் நிறுவனங்களுக்கு அருகில் என பல்வேறு இடங்களில் கல்முனை மாநகர சபையின் வினைத்திறனற்ற செயற்பாடுகளின் காரணமாக பொதுமக்களினால் திண்மக்கழிவுகள் எவ்வித ஒழுங்குகளுமின்றி கொட்டப்பட்டு வருகின்றது. இதனால் பாரிய சுகாதார சீர்கேடுகள் இடம்பெற்றுவருவதை பொது அமைப்புக்களும், ஊடகங்களும், சுகாதாரத்தரப்பினரும் கல்முனை மாநகர சபைக்கு எடுத்துரைத்தும் போதியளவிலான சேவைகள் இடம்பெறவில்லை.
இது தொடர்பில் கல்முனை மாநகர சபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷத் காரியப்பர் தன்னுடைய சமூக வலைத்தளத்தினூடாக விளக்கமளித்துள்ளார். அவர் தனது விளக்கத்தில் ஊழல், இலஞ்சம், செயற்திறமை இன்மை, எல்லா விடயங்களிலும் சுயலாபங்களுக்கு முன்னுரிமை அளித்தல், வேலைகளில் தொடர்ச்சியற்ற தன்மை, குறுக்கு வழியில் சென்று சீராக செல்லும் பணிகளை முடக்குதல், பிரதேச வாதம், இன வாதம் போன்ற பல குப்பைகளினால் கல்முனை மாநகரம் நிரம்பி வழிவதனால் பௌதீக ரீதியான குப்பைகளை அகற்றுவத்தில் பாரிய சிரமங்கள் காணப்படுகின்றது என்று தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் மேலும், அண்மைய காலங்களில் ஏற்பட்டுள்ள குப்பை பிரச்சினைகள் குறித்து பொறுப்பு கூறவேண்டிய உயர் அதிகாரிகள் நிச்சயமாக இதற்கு பொறுப்பு கூற வேண்டும். கடந்த காலங்களில் என்னுடைய வகிபாகங்கள் எனது கடமையின் பால் மனசாட்சியுடனும், ஈமானுடன் சமூக நலனில் அக்கறை கொண்டு என்னால் முடிந்தவரை செய்து வந்தேன். இதற்கு எதிராக அதிகார வர்க்கத்தினால் பாரிய தடங்கல்கள் மற்றும் எதிர்வினைகளை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதை எல்லாம் வல்ல இறைவனின் உதவியுடன் முறியடித்தேன். அத்துடன் ஒரு சில முக்கிய அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், நண்பர்கள், பொதுமக்கள் என்னுடன் இணைந்து நியாயத்தின் பால் நின்று அநியாயத்தை எதிர்த்தனர் என்பதில் மாற்று கருத்து இல்லை.
தற்போது கல்முனை மாநகர சபையில் திண்மக்கழிவகற்றல் நடவடிக்கைகள், அது தொடர்பான வாகனங்கள் ஆணையாளரிடமே உள்ளன. இது சம்பந்தமான விடயங்களுக்கு பொறுப்பு ஏற்க வேண்டியவர் அவரே. மேலதிக விடயங்களை அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஆனால் திண்மக்கழிவகற்றலில் ஏற்பட்ட தடங்கலுக்கு காரணமாக கூறப்படும் "டீசல் இல்லை" எனும் வாதம் ஏற்றுக் கொள்ள கூடிய காரணமல்ல என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments