போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்படுகிறது : நாளை ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்லவும்
நூருள் ஹுதா உமர்
அம்பாறை மாவட்ட ஆசிரியர்களின் கோரிக்கைக்கிணங்க எரிபொருள் பெற்றுக் கொள்ளல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட பாடசாலை பகிஷ்கரிப்பினைத் தற்காலிகமாகக் கைவிடுவதாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது
தங்களது உரிமையின் நிமித்தம் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய ஆசிரியர்களுக்கு சங்கம் தமது நன்றியினைத் தெரிவித்துள்ளது
பாடசாலை பகிஷ்கரிப்புத் தொடர்பான எமது அறிவிப்பினைத் தொடர்ந்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் ஆளுநர் நடத்திய கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு எரிபொருள்களை வழங்குவதற்கு வழிசெய்வதுடன் பாடசாலை நாட்களை மூன்றாகக் குறைப்பதெனவும் அறிவித்துள்ளார். இதனை வலயக் கல்விப்பணிப்பாளர்கள் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளனர். வலயக் கல்விப் பணிமனை உயர் அதிகாரிகளும் இதற்கான உறுதி மொழிகளை எழுத்து மூலம் வழங்கியுள்ளனர்.
இவ்வாறான சாதகமான சூழ்நிலையொன்று ஏற்படும் போது பகிஷ்கரிப்பினைக் கைவிடுவதன் அவசியத்தை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மட்டத்திலும் கோரிக்கை விடுக்கப்பட்டதன் நிமித்தம் நாளை (1) முதல் பாடசாலைக்குச் செல்வதற்கான அழைப்பினை விடுப்பதென சங்கத்தின் உயர்பீடம் தீர்மானித்துள்ளது
போராட்டங்கள் என்பது யாரையும் எதிர்ப்படுத்துவதல்ல. எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான கதவுகளைத் திறக்க வைப்பதே. அவ்வகையில் ஆசிரியர்களது பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளின் காதுகளை எட்டச் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் நமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
இவ்விடயம் தொடர்பில் ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டு வந்த மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் அம்பாறை மாவட்ட கல்வி வலயங்களின் பணிப்பாளர்களுக்கும் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவ் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments