Breaking News

நோயாளர்களின் அவசர தேவைகளுக்காக சமூக அமைப்புக்களுடன் இணைந்து பொறிமுறையொன்றை உருவாக்கியுள்ளோம் : பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் றிபாஸ்.

நூருல் ஹுதா உமர் 

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்து சிக்கல்கள் இருப்பதனால் சுகாதாரத்துறையினரை வாரத்தில் மூன்று நாட்கள் பணிக்கு அழைப்பது, கடமை நேரத்தில் தளர்வுகளை ஏற்படுத்துவது, தூரத்திலிருந்து பணிக்கு வரும் பணியாளர்களை அவர்களுக்கு இலகுவாக சென்றடைய கூடிய இடங்களுக்கு கடமைக்கு சமூகமளிக்க வாய்ப்புக்களை ஏற்படுத்துவது போன்ற நிறைய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். எங்களின் அலுவலகத்தில் கொரோனா காலத்தில் இருந்தது போல சுழற்சி முறையையும் அமுல்படுத்தி இரு வாரங்களில் ஐந்து நாட்களுக்கு மட்டும் கடமைக்கு சமூகமளிக்கும் முறைமையை அறிமுகம் செய்துள்ளோம். இருந்தாலும் நிலைய தலைவர்கள், நான் உட்பட நிறைவேற்று உத்தியோகத்தர்களை எல்லா நாளும் பணிக்கு அழைக்கும் நடைமுறையை ஏற்படுத்தி உள்ளோம் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தெரிவித்தார். 


சமகால பொருளாதார நெருக்கடியில் எரிபொருள் பெறுதல் மற்றும் போக்குவரத்து சிக்கல்கள் தொடர்பில் சுகாதாரத்துறையின் விசேட ஏற்பாடுகள் பற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் இங்கு கருத்து வெளியிட்ட அவர், வைத்தியசாலைகளிலும் பணியாளர்களின் இடங்களுக்கு அண்மைய வைத்தியசாலைகளில் பணியாற்ற வாய்ப்புக்களை ஏற்படுத்துவதுடன், சுகாதாரத்துறை 24 மணிநேரமும் பணியாற்ற வேண்டிய துறை. ஒவ்வொரு ஊர்களிலுமுள்ள மதஸ்தலங்கள், ஆட்டோ சங்கங்கள், பொது அமைப்புக்களின் உதவியுடன் கற்பிணி தாய்மார்கள், அவசர நோயாளர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துவரும் நடவடிக்கை தொடர்பில் வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளோம். நோயாளிகளின் கையில் வழங்கப்பட்டுள்ள நோய் நிர்ணய அட்டையில் அவசர அழைப்புக்களுக்கான இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதி அவசர தேவைகளுக்கு மட்டும் குறித்த சிறிய தூரங்களுக்கு வைத்தியசாலை அம்புலன்ஸ் வண்டியை வீட்டுக்கு அனுப்பி நோயாளர்களை வைத்தியசாலைக்கு அழைத்துவருவது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்க உள்ளோம். 


மக்கள் எப்போதும் சுகாதாரத்துறைக்கு மரியாதை கொடுத்து வந்திருக்கிறார்கள். இப்போது எரிபொருள் வரிசையில் பல மணிநேரங்களாக காத்திருந்த விரக்தியில் யாரை கண்டாலும் எரிந்து விழும் நிலையில் மக்கள் இருக்கிறார்கள். சுகாதாரத்துறைக்கு மட்டுமல்ல இந்த பிரச்சினை சட்டத்துறை, காவல்துறை, கல்வித்துறை என எல்லா துறையினருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இந்த பிரச்சினை இருக்கிறது. அத்தியவசிய மற்றும் முன்னிலை சேவை வழங்கும் பணியாளர்களுக்கு ஒரு பொறிமுறையின் கீழ் அரசாங்கம் எரிபொருள் வழங்க நினைத்தாலும் கெடுபிடிகள் காரணமாக அது எரிபொருள் நிரப்பு நிலையங்களினால் வழங்க முடியாத நிலையே இப்போது காணப்படுகிறது. 


எரிபொருள் தட்டுப்பாட்டு அறிவிப்புக்கள் காரணமாக எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நிறைய எரிபொருள் இப்போது மக்களிடம் சேமிப்பில் இருக்கிறது. எரிபொருள் நிரப்பு நிலையங்களினால் மக்களுக்கு எவ்வளவு எரிபொருளை கொள்வனவு செய்து வழங்கினாலும் போதாத நிலையே இருக்கிறது என்றார்.




No comments

note