Breaking News

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை கௌரவ தலைவர் அஷ்ஷேய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி) அவர்களின் பெருநாள் வாத்துச் செய்தி

بسم الله الرحمن الرحيم


عيد مبارك.

تقبل الله منا ومنكم..


வல்ல அல்லாஹ் நம் அனைவரினதும் ரமழானிய அறச் செயல்களை ஏற்று அங்கீகரிப்பானாக! ஆமீன்!


ஓரிரு வருட காலமாக பெருத்த சோதனைகளினூடாகவே நாம் ரமழானை சந்தித்து வருகின்றோம். இம்முறை பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை நாடு சந்தித்திருக்கின்ற வேளையில் ரமழானை சந்தித்தோம். இறைவனின் பேரருளின் காரணமாக முப்பது நோன்புகளை நிறைவாக நோற்று உபரியான கிரியைகளை மஸ்ஜிதுகளில் எதுவித இடையூறுகளும் இன்றி நிறைவேற்றக்கூடிய சந்தர்ப்பமும் கிடைத்தன. அல்ஹம்துலில்லாஹ்!


நாம் சந்தித்த ரமழான் வெறும் இபாதத்துக்குரிய மாதம் மட்டுமல்ல. அது ஒரு வளமான மாதம்.(شهر مبارك)  ஒரு இறை விசுவாசியின் வாழ்வாதாரம் அதிகரிக்கின்ற மாதம். இவ்வகையில் நம் தேசத்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாம் மீளுவதற்கான சில வழிகாட்டல்களை இந்த ரமழான் சமர்ப்பித்துச் சென்றுள்ளது. 


(1) குருதி உறவைப் பலப்படுத்தல்:


இமாம்கள் ரமழானை பற்றி குறிப்பிடும்போது "இது ஒரு பகை மறப்பு காலம்" என்பார்கள். 


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எவர் ஒருவர் தனது வாழ்வாதாரம் விரிவாக்கப்பட்டு, ஆயுட்காலம் பிற் படுத்தப்பட வேண்டும் என்று விரும்பினாரோ அவர் இரத்த உறவை சேர்ந்து நடந்து கொள்ளட்டும்". (ஸஹீஹுல் புகாரி).


பஞ்சம், பட்டினி, பொருளாதார நெருக்கடியின் போது உறவுக் கரங்கள் நீள குருதி உறவைப் பலப்படுத்துவோம்.


(2) இறைவழியில் செலவு செய்தல்:


ஒவ்வொரு பிரஜையும் கடினமான நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கும் இத்தருணத்தில், சர்வதேச நாணய நிதியம் முதலானவை கடுமையான நிபந்தனைகளை முன்வைத்து கையை விரித்திருக்கும் இறுக்கமான சூழ்நிலையில் கொடுக்கும் உயர்ந்த கரங்களாக நாம் மாறுவோம். கூட்டுப் பொறுப்புடனும், கூட்டுறவோடும் அடுத்த சகோதரன் சொந்தக் காலில் நிற்க துணை நிற்போம். "இறைவழியில் தமது செல்வங்களை செலவு செய்வோரின் உதாரணம் ஒரு வித்தை நடுவது போலாகும் அது ஏழு கதிர்களை முளைப்பித்தது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகள் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு பன்மடங்கு வழங்குகின்றான். அல்லாஹ் மிகவும் விசாலமானவன். மிகவும் அறிந்தவன்." (ஸூறா அல்பகரா:161).

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "ஸதகா செல்வத்தில் குறைவை ஏற்படுத்தாது".


(3)துஆவும் இஸ்திஃபாரும்:


எமது வாழ்வாதாரத்தின் பின்புலத்தில் ஒரு மறை கரம் இருந்து தொழிற்படுகிறது. அது இறை சக்தி. இந்த இறுக்கமான சூழ்நிலையில் அதனிடம் சரணாகதி அடைவதை தவிர எமக்கு வேறு வழி இல்லை. "உங்கள் வாழ்வாதாரம் வானத்தில் உள்ளது." (அத்தாரியாத்:22). 


ஏந்தும் கரங்களை இறைவன் வெறும் கரங்களாக திருப்பி அனுப்புவதில்லை என்பது நபியின் சுப செய்தியாகும்.

 

எமக்காகவும் எம் நாட்டு மக்களுக்காகவும் மனம் உருகப் பிரார்த்திப்போம். 


"யா அல்லாஹ் இந்த தேசத்தை பாதுகாப்பானதாக ஆக்கி விடுவாயாக! இங்கு வாழுகின்றவர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவாயாக!" (ஸூரத்துல் பகரா:126).


வாழ்வாதாரம் தடைபடுவதற்கு மனிதன் புரியும் பாவங்களும் காரணமாகும் என்பது நபிகளாரின் அருள் வாக்காகும்:


"நிச்சயமாக ஒரு அடியான் செய்யும் பாவத்தின் காரணமாக அவனது வாழ்வாதாரம் தடுக்கப்படுகிறது" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்). 


"உங்களுக்கு ஏற்பட்ட எந்தவொரு அனர்த்தமும் உங்களால் உண்டானவை"(அஷ்ஷுரா: 30).


வாழ்வாதாரம் மீது விழுந்துள்ள தடையை இஸ்திஃபார் மூலம் அகற்றுவோம்.


(4)பொருளாதார மேம்பாட்டுத் திட்டம்: 


நபி யூசுப் (அலை) அவர்கள் அக்கால எகிப்து நாட்டு அரசாங்கத்திற்கு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக முன்வைத்த பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் இருந்து பாடம் பெற்று அபிவிருத்தி பணியை முன்னெடுப்போம்.


அத்திட்டமாவது:


1.தொடர்ந்தேர்ச்சியான உற்பத்தி நடவடிக்கை


2. சேமிப்பு


3.மிகை நுகர்வை தவிர்த்தல். ( ஸூறா யூசுப்:47).


இஸ்லாம் மனித தேவைகளை மூன்றாக வகைப்படுத்துகிறது:


1.அடிப்படைத் தேவை (ضرورية)


 2. தேவை (حاجية)


3. மேலதிக தேவை (تحسينية)


இந்தப் பேரிடர் காலத்தில் அடிப்படை தேவைக்கு முன்னுரிமை கொடுத்து ஏனைய தேவைகளைக் கிடப்பில் போட்டு மிகை நுகர்வு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து தேசத்தை மீள் நிர்மாணம் செய்யும் பணியில் சகோதர சமூகத்தவரோடு கைகோர்ப்போம்.  


மேற்படி வழிகாட்டுதல்களை ஈதுல் பித்ர் செய்தியாக முன்வைத்து விடை பெறுகின்றோம்.


வஸ்ஸலாம்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.




No comments