சமகால அரசியல் தொடர்பில் கிழக்கின் கேடயம் தலைவருடன் ஓர் உரையாடல்
அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர், அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர், அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர், அக்கரைப்பற்று ஜும்மா பெரியபள்ளிவாசல் தலைவர்,. கிழக்கின் கேடயம் ஸ்தாபகரும் பிரதான செயற்பாட்டாளர் கொழும்பு பிஸ்னஸ் கொலேஜ் முகாமைத்துவ பணிப்பாளர் என பல்வேறு அடையாளங்களை கொண்ட அல்- ஹாஜ் எஸ்.எம். சபீஸ் அவர்கள் வழங்கிய விசேட செவ்வி
உரையாடல் : நூருல் ஹுதா உமர்
ஆத்மீகப்பணி, சமூகப்பணி, அரசியல்பணி என மூன்று துறைகளிலும் இயங்குபவர்கள் உலகில் மிகச்சிலரே இருக்கின்றார்கள். நீங்களும் இந்த மூன்று தளங்களிலும் இயங்குபவர். இதை எவ்வாறு நோக்குகின்றீர்கள்? இதில் உள்ள சுமைகள் சங்கடங்கள் ,சவால்களை எவ்வாறு எதிர்கொள்கின்றீர்கள்.
இந்த மூன்று பணிகளையும் ஒருசிலர் வேறுவேறாக பார்கின்றனர் ஆனால் என்னால் இவைகளை வேறாக பிரித்து பார்க்க முடியாதுள்ளது இவைகள் யாவும் இறைபணியே, என நம்புபவர்களில் நானும் ஒருத்தன்,
அரசியலாக இருந்தாலும் சரி, சமூக சேவையாக இருந்தாலும் சரி அல்லது ஆத்மீக பணியிலும் சரி பொதுவாக சவால்கள் நிறைந்தே காணப்படும் அவைகளை நேருக்கு நேர் நின்று துணிச்சலோடு முகம்கொடுக்கும் பக்குவத்தையும் ஆற்றலையும் இறைவன் எனக்கும் தந்துள்ளான், அதனால் எந்த சவால்களும் என்னை சங்கடப்படுத்தியதில்லை அதேபோன்று மனதுக்கு நிம்மதியை தரக்கூடிய . இறைபாதையில் பணிபுரியும் போது ஏற்படும் இடர்களை ஒருபோதும் நாங்கள் சுமையாக கருதுவதுமில்லை.
தே காங்கிரசின் தலைவரால் உங்களுக்கு அக்கரைப்பற்று மேயர் பதவி தருவதாக வாக்குறுதி வழங்கப்பட்டு ஏமாற்றப்பட்டாக கூறப்படுவதன் உண்மை தன்மை என்ன?
தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா அவர்கள் சுழற்சி முறையில் மாநகர முதல்வர் பதவியை மாற்றி வழங்குவதாக உயர்பீட உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள், பள்ளிவாசல் தலைவர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வாக்குறுதி வழங்கியது உண்மைதான் . ஆனால் ஏன் அவர் தனது வாக்குறுதியை காப்பாற்றவில்லை என்ற காரணத்தை அவரிடம் (அதாஉல்லா) தான் நீங்கள் கேட்க வேண்டும். எனக்கு தெரியாது. ஆனால் இறைவன் நாடாத எதனையும் நாங்கள் யாரிடமும் கேட்டது கிடையாது
கிழக்கின் கேடயம் ஏன் உருவாக்கப்பட்டது? அது அரசியல்வாதிகளின் பினாமியாக இயங்குவதாக கூறப்படும் தகவல் பற்றி உங்கள் கருத்தென்ன ?
இந்த அமைப்பில் மரம், மயில், குதிரை, தோடம்பழம், சுயேட்சை போன்ற கட்சிகளின் உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் அப்படிஎன்றால் எந்தகட்சியின் பினாமியாக நாங்கள் இருக்கலாம்
கிழக்கின் கேடயம் உருவாக்கப்பட்டது சமூகத்தின் குரலாகவும், சிவில் அமைப்பாகவும் இயங்கவே. அதன்மூலம் சிறுபான்மை மக்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல்கொடுக்கவும், பிரச்சினைகளை மக்கள் மயப்படுத்தி தீர்வை பெற்றுக்கொடுக்கவும் இதனை நிறுவியுள்ளோம்.
கிழக்கின் கேடயம் உருவாக்கி நீங்கள் வெற்றிகண்ட விடயமாக எதை பார்க்கிறீர்கள் ?
சமூகத்திற்கு தேவையான பெரும் விடயங்களை சாதித்ததாகவே நாங்கள் உணர்கிறோம் . சாணக்கியன் எம்.பி அவர்கள் வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்றும் அதன் முதலமைச்சராக தான் வர ஆசை கொண்டுள்ளதாகவும் தெரிவித்து வந்த நிலையில் சத்தமிட்டு பேசுபவனின் கூற்று உண்மையாகிவிடக்கூடாது என்பதற்காக கிழக்கு மக்களின் சார்பில் எங்களின் பலமான எதிர்ப்பை முன்வைத்தோம்.அதன்பின்னர் வடகிழக்கு இணைப்பு பேச்சுக்களை அவர்கள் நிறுத்தியுள்ளார்கள்
அதேபோன்று இந்திய அரசாங்கத்துக்கு அனுப்பப்பட இருந்த முஸ்லிம் மக்களின் அபிலாசைகளை குழிதோண்டி புதைக்கும் வரலாற்று துரோக கடிதத்தில் முஸ்லிம் தலைவர்கள் ஒப்பமிடாமல் கிழக்கின் கேடயம் முழுமையாக களமாடி அதனை தடுத்து நிறுத்தியது . அதனால் இன்னும் 20 வருடங்களுக்கு பின்னர் வரும் சந்ததியினர் தலைவர்களை நொந்துகொள்ளும் சந்தர்ப்பத்தினை இல்லாமல் செய்திருக்கின்றோம் . ஏன் இதனை தடுத்து நிறுத்தினீர்கள் அதனை வைத்து கட்சி, அரசியல் செய்திருக்கலாம் தானே என்று கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறாரகள்.
அடுத்ததாக மட்டக்களப்பில் வாழும் முஸ்லிங்களின் காணிகள் முறையானவகையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றும், அங்கு உள்ள நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு இடம்பெறும் அநீதிகள், கொடுமைகளுக்கு எதிராகவும் குரல்கொடுத்து பிரச்சினைகளை மக்கள் மயப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருந்துள்ளதுடன், செயல்வடிவங்களையும் செய்துள்ளோம். விரைவில் அதற்கான தீர்வொன்று கிட்டும்.என நம்புகின்றோம்
மற்றும் திருகோணமலை சண்முகா பாடசாலையில் இடம்பெறும் அடக்குமுறைகள் தொடர்பில் கரிசனை செலுத்தி ஜனாதிபதி மட்டம் வரை கொண்டுசென்று தீர்வுக்கான முஸ்தீபுகளை செய்துள்ளோம். பொதுமக்களுக்கு உள்ள காணி விடயங்கள், உரிமை சார்ந்த பிரச்சினைகள் போன்றவற்றில் முன்னின்று செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம். அண்மையில் கூட முஸ்லிங்களின் காணிகளில் திடீரென முளைக்கும் சிலைகள், காணி அபகரிப்புக்கள் தொடர்பிலும் கட்சி, பிரதேசவாத எல்லைகள் எல்லோருடனும் இணைந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம் .
மட்டக்களப்பு மாவட்டத்தில் எவ்வாறான தீர்வுகளை நீங்கள் எதிர்பார்கிண்றீர்கள்?
மட்டகளப்பு மாவட்டத்தில் உள்ள SLAS அதிகாரிகள் உரிய விகிதாசார அடிப்படையில் அங்குள்ள நிர்வாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் அவ்வாறில்லை என்றால் அங்குள்ள முஸ்லிம் பிரதேச செயலகங்களிலாவது முஸ்லிம் நிர்வாக சேவை அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்பதுடன் மேலதிக அரசாங்க அதிபராக தகுதியான முஸ்லிம் நிர்வாக சேவை அதிகாரி ஒருவர் மட்டக்களப்பு கச்சேரியில் நியமிக்கப்பட வேண்டும். என்பதோடு
எல்லைகளை சரியாக அடையாளப்படுத்தி உரியவர்களின் காணிகள் நீதியுடன், முறையாக பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலின் முன்கோபுரம் உடைக்கப்பட்டுள்ளது அது தொடர்பில் கிழக்கின் கேடயத்தின் பார்வை எப்படி இருக்கிறது ?
நல்லாட்சி காலத்தில் நடந்த சம்பவங்களுடன் ஒப்பிடும் போது இது வித்தியாசமானதாக உள்ளது. நல்லாட்சி காலத்தில் படையினரினால் பாதுகாப்பு வழங்கப்பட்டு முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்டார்கள். இங்கு தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலை வரவேற்கும் தோரணத்தை இனம்தெரியாத நபர்கள் உடைத்துவிட்டு சென்றுள்ளார்கள். ஆகவே அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த தோரணத்தை மீள நிர்மாணித்து கொடுப்பதோடு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குவதன் மூலம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ கடந்த சுதந்திர தின விழாவில் உரையாற்றிய எல்லா இன மக்களும் நிம்மதியாக வாழக்கூடிய நாட்டை உருவாக்கியுள்ளோம் எனும் கூற்றுக்கு வலுச்சேர்க்கும் ஒன்றாக அமையும்.
தேசிய காங்கிரஸில் உங்களுக்கும் - தலைவருக்குமிடையில் வெட்டுகுத்துக்கள் நிறைய இருக்கத்தக்கதாக தொடர்ந்தும் தே.கா இல் பயணிப்பீர்களா?
தேசிய காங்கிரஸ் தனி நபரின் சொத்தல்ல. பொது மக்கள், பிரமுகர்கள், செல்வந்தர்கள், இளைஜர்கள் போன்ற பலரின் உழைப்பினூடாக உருவாக்கப்பட்ட கட்சி,. கடந்த நல்லாட்சி காலத்தில் பலம்பொருந்திய அம்ச்சர்கூட எங்களை நாடிவந்து அவர்களின் கட்சியில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்திரு ந்தார் .ஆனால் நாங்கள் அவற்றையெல்லாம் நிராகரித்திருந்தோம் காரணம் தேசிய காங்கிரஸின் ஆணிவேராக திகழ்வது அக்கறைப்பற்றும் அதனை சார்ந்த பிரதேசங்களுமே. அந்த தளத்தினை சீரழித்து விடக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாகவும் இருந்தோம்
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது அம்பாறைமாவட்ட குழுகூட்டத்துக்கு அழைத்தபோது அக்கூட்டத்துக்கு விரல்விட்டு எண்ணக்கூடிய உறுப்பினர்கள் மாத்திரமே வந்திருந்தார்கள் அந்நேரத்தில் நாங்கள் எவ்வாறு செயற்பட்டோம் என்பதற்கு அவர்களே சாட்சி வெற்றியின் பின் பலரும் ஒட்டிக்கொள்வது வழமை. ஆகவே இங்கு காணப்படுகின்ற தளத்தினை சிதைப்பது தலைவாராக இருந்தாலும் மக்கள் அவர்களை தூக்கி எறிய தயங்கமாட்டார்கள்.
இது தொடர்பில் மக்கள் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றனர்?
இந்த நாட்டை சீரழித்த உள்நாட்டு யுத்தத்தை முடித்து அசைக்கமுடியா சக்தியாக இருந்த மஹிந்த ராஜபக்சவின் செயற்பாடுகள் பிழைத்தவுடன் மக்கள் அவரை தூக்கிவீசிய வரலாறுகள் எம் கண்முன்னே நடந்து முடிந்திருக்கிறது. ஆகவே ஆயுளுக்கும் மஹிந்தவின் ஆட்சிதான் வேண்டும் என்று யாரும் சொல்லுவது கிடையாது இது எல்லோருக்கும் பொருந்தும்
தனது மகனை மிஞ்சியவர்களை தலைவரினால் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவது வழமை இதை எவ்வாறு பார்க்கிறீர்கள் ?
பதவி கொடுப்பது, எடுப்பதெல்லாம் இறைவன் செயலென சிலர் பெயரளவில் கூறிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு பதவி கொடுத்தால் இறைவனை பாராட்டுவதும் எதிராளிக்கு பதவி கிடைத்துவிட்டால் அதனை பொருந்திகொள்ளாமல் அவனை வேலைசெய்யவிடாமல் தடுப்பதும் விமர்சிப்பதும் ஒருசிலருக்கு வழமையாகி விட்டது.
தே.கா தலைவரின் மகன் அரசியலுக்கு வருவது தவறில்லை. சாதாரணமானவர்களே அரசியலுக்கு வர முனைகின்ற போது ஒரு சிரேஷ்ட அரசியல்வாதியின் மகன் அரசியலுக்கு வருவது இயல்பு. ஆனால் ஒரு காய் முத்தி தானாக கனியவேண்டும் அடித்து பழுக்கவைக்கக்கூடாது.
தேசிய காங்கிரஸ் படிப்படியாக தன்னுடைய செல்வாக்கை இழந்து வருவதை எப்படி சரி செய்யலாம் என்று நினைக்கின்றீர்கள்?
இப்போதைக்கு இது அவசியமில்லாத கேள்வியாக எனக்கு தோன்றுகின்றது இருந்தாலும். செயற்பாட்டாளர்கள் இல்லாத நிறுவனங்கள்கூட வீழ்ச்சியை நோக்கியே செல்லும். அதுதான் இயற்கையின் நியதி. வினைத்திறனுடன் செயற்படும் திறமையானவர்களை ஒன்றிணைத்து செல்வதன் மூலமே ஒருநிறுவனத்தை பலப்படுத்த முடியும். இப்போது அப்படியான விடயங்கள் இடம்பெறாதமையினாலையே இப்படியான கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளது.
உங்கள் தலைவர் உட்பட 20 க்கு கையுயர்த்தியவர்கள் பற்றிய உங்கள் பார்வை என்ன?
நாட்டின் நடப்புக்களை முஸ்லிம் மக்கள் நன்றாக விளங்கி கொள்ள வேண்டும். இன்று அரசியல்வாதிகள் மாத்திரமல்லாமல் சிங்கள மக்களும் முஸ்லிம்களை வெறுக்கின்ற நிலவரங்களை கண்ணூடாக காணக்கிடைக்கின்றது முஸ்லிம் SLAS அதிகாரிகள் எந்த அமைச்சுக்களிலும் உயர்பதவிகளுக்கு வருவதனை அவர்கள் விரும்பவில்லை என்பதற்கு பல சாட்சிகள் எங்களிடம் உள்ளது ஆகவே இத்தருணத்தில் மக்கள் பிரதிநிதிகள் வெட்டினால் பச்சை இரத்தம் அல்லது நீல இரத்தம் ஓடும் என்று சொல்லாமல் மக்களை பாதுகாப்பதற்காக ஆட்சியில் இருப்பவர்களோடு இணைந்து பணிகளை செய்வது ஒரு சாதுரியம்.
மதஸ்தலங்களை தாக்கி இனவாதமொன்றினூடாக இனங்களை பிரித்தாழ்ந்து தனித்தனி இனமாக ஒன்றுசேர்ப்பது மிகவும் இலகுவானது என்பதை கடந்த கால சம்வங்களூடாக நாம் படிப்பினை பெற்றுள்ளோம். அரசுக்கு எல்லா மக்களினது ஆதரவும் தேவை எனும் நிலை உள்ளது. இந்நிலையில் தொடர்ந்தும் அரசை எதிர்த்து வந்த தமிழ் மக்கள் இப்போது படிப்படியாக ஆதரவு கொடுக்க தொடங்கிவிட்டார்கள். அதன் வெளிப்பாடாக வியாழேந்திரன், பிள்ளையான், டக்ளஸ், அங்கஜன் போன்ற அரசின் ஆதரவு தளம் கொண்ட பலரையும் ஆதரித்துள்ளார்கள். அம்பாறையில் கருணா அம்மான் 30 ஆயிரம் வாக்குகள் மட்டில் பெற்றுள்ளார். இவைகள் சிந்திக்கப்பட வேண்டியவை. இந்த நிலையில் முஸ்லிம் தலைவர்களின் காய் நகர்த்தல்களும், அரசியல் முன்னெடுப்புக்களும் ஆழமாக சிந்தித்தே எடுக்கவேண்டியுள்ளது. சமூகத்தின் எதிர்கால நிலைகளை கருத்தில்கொண்டே அவர்கள் செயற்படுவதாக நான் எண்ணுகிறேன்.
இதனால் ஒவ்வொரு கட்சிகளுக்குள்ளும் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல்களை பற்றி நான் பேச முடியாது. இவர்களின் போக்குகளினால் முஸ்லிங்களுக்கு தற்காலிக பாதுகாப்பு கிடைத்துள்ளது என்றே நாம் நம்ப வேண்டும்.எதிர்காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் அங்கும் எமது பிரதிநிதிகள் ஆட்சியாளர்களுடன் இணைந்து செயபடுதல் என்பது அவசியமானதாகும்
முஸ்லிங்களுக்கு நிம்மதி இல்லை என்று கடந்த ஆட்சியை விமர்சித்த நீங்கள் இந்த ஆட்சியை எப்படி நோக்குகிறீர்கள்?
இன்று நாட்டில் யாரும் நிம்மதியாக இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். காரணம் தெரிந்ததுதான். எமது நாட்டில் டொலர் இல்லை, அத்தியாவசிய பொருட்கள் இல்லை, டீசல், பெற்றோல், உட்பட எல்லாம் தட்டுப்பாடாகவே இருக்கிறது. விலையேற்றம், பணக்காரன் முதல் பாமர மக்கள் வரை பசி என நாடு திண்டாடிக்கொண்டிருக்கிறது. இதில் சிங்களவர், முஸ்லிம், தமிழர், கிறிஸ்தவர் என்ற எந்த பாகுபாடுமில்லை.
ஆனால் கடந்த அரசாங்கத்திலிருந்த வாழ்வியல் அச்சநிலை இந்த அரசில் முஸ்லிங்களுக்கு இல்லை என்பதே வெளிப்படையான உண்மை. கடந்த நல்லாட்சியில் வீட்டைவிட்டு வெளியே தேவைகளுக்காக சென்ற கணவன், பாடசாலைக்கு சென்ற பிள்ளை மீண்டும் வீடுதிரும்பும் வரை எங்கள் உறவுகள் பட்ட வேதனையும் கஷ்டமும் இன்றும் எங்கள் கண்முன்னே இருக்கிறது. எங்கு கலவரம் நடக்கும், எந்த பள்ளிவாசல் உடையும், எந்த இடத்தில் தாக்குவார்கள், எங்கு பஸ் பத்தும் என நாங்கள் பதரித்திரிந்த நாட்களின் வேதனையை அனுபவித்தவர்களை தவிர வேறுயாரும் அறிய மாட்டார்கள்.
முஸ்லிம் அடையாளங்களுடன் இன்னுமொரு ஊருக்கு பிரயாணம் செய்ய பயந்த நாட்களை பற்றி அறிந்தவர்கள் நாங்கள். எங்களின் ஊரிலிருந்து அம்பாரைக்கு செல்வதற்கே அச்சப்பட்ட சம்பவங்கள் இருக்கிறது. இவைகளெல்லாம் மறந்துவிட முடியாதவை. விலைவாசியா நிம்மதியான வாழ்வா என்று கேட்டால் நாங்கள் கடந்த கால கசப்பான நாட்களை எண்ணி நிம்மதியான வாழ்வையே விரும்புவோம். இன்று இனக்கலவரமில்லை, முஸ்லிங்கள் தாக்கப்பட வில்லை, பள்ளிவாசல்களுக்கு தாக்குதல் நடக்கவில்லை என்ற நிம்மதி எங்களுக்கு இருக்கிறது ஆனால் மறைமுகமாக நாட்டில் உள்ள பொருளாதார நெருக்கடி, பஞ்சம் காரணமாக எந்த மக்களும் நிம்மதியில்லாமலே இருக்கிறார்கள் என்பதே எங்களின் பார்வையாக இருக்கிறது.
கடந்த காலங்களில் நாட்டின் வளங்கள் வெளிநாட்டுக்கு வழங்கப்பட்ட போது கொதித்தெழுந்த உங்கள் தலைவர் இந்த ஆட்சியில் வளங்கள் வெளிநாட்டுக்கு வழங்கப்பட்ட போது அடக்கி வாசிப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
அவர் மௌனம் காக்கிறாரா என்பது தொடர்பில் எனக்கு தெரியாது இருந்தாலும் அவர் பொது நிகழ்வுகளில் குரல் கொடுப்பதாகவே நான் அறிகிறேன். இதுதொடர்பில் நான் மாறுபட்ட கருத்தை கொண்டுள்ளேன். ஏனெனில், இலங்கையின் வளங்கள் கேள்விகூடிய பெறுமானமிக்கது. அதற்காக அதை நாம் முறையாக பயன்படுத்தாமல் வைத்திருக்க முடியாது. உலக அபிவிருத்தியடைந்த நாடுகளில் உள்ள நடைமுறைகள் போன்று எமது நாட்டின் வளங்கள் வெளிநாடுகளுக்கு வழங்குவதில் தவறில்லை. ஆனால் அது முறையாக மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில், எதிர்காலத்தை பாதிக்காமல் முறையான திட்டங்களினூடாக குறித்த சில வருடங்களை தவணையாக கொண்டு வழங்கப்பட வேண்டும். அதில் மக்களுக்கு தீமையாக அமையும் செயற்பாடுகள், மக்களை மலினப்படுத்தும் நடைமுறைகள் இருந்தால் உடனடியாக வலுவிழக்கம் செய்யும் நடைமுறைகள் கொண்டதாக ஒப்பந்தங்கள் அமைய வேண்டும்.
இப்படியான நடைமுறைகள்தான் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் செய்யப்படுகிறது. இலங்கையில் ஆயுட்கால ஒப்பந்தங்கள் மூலம் வளங்கள் வேறு ஒரு நாட்டுக்கு வழங்குவது முறையான விடயமல்ல. இதனால் தரங்குறைந்த சேவைகளே மக்களை வந்தடைகிறது. நாட்டை முன்னேற்ற இறுக்கமான சட்டதிட்டங்களை முன்வைத்து ஒப்பந்தங்கள் செய்து வளங்கள் வழங்க வேண்டும். அழகான நாடு என்று நாம் பயன்படுத்தாமல் வைத்துக்கொண்டிருந்து பயனில்லை.
No comments