பிரார்த்தனை புரிந்த உள்ளங்களுக்கு இதயபூர்வமான நன்றிகள் - உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜூல் அக்பர்
அன்பு நெஞ்சங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
சரியாக முன்னூறு நாட்கள் முடிந்த நிலையில் வெளியே வந்த என்னை சொந்தங்களும் நெருங்கியவர்களும் சூழ்ந்து கொண்டனர். அவர்களோடு அளவளாவி முடித்த போது அடைபட்டிருந்த மூச்சு ஆறுதலாக வெளியேறியது போன்றொரு உணர்வு ஆட்கொண்டது அல்ஹம்துலில்லாஹ், அல்ஹம்துலில்லாஹ்!
அந்த உணர்வில் நனைந்து அல்ஹம்துலில்லாஹ் சொல்ல மற்றுமொரு முக்கிய காரணியும் வழியமைத்தது. என்மீது அன்பு கொண்ட உள்ளங்கள் எனக்காக செய்த பிரார்த்தனைகளும், என் விடயத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருள் நாடி நோற்ற நோன்புகளும் என்னைப் பற்றி எனது குடும்பத்தாரிடமும் ஜமாஅத்திடமும் தொடர்ச்சியாக விசாரித்த தமது அக்கறையுமே அவையாகும்.
என்னை அறியாதவர்கள் என்னைக் கைது செய்து அடைத்து வைத்திருந்த போது என்னை நன்கறிந்த பல்லாயிரம் உள்ளங்கள் எனக்காகவும் எனது விடுதலைக்காகவும் உளமாற பிரார்த்தித்திருக்கிறார்கள் என்பதை எங்கனம் ஒரு சாதாரண விடயமாக கருத முடியும்? அந்த உணர்வும் அல்ஹம்துலில்லாஹ்வை சொல்லிக் கொண்டே இருக்கத் தூண்டுகிறது.
என்னைக் கைது செய்தவர்களில் ஒருவரிடம் கேட்டேன் “என்னை நன்கறிந்தவர்களின் சாட்சிகளை எனது விசாரணையின் போது கவனத்தில் கொள்வீர்களா?” என்று. “அது எங்களது வேலையல்ல உங்களுக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற முறைப்பாடுகளை விசாரிப்பது தான் எங்களது வேலை” என்றார் அவர்.
பல்லாயிரம் நல்லுள்ளங்களது சாட்சிகளை இவர்கள் ஏற்காது போனால் என்ன? என்னைப் படைத்தவன் அவற்றை நிச்சயம் ஏற்றுக்கொள்வான் என்பது ஒன்றே எனக்கு கிடைத்த பெரிய ஆறுதலாகும்.
உண்மைகளை நன்கறிந்து உளமார பிரார்த்தித்த… நலம் விசாரித்த…. கவலை தெரிவித்த…. அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் மனம் நிறைந்த நன்றியறிதலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இறைவன் உங்களையும் என்னையும் பொருந்திக்கொள்வானாக! எம்மனைவர் மீதும் உலக மறுமை அருட்களை என்றென்றும் சொரிந்தருள்வானாக!
அறியாதவர்களும் உண்மைகளை அறிந்து செயல்பட ஆவண செய்வானாக!
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜூல் அக்பர்
2022/01/17
No comments