புத்தளம் நகர சபை 2022 ஆம் ஆண்டுக்கான கடமை செயற்பாடுகளை ஆரம்பித்தலும், ஊக்குவிப்பு பயிற்சி நிகழ்ச்சியும் இன்று இடம்பெற்றது
புத்தளம் நகர சபை 2022 ஆம் ஆண்டுக்கான கடமை செயற்பாடுகளை ஆரம்பித்தலும் ஊக்குவிப்பு பயிற்சி நிகழ்ச்சியும் புத்தளம் நகர முதல்வர் எம்.எஸ்.எம் .ரபீக் தலைமையில் இன்று (03) மிகவிமர்சையாக இடம்பெற்றது.
முதற்கட்டமாக நகரபிதா பொதுசன நூலக வளாகத்தில் மர நடுகை நிகழ்வில் கலந்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து மர்ஹூம் கே.ஏ. பாயிஸ் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் வைபவ ரீதியாக நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
அண்மையில் இலங்கை பொது நிதி பட்டயக் கணக்காளர் சம்மேளனத்தினால் பொதுத் துறைக்கான தேசிய ரீதியில் 2019 சிறந்த வருடாந்த கணக்கறிக்கைக்கான மூன்றாமிடத்தை புத்தளம் நகரசபை பெற்றுக்கொண்டதற்கான வெண்கலப் பதக்க விருதை நகரசபை நிர்வாக உத்தியோகத்தர் சுஜித் ஜயசுந்தர நகரபிதாவிடம் கையளித்தார். இதற்காக சிறப்பாக பணிபுரிந்த உத்தியோகத்தர் சதுரங்க உட்பட்ட குழுவினரைப் பாராட்டி நகரபிதா நினைவுப் பரிசில்கள் வழங்கினார்.
நகரபிதா மேடையில் ஊழியர்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து அதற்கான தீர்வுகளையும் வழங்கினார்.
அத்தோடு குறிப்பாக சுகாதாரப் பிரிவு ஊழியர்களின் நீண்ட கால பிரச்சனையான தூர்ந்து போய் அபாயகரமான நிலையில் காணப்படும் லயன் வீடுகளை புனரமைக்கும் பணிகளையும் இயன்றவரை தனது பதவிக் காலத்திலேயே செய்து முடிக்க உத்தேசித்துள்ளதாகவும் நகரபிதா தெரிவித்தார்.
மேலும் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்களுக்கும் கடமையில் திறம்பட செயற்படும் ஊழியர்களுக்கும் நகரபிதா பரிசில்களையும் நினைவுச் சின்னங்களையும் வழங்கினார்.
கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட விஷேட தேவையுடைய மாணவர்களுக்கும் நகரபிதாவும் நகரசபை உறுப்பினர்களும் பரிசில்களை வழங்கினர்.
இன்னும் சில தினங்களில் புத்தளம் நகர சபையில் இருந்து பதவி உயர்வு பெற்று மாற்றமாகிச் செல்லவுள்ள நிர்வாக அதிகாரி சுஜித் ஜயசுந்தர அவர்களின் சிறந்த செயற்திறன்மிக்க சேவையைப் பாராட்டி நகரபிதாவும் நகரசபை உறுப்பினர்களும் நினைவுப் பரிசினை வழங்கி கௌரவித்தனர்.
இந்நிகழ்வில் நகரபிதாவுடன் உப நகர பிதா நகரசபை உறுப்பினர்கள் நகரசபை செயலாளர் நிர்வாக அதிகாரி நகரசபை உயர் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.
No comments