உசுப்பேற்றும் கடும்போக்குகளை, தோற்கடிக்கும் யுக்தி எது? -சுஐப் எம். காசிம்-
முப்பது வருட யுத்தம் முடிந்து ஒரு தசாப்தம் கடந்துள்ள சூழ்நிலையில், இன உறவுகளின் கோபுரத் தீபங்களாக திகழ வேண்டியதன் அவசியத்தை, ஐ.நா பொதுச்சபையின் 76 ஆவது மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தி உள்ளார். எனவே, பாலின சமத்துவம், பாகுபாடுகளில்லாத மத, இன மற்றும் சமூக உறவுகள், உடன்பாடுகளால் இலங்கையைக் கட்டியெழுப்பும் நமது ஜனாதிபதியின் விருப்பத்துக்கேற்ப, இணக்க அரசியலுக்கு உடன்படுவதன் கடமைப்பாடுகள் பற்றியே, சிறுபான்மை அரசியல் தலைமைகள் சிந்திக்க நேரிட்டுள்ளன.
பேதங்களைக் கடந்த அரசியல் கலாசாரத்தைக் கட்டி எழுப்பும் பணிகளில்தான், உசுப்பேற்றும் கடும்போக்குகளின் தோல்விகள் எழுதப்படப்போகின்றன. புதிய அரசியலமைப்பு மற்றும் கலாசாரம் பற்றி இந்த அரசு அவசரப்படுவதும் இதற்காகத்தான். ஐ.நா பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதியின் உரையில், இதன் கட்டியங்கள் எதிரொலித்துமுள்ளன.
ஆட்சிக்கு வருவதற்காக இனவாதச் சிந்தனைகளைச் சூடேற்றும் நிலைமைகள் ஏற்படுமளவுக்கு, சிறுபான்மைத் தலைமைகள் நடந்துகொள்ளக் கூடாது. மட்டுமல்ல, இந்தச் சூடேற்றும் அரசியல் தீயில் வீழ்ந்து, சிறுபான்மைச் சமூகங்கள் சீரழிவதும் ஆரோக்கியமானதல்ல.
தனிச்சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்து, எஸ்.டபிள்யு பண்டார நாயக்கா ஆட்சிக்கு வந்தார். இந்திய, இலங்கை உடன்படிக்கையை எதிர்த்து பிரேமதாஸா வென்றார். பயங்கரவாதத்துக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் மட்டுமே என்ற கோஷத்துடன் 1994 இல் சந்திரிக்கா வெற்றி பெற்றார். சமாதானத்துக்கான யுத்தம் எனக் கூறி மஹிந்த வெற்றி பெற்றார். புலிகள் முடிந்த கையோடு வெற்றிக்கான இந்த இனவாதக் கோஷங்கள் இல்லாதுபோன இடைவெளியில் ஒரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இது நிலைக்காது தடுமாறியதும் நமக்கான பாடங்களில் ஒன்றுதான். இதை அறிந்துகொண்ட சில உசுப்பேற்றும் சக்திகள், அதிகாரங்களை அடைவதற்கான இலகு வழிகள் அழியாமலிருப்பதற்கான முயற்சிகளாகவே, இவர்களின் உசுப்பேற்றல்களைப் பார்க்க வேண்டி உள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாதம் இருப்பதாகத் தூவப்பட்ட இவர்களின் கோஷம்தான் இந்த ஆட்சிக்கு உதவியதும் சிறுபான்மை சமூகங்களுக்கான பாடங்கள்தான். ஈஸ்டர் தாக்குதல் இதற்காகவா நடத்தப்பட்டது? என்று சிந்திப்பதும் இதே நியதியில்தான்.
இப்போது, எதுவுமில்லாத நிலையில் இந்த உசுப்பேற்றிகள், எதையாவது கோஷமாகத் தூக்கிப் பிடிப்பதற்கு சிறுபான்மைத் தலைமைகள் இனியும் இடமளிப்பதா? ஜனாதிபதியின் உரை இவ்வாறுதான் சிந்திக்கத் தூண்டுகிறது.
தென்னிலங்கையில் சலித்துப்போகும், சரிந்து செல்லும் வாக்குகளுக்காக இந்த உசுப்பேற்றிகள் வேறு வியூகங்கள் வகுப்பதை தடுப்பதே, சிறுபான்மையினரின் பேரம் பேசும் அரசியல் பலத்துக்கு இன்னுமொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும்.
நாட்டில் முதலீடு செய்வதற்கு டயஸ்போராக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தமை, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான உத்தரவாதம், நாடு பிளவுபடாத அதிகாரப் பகிர்வு பற்றி ஜனாதிபதி பேசியுள்ளதும் இந்தச் சூழலைச் சாத்தியப்படுத்தியே வருகிறது.
எனவே, சிறுபான்மைத் தலைமைகள் இந்தச் சூழலைச் சாத்தியமாக்க உழைக்க வேண்டும். இல்லாவிடின், இன்னுமொரு இனவாதக் கோஷத்தைப் பலப்படுத்தும் சூழலை, சில கடும்போக்கு சக்திகள் உசுப்பேற்றி விடலாம்.
No comments