முஸ்லிம் விவாக, விவாகத்துச் சட்ட விவகாரம் எதிர்க்கட்சி முஸ்லிம் எம்.பிகள் சந்திப்பு
தற்போது சர்ச்சைக்குரியதாக கருதப்படுகின்ற முஸ்லிம் விவாக - விவாகரத்துச் சட்டத்தை தக்க வைத்துக்கொண்டு, அதில் அவசியமான திருத்தங்களை மட்டும் மேற்கொள்வதற்கு வழிகோலும் விதத்திலான நடிவடிக்கைகள் பற்றி எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் புதன்கிழமை (22) ஒன்றுகூடி கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் புதன்கிழமை(22) நடைபெற்ற எதிர்க்கட்சி முஸ்லிம் உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், இது தொடர்பில் சில முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல்கட்டமாக இந்த விஷயத்தில் குறிப்பாக முஸ்லிம் விவாக - விவாகரத்து சட்டம் தொடர்பில் எழுந்துள்ள இந்தப் பிரச்சினையில் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளைக் களைந்து, பொதுவானதொரு கருத்தொருமைப்பாட்டுக்கு வருவதற்கான முயற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்துவதாகத் தீர்மானிக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில், இதன் ஏற்பாட்டாளரான பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் நெறிப்படுத்தலில் பிரஸ்தாப எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்படவுள்ளனர்.
இவர்கள் விரைவில் ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும், முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் இந்தத் துறையில் ஆர்வம் உள்ள சிரேஷ்ட முஸ்லிம் சட்டத்தரணிகளையும் புத்திஜீவிகளையும், பெண்கள் உரிமைகள் தொடர்பிலான செயற்பாட்டாளர்ளையும் சந்தித்து, அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடவுள்ளனர்.
விவாக -விவாகரத்துச் சட்டத்தில் வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டவர்கள் மத்தியில் இஸ்லாத்தின் அடிப்படை நெறிமுறைகளுக்கு மாற்றமில்லாத விதத்தில், சில திருத்தங்களை மட்டும் மேற்கொள்வதற்குரிய சாத்தியக்கூறுகள் பற்றி கலந்துரையாடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் நீதி அமைச்சர் அலி சப்ரியைச் சந்தித்து அவருடன் சுமுகமாகக் கலந்துரையாடவுள்ளனர்.
அத்துடன், இலங்கையில் உள்ள இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களையும், உயர்ஸ்தானிகர்களையும் சந்தித்து இது பற்றி தெளிவுபடுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டது.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவருடைய அலுவலகத்தில் நடைபெற்ற இந்த எதிர்க்கட்சி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றுகூடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுத்தீன், பாராளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.ஏ.ஹலீம், கபீர் ஹாசிம், முஜிபுர் ரஹ்மான், மரிக்கார், இம்ரான் மஹ்ரூப் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இம்தியாஸ் பாக்கீர் மாக்காரும் இந்நிகழ்வில் கலந்து கொள்வதாக இருந்தார்.
No comments