மர்ஹூம். Z.A.M ரிபாய் ஹாஜியார்: எளிமையின் வடிவம் - முப்தி. யூசுப் ஹனிபா
ஒரு மனிதன் அடுத்தவர்களுக்காக வாழும் போது அவனது வாழ்வு வரலாறாக ஆகிவிடுகிறது. அவனது மரணத்திற்குப் பிறகும் அவனது பெயர் இந்த உலகிலே நிலைத்து நிற்கிறது.
அந்த வகையில் ஒரு முன்மாதிரியான மனிதராக வாழ்ந்து தன் கடமைகளை செவ்வனே நிறைவேற்றி விட்டு இந்த உலகிற்கு பிரியா விடை கொடுத்திருக்கிறார் ரிபாய் ஹாஜியார்.
மரணம் என்பதை இறைவன் ஒவ்வொரு மனிதனுக்கும் நிச்சயப்படுத்தி இருக்கிறான். யாரும் அதிலிருந்து தப்பிக்க முடியாது.
ஒரு மனிதன் எப்போது, எப்படி மரணிப்பான், எந்த இடத்தில் அடக்கம் செய்யப்படுவான் போன்ற அறிவை இறைவன் தன் பக்கம் வைத்திருக்கின்றான். மனிதன் அது பற்றி ஒருபோதும் அறிய மாட்டான்.
இந்த நம்பிக்கைதான் எங்களுடைய அழகிய பொறுமைக்கு காரணமாக அமைகின்றது.
எது எப்படி இருந்தாலும் தன் கடமைகளை சரிவர செய்து இறை பொருத்தத்துடன் இந்த உலகை விட்டு பிரிவதற்கு சந்தர்ப்பம் கிடைக்குமாயின் அது மிகப்பெரிய பாக்கியமாகும். அந்தப் பாக்கியத்திற்கு சொந்தக்காரராக ரிபாய் ஹாஜியார் அவர்களை அல்லாஹ் ஆக்கி வைப்பானாக. அன்னாரை பொருந்திக்கொள்வானாக.
என்று எங்களை விட்டு பிரிந்து இருக்கக்கூடிய அன்புச் சகோதரர் மர்ஹூம் Z.A.M ரிபாய் ஹாஜியார் ஒரு முன்மாதிரியான மனிதராக எங்களுக்கு மத்தியில் வாழ்ந்தவர். அவரைப் பல கோணங்களில் எங்களால் அணுக முடியும்.
அவரது வாழ்க்கை எங்களுக்கு பல்வேறு பாடங்களை கற்றுத் தருகின்றது. ஆரவாரமில்லாமல் எதனையும் செய்து முடிக்க கூடியவர். எத்தனையோ. நற்கருமங்களை அவர் செய்திருக்கிறார் பாடசாலைக்கான கட்டடங்கள், ஏழைகளுக்கான வீட்டுத்திட்டங்கள், பல தசாப்தங்களாக ரமழானுடைய காலங்களில் தன் ஊர் மக்களுக்கு வழங்கக்கூடிய அன்னதானங்கள் தர்மங்கள் என அவரது பணிகள் நீள்கின்றன. பிறருக்கு கொடுப்பதிலே அவர் அதிக விருப்பம் கொண்டிருந்தார் அடுத்தவர்களை வாழ வைக்க வேண்டும் என்பது அவரது உணர்விலே இருந்த ஒரு விடயம்.
எளிமையான வாழ்வென்பது அவரிடம் காணப்பட்ட மிக முக்கியமான பண்பாகும். பெரும் செல்வந்தராக இருந்தாலும் அவர் இறுதிவரை மிகவும் எளிமையான வாழ்வையே கடைபிடித்தார் நான் அறிந்த வகையில் இறுதிவரை அவர் ஒரு கையடக்க தொலைபேசியை கூட பாவிக்கவில்லை.
அவர் சம்பாதித்தவற்றில் பெரும்பாலானவற்றை சமூகப் பணிகளிலும் கல்வி பணிகளிலும் செலவிட்டார். யார் எதைக் கேட்டாலும் இல்லை என்று ஒருபோதும் அவர் சொல்வதில்லை. தன்னால் முடிந்தவற்றை அவர் கொடுக்கக் கூடியவராக இருந்தார்.
மேலும் முன்மாதிரியான ஒரு தந்தையாக அவர் இருந்தார். பிள்ளைகளை வளர்க்கும் விடையத்தில் அவர் பொடுபோக்காக இருக்கவில்லை. அந்தப் பொறுப்பை அவர் மிகக் கவனமாக நிறைவேற்றினார். தன் பிள்ளைகளுக்கு கல்வியைக் கொடுத்தார். அவரது பிள்ளைகளில் பட்டதாரிகள் இருக்கிறார்கள், ஒரு வைத்தியர் இருக்கிறார். செல்வந்தர்களுடைய குடும்பங்களில் இத்தகைய நிலையை நாங்கள் அரிதாகவே காணமுடியும். தற்காலத்தில் அத்தகைய நிலை இருந்தாலும் அவருடைய காலத்தில் அவ்வாறு அவர் சிந்தித்தது இங்கு கவனிக்கத்தக்கது.
அவர் எப்போதும் மார்க்க விடயங்களில் பற்றுடனும் உறுதியுடனும் நடந்து கொண்டார். இறைவன் தன்னை கைவிட மாட்டான் என்ற நம்பிக்கையுடன் தனது முயற்சிகளை அவர் முன்னெடுத்தார்.
சாதாரண ஒரு வியாபாரியாக இருந்த அவரை இறைவன் உலகறியும் ஒரு வர்த்தகராக,தொழிலதிபராக மாற்றினான். அதற்காக அவர் எப்போதும் இறைவனுக்கு நன்றிக் கடன் செலுத்தினார்.
வியாபாரத்தில் பலர் அவரை ஏமாற்றி இருந்தாலும் அவர் ஒருபோதும் எவரையும் ஏமாற்ற நினைக்கவில்லை. அந்த நற்குணமே அவரை வியாபாரத்தில் முன்னணிக்கு எடுத்துச் சென்றது.
எல்லா மனிதர்களும் நல்ல நிலையில் வாழ வேண்டும் என்பதே அவரது எதிர்பார்ப்பாக இருந்தது அதற்கு முடியுமானவரை அவர் பங்களிப்புச் செய்தார்.
அவரது வாழ்க்கைப் பதிவுகள் ஏனையவர்களுக்கு பயன்பட வேண்டும் என்ற அடிப்படையில் அவரது வாழ்வை ஆவணமாக்கும் பணியை ஸம் ஸம் நிறுவனம் மேற்கொண்டிருந்தது. அந்த ஆவணப்படத்தை பார்ப்பதின் ஊடாக அவரது வாழ்க்கையின் பல்வேறுபட்ட பரிமாணங்களை உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கின்றேன். அல்லாஹ் அவரது நற்கருமங்களை பொருந்திக்கொள்வானாக. அவருடைய மறுமை வாழ்வை ஈடேற்றம் மிக்கதாக ஆக்கி வைப்பானாக. அவரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை வழங்குவானாக. அனைவருக்கும் பாதுகாப்பையும் ஆரோக்கியமான வாழ்வையும் இறைவன் வழங்குவானாக.

No comments