Breaking News

மறைந்த ஸம் ஜெம் ரிபாய் ஹாஜியார் வாரி வழங்கிய வள்ளல் - மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் அனுதாபம்.

இலங்கையின் பிரபல இரத்தினக்கல் மற்றும் நகை வர்த்தக நிறுவனமான ஸம் ஜெம் உரிமையாளரும், கொடை வள்ளலுமான மறைந்த ரிபாய் ஹாஜியார், சமுதாயத்தின் கல்வி வளர்ச்சியில் காட்டிய கரிசனை அன்னாரின் ஏனைய நற்பணிகள் அனைத்தையும் விட மேலோங்கி நிற்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.  


ஸம் ஜெம் ரிபாய் ஹாஜியாரின் மறைவையிட்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  


இரத்தினக்கல் வணிகத்திற்கு பெயர் பெற்ற பேருவளை மண்ணின் மைந்தனான மர்ஹூம் ரிபாய் ஹாஜியார் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக  உள்நாட்டிலும், உலக நாடுகள் பலவற்றிலும் மிகவும் வெற்றிகரமாக மாணிக்கல்  வர்த்தக நடவடிக்கைகளில் தடம் பதித்தவர் மட்டுமல்லர்,அவர் தரச் சிறப்பிற்கான சர்வதேச சான்றிதழ்களைப் பெற்றுத் திகழ்ந்ததோடு,உயர் விருதுகளையும் வென்றவர்.


 வறிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் உன்னதமான பங்களிப்பை செய்துள்ள அவர், நற்பணிகளுக்கு உதவிகள் கோரப்படும் போதெல்லாம் பிரசித்தப்படுத்திக் கொள்ளாமல் தாராளமாகவும்,ஏராளமாகவும் வாரி வழங்குபவராகவே இருந்திருக்கிறார் என்பதை பலரும் சொல்லக் கேட்டிருக்கின்றேன்.


 ஆழமான இறை நம்பிக்கையுடன், ஆடம்பரமில்லாமல் சாதாரண வாழ்க்கை நடத்திய ஒரு பெருந்தகையாகவே நான் மர்ஹூம் ரிபாய் ஹாஜியாரைக் காண்கின்றேன்.


 எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கும், அவருக்கு முன்னரே இவ்வுலக வாழ்வை நீத்த அன்னாரின் துணைவியாருக்கும்  ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா என்ற மேலான சுவன வாழ்வை அருள்வானாக எனப் பிரார்த்திப்பதோடு ,  மறைவினால் துயருற்றிருக்கும் புதல்வர்,புதல்வியருக்கும், மருமக்களுக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.




No comments