Breaking News

மங்கள சமரவீர என்பது வெறும் பெயரல்ல. இலங்கையின் வரலாற்று அடையாளம் : இரங்கல் அறிக்கையில் ஹரீஸ் எம்.பி உருக்கம் !

நூருல் ஹுதா உமர்

மங்கள சமரவீர என்பது வெறும் பெயரல்ல. இலங்கையின் வரலாற்று அடையாளம் எனும் புகழுக்குரியவர் இன்று  எங்களை விட்டு மறைந்த செய்தி பேரதிர்ச்சியாக உள்ளது. இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட தேசிய தலைமைகளின் ஒருவரான மங்கள சமரவீரவின்  இழப்பு இலங்கைக்கு ஈடுசெய்ய முடியா பேரிழப்பாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


அவரது அனுதாப செய்தியில்  மேலும், இலங்கைக்கு தலைமைத்துவம் கொடுக்கும் அளவுக்கு திறமையும் துணிச்சலும் கொண்ட தேசிய தலைமைகளின் ஒருவராக தன்னை நிலைநிறுத்தியவரே மறைந்த மங்கள சமரவீர அவர்கள். எமது நாட்டின் மிக முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்து எமது நாட்டின் பொருளாதாரம், சமூக மேம்பாடு, சர்வதேச உறவுகள் வலுப்பெற பல்வேறு வகைகளிலும் தன்னை அர்ப்பணித்திருந்தார். சிறந்த தூரநோக்கு சிந்தனை கொண்ட மாறுபட்ட வினைத்திறன் மிக்க திட்டங்களை வகுத்து நாட்டை முன்னேற்ற துடித்த ஒரு தலைமைத்துவத்தை இன்று கொரோனா காவுகொண்டுள்ளது வருத்தமளிக்கிறது. கடந்த 2001 ஆம் ஆண்டுமுதல் என்னுடைய பாராளுமன்ற காலத்தில் நல்ல நட்புறவுடன் என்னுடன் உறவாடி பல சந்தர்ப்பங்களிலும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கிய பொழுதுகளை எண்ணிப்பார்க்கிறேன். அதிலும் குறிப்பாக கடந்த அரசில் நிதியமைச்சராக அவர் பதவிவகித்த காலப்பகுதில் பிராந்திய அபிவிருத்திகளுக்கும், சந்தாங்கேணி மைதான அபிவிருத்திக்கும் நேரடியாக நிதியொதுக்கி தந்திருந்தார்.


அவரது இழப்பினால் துயருற்ற அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்கள் எல்லோருக்கும் என்னுடைய ஆழ்ந்த கவலைகளை தெரிவித்து கொள்கிறேன்.




No comments