ஆப்கானில் சோவியத் படைகளுக்கு எதிராக போரிட்டவர்கள் ? சவூதியிலிருந்து போராடச் சென்ற கோடீஸ்வரர் ? நிதி வழங்கியது ? எதிர்கொண்ட சவால் ?
நான்காவது தொடர்..........
“ஆப்கானிஸ்தான் என்னும் இஸ்லாமிய நாட்டை சோவியத் யூனியன் கைப்பற்றி அங்கு இஸ்லாமியர்கள் மத்தியில் கொமியுனிச கொள்கையை பரப்புகின்றார்கள்” என்ற செய்தி உலகம் முழுவதும் அமெரிக்க சார்பு சர்வதேச ஊடகங்களினால் பிரச்சாரப்படுத்தப்பட்டது.
இந்த பிரச்சாரம் உலகின் மூலை முடுக்குகளில் இருந்த அனைத்து இஸ்லாமியர்களின் உணர்வுகளை தூண்டியது. குறிப்பாக மத்தியகிழக்கு, ஆபிரிக்கா கண்டத்தின் நாடுகளில் உள்ள இஸ்லாமிய இளைஞர்கள் சோவியத் யூனியனுக்கு எதிராக செயலில் இறங்குவது பற்றி சிந்தித்தார்கள்.
அத்துடன் நின்றுவிடாமல் உலகின் பல தேசங்களிலிருந்தும் ஆக்கிரமிப்பு செய்த சோவியத் படைகளுக்கு எதிராக போராடுவதற்கு பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தான் நோக்கி புறப்பட்டார்கள்.
சவூதி அரேபியாவிலிருந்தும் ஏராளமான இளைஞர்கள் ஆப்கான் பயணமானார்கள். இவர்களது பயணத்துக்கு சவூதி அரசு உதவி செய்தது. வேறுபல நாடுகளிலிருந்து வருகின்றவர்களுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பு உதவி செய்தது.
இவ்வாறு சோவியத் யூனியனுக்கு எதிராக போராடுவதற்கு ஆப்கான் சென்றவர்களுள் சவூதி அரேபியாவின் கோடீஸ்வரரும் ஒருவர். அவர்தான் “ஒசாமா பின் லேடன்” ஆகும்.
இவ்வாறு ஆப்கானில் சோவியத் யூனியனுக்கு எதிராக போராட களமிறங்கியவர்கள் அனைவரும் “முஜாஹிதீன்கள்” என்று அழைக்கப்பட்டனர்.
அப்போது அமெரிக்கா, சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்கு முஜாஹிதீன்களாக காட்சியளித்த “ஒசாமா பின் லேடன்” போன்றோர் பின்னாட்களில் பயங்கரவாதியாக மாறுவார் என்று அப்போது எவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
தாங்கள் என்னதான் ஆக்கிரமிப்பு செய்தாலும், எத்தனை கொலை செய்தாலும் அதற்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளிப்பவர்கள் முஜாஹிதீன்களாகவும், அதனை எதிர்ப்பவர்கள் பயங்கரவாதிகளாகவும் சித்தரிப்பது அரச பயங்கரவாதத்தின் நடைமுறையாகும்.
ஆப்கானிஸ்தான் போராளிகள் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலிருந்தும் போராட்டத்தில் இணைந்துகொண்ட ஆயிரக்கணக்கான முஜாஹிதீன்களுக்கு பாகிஸ்தானிலேயே இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டது. இதனை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ISI மேற்கொண்டது.
அத்துடன் அமெரிக்கா ஒவ்வொரு வருடமும் 650 மில்லியன் டொலர் பணத்தினை இதற்காக ஒதுக்கீடு செய்து நேரடியாக முஜாஹிதீன்களுக்கு உதவி செய்தது. அமெரிக்கா வழங்கிய பணத்துக்கு மேலதிகமாக சவூதி அரேபியாவும் பெருமளவு நிதிகளை வழங்கியதுடன், எகிப்து, துருக்கி, பிரித்தானியா போன்ற அமெரிக்காவின் நட்பு நாடுகளும் பெருமளவில் உதவி செய்தன.
தனது படை பலத்தாலும், நவீன ஆயுத பலத்தாலும் முஜாஹிதீன் போராளிகளை சில வாரங்களில் அடக்கி ஆப்கானிஸ்தான் முழுவதையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரலாம் என்று சோவியத் படைகள் திட்டமிட்டது.
ஆனால் இஸ்லாமிய நாட்டை ஆக்கிரமித்த சோவியத் யூனியன் என்ற கொமியுனிச படைகளுக்கு சேதத்தினை ஏற்படுத்தி ஆப்கானிஸ்தானைவிட்டு விரட்ட வேண்டும் என்ற நோக்கில் முஜாஹிதீன்கள் மிக மூர்க்கமான முறையில் சோவியத் படைகளுக்கு எதிராக போர் தொடுத்தார்கள்.
இந்த போராட்டத்தில் முஜாஹிதீன்களுக்கு பாரிய சவாலாகவும், அச்சுறுத்தலாகவும் இருந்தது சோவியத் படைகளின் வான் தாக்குதலாகும். இதனால் விமானப்படைகளின் பலத்தை அழித்தொழிப்பதில் முஜாஹிதீன்களின் முழுக்கவனமும் இருந்தது.
அவ்வாறு சோவியத் விமானப்படைகளின் பலத்தை அழிப்பதற்கு அமெரிக்கா சில தந்திரோபாய உதவிகளை செய்தது. எவ்வாறான உதவிகளை அமெரிக்கா செய்தது என்று அடுத்த தொடரில் பார்க்கலாம்.
தொடரும்..............
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது


No comments