Breaking News

சவூதி கோடீஸ்வர போராளியும், சோவியத் படைகளின் வெளியேற்றத்துக்கு பின்னும்.

ஆறாவது தொடர்.........

ஆப்கானிஸ்தான் என்பது “வல்லரசு நாடுகளின் கல்லறை” என்று அழைக்கப்படுவதுண்டு. அதாவது பிரித்தானியா, சோவியத் யூனியன், அமெரிக்கா ஆகிய பலவான்களுக்கு சமாதிகட்டிய தேசம் என்பதுதான் இதன் பொருளாகும். 


சோவியத் யூனியனை அழிப்பதற்கு ஆப்கானிஸ்தானை ஒரு தளமாக அமெரிக்கா பயன்படுத்திய அதே நேரம், இழந்த இஸ்லாமிய கிலாபத்தை மீண்டும் நிறுவுவதற்கான படை கட்டமைப்பை உருவாக்குவதற்கு போரிடும் ஆற்றலையும், அனுபவத்தையும் பெற்றுகொள்வதற்கான களமாக முஜாஹிதீன்கள் இந்த போரை பயன்படுத்தினார்கள்.  


இவர்களை முஜாஹிதீன்கள் என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும், அந்தந்த பிராந்தியங்களை சேர்ந்த ஒவ்வொரு குழுக்களுக்கும் வெவ்வேறு பெயர்களும் தலைமைத்துவமும் போர்ச்சூழலில் கட்டமைக்கப்பட்டிருந்தது. . 


சோவியத் படைகள் ஆப்கானைவிட்டு வெளியேறும் வரைக்கும் ஒரே கொள்கையில் சோவியத் படைகளுக்கு எதிராக போரிட்டதனால் முஜாஹிதீன் குழுக்களுக்கிடையில் எந்தவித சண்டைகளோ, குழப்பங்களோ ஏற்பட்டதில்லை. 


ஆப்கானில் போரிட்டுக் கொண்டிருக்கும்போது ஒசாமா பின் லேடன் அவர்கள் “மக்தாப் அல்-கிதாமத்” என்னும் முஜாஹிதீன் இயக்கத்திலிருந்து செயல்பட்டு வந்தார். 


1988 இல் அவ்வியக்கத்திற்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக “மக்தாப் அல்-கிதாமத்” இயக்கத்தைவிட்டு வெளியேறி “அல்-கொய்தா” என்னும் இயக்கத்தை உருவாக்கி தொடர்ந்து ரஷ்ய படைகளுக்கு எதிராக போரிட்டார். அதாவது சோவியத் படைகள் முழுமையாக ஆப்கானைவிட்டு வெளியேற முன்பாகவே “அல்-கொய்தா” இயக்கம் உருவாக்கப்பட்டது. 


1960 க்கு பின்பு புனித மக்கா புணர்நிருமானம் செய்து விஸ்தரிக்கப்பட்டது. இதனை செய்த முஹம்மது அவாட் பின் லேடன் அவர்களின் கட்டுமான நிறுவனமே புனித ஸ்தளத்தின் நிர்மான பணிகளை மேகொண்டது. அவரது புதல்வர்தான் ஒசாமா அவர்கள். இவரது குடும்பம் சவூதி அரச குடும்பத்துடன் மிகவும் நெருக்கமானது.  


இவர் பொறியியல் பட்டத்தை பெற்றதுடன், அல்-குரர்ஆண் முழுமையாக மனனம் செய்தவர் என்று கூறப்படுகின்றது. இவரது வழிநடத்தல் மூலம் சோவியத் படைகளுக்கு எதிராக உக்கிரமாக சண்டை செய்து பல கள வெற்றிகளை பெற்றதனால் ஆப்கானில் மட்டுமல்லாது சர்வதேசரீதியிலும் அப்போது புகழ் கிடைத்தது. 


சோவியத் படைகள் வெளியேறிய பின்பு ஒசாமா தனது தாய்நாடான சவூதி அரேபியாவுக்கு சென்றுவிட்டார். அதன்பின்பு ஆப்கானில் முஜாஹிதீன் குழுக்களுக்கிடையில் தலைமைத்துவ போட்டியும், சண்டைகளும் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் நிலையானதும், அமைதியானதுமான ஆட்சி நிலவவில்லை. 


1989 தொடக்கம் 1996 ஆம் ஆண்டு வரைக்கும் ஒரே நிருவாகத்தின்கீழ் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்கின்ற நிலை இருக்கவில்லை.  


இந்த சூழ்நிலையில்தான் சோவியத் படைகளுக்கு எதிராக போர் செய்த முஹாஜிதீன் குழுக்களில் ஒன்றான ஆப்கானின் பழங்குடி இனத்தை சேர்ந்த மிகவும் வலிமையான குழுவான “தலிபான்கள்” எழுட்சி அடைந்தார்கள். 


ஒசாமாவின் நெருங்கிய நண்பரான “முல்லாஹ் முஹமட் ஓமர்” தலைமையிலான தலிபான்கள் 1994 இல் ஆப்கானின் பின்தங்கிய பல பிரதேசங்களை தங்களது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்ததுடன், 1996 இல் தலைநகரான காபூலை கைப்பேற்றி முழு ஆப்கானிஸ்தானையும் ஆட்சி செய்தார்கள்.   


சோவியத் யூனியனுக்கு எதிராக போர்செய்த முஜாஹிதீன்களில் ஒன்றான “வடக்கு முன்னணி” என்னும் இயக்கம் ஆப்கானின் “பஞ்சீர்” பள்ளத்தாக்கினை தங்களது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்தனர். 


2001 இல் அமெரிக்கா ஆப்கானில் தாலிபான்களுக்கு எதிராக போர் தொடுத்தபோது இந்த வடக்கு முன்னணிதான் அமெரிக்காவின் வழிகாட்டியாகவும், ஒற்றர்களாகவும், செயல்பட்டதுடன் அமெரிக்காவிடம் செல்வாக்கு செலுத்தினார்கள். 


தொடரும்...........


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது





No comments