Breaking News

இரு வல்லரசுகளின் பொறிக்குள் சிக்கிக்கொண்ட ஆப்கான் போராளிகள். நாட்டின் தலைவிதியை மாற்றிய இஸ்லாமிய அறிஞர்களின் அறிக்கை.

இரண்டாவது தொடர் ......

ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளர் முகம்மது தாவூதின் ஆட்சிக் காலத்தில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் திடீரென வெளியிட்ட கருத்துக்கள் ஆப்கான் மக்கள் மனதில் புதிய சிந்தனையை தூண்டியதுடன், அமெரிக்காவின் கவனத்தையும் ஈர்த்தது. 


அதாவது நாங்கள் நீண்டகாலமாக சோவியத் யூனியனுடன் நட்பு கொண்டிருப்பதுடன், அவர்களது உதவிகளையும் அவ்வப்போது பெற்று வருகிறோம். இது இஸ்லாமிய மார்க்கத்துக்கு துரோகம் செய்வது போன்றதாகும். 


அதாவது கொமியுனிச சித்தாந்தத்தின் பிரகாரம் “இறைவன் ஒருவன் இல்லை” என்கின்ற கொள்கையுடைய இறை மறுப்பாளர்களான சோவியத் யூனியனுடன் நாங்கள் மிக நெருக்கமாக நட்பு கொண்டிருப்பது தவறு. 


அதேநேரம் அமெரிக்கர்கள் இயேசு கிருஸ்துவை வணங்குபவர்கள். என்னதான் இருந்தாலும் இயேசு கிறிஸ்து என்பது எங்களது ஈசா நபியாகும். ஈசா நபியைத்தான் அவர்கள் இயேசு என்று வணங்குகின்றார்கள். 


இருந்தாலும் கிருஸ்தவர்கள் இறைவன் இருக்கின்றான் என்று நம்புகின்றார்கள். எனவே இறைவன் இல்லையென்று நம்புபவர்களைவிட, இறைவன் இருக்கின்றான் என்று நம்புகின்ற அமெரிக்காவுடன் நாங்கள் நட்புகொள்வதுதான் சிறந்தது. என்பதுதான் ஆப்கானிஸ்தானிய இஸ்லாமிய அறிஞர்களான உலமாக்கள், இமாம்களின் கருத்தாக இருந்தது.  


ஆப்கான் இஸ்லாமிய அறிஞர்களின் இந்த அறிக்கைக்கு பின்னணியில் அமெரிக்காவின் CIA யினர் இருந்தார்களா என்ற வலுவான சந்தேகம் இல்லாமலில்லை. 


ஆனாலும் சற்றும் எதிர்பாராதவிதத்தில் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அறிஞர்களின் குறிப்பிட்ட கருத்துக்கள் வெளியானதும் அமெரிக்கா உசாரடைந்தது. 


அது தனது CIA யினர்களை ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவச்செய்தது. குறிப்பிட்ட மார்க்க அறிஞர்களை சந்தித்து அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க அமெரிக்கா முன்வந்தது. ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்காவின் செயற்பாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ISI செய்துகொடுத்தது. 


இந்த சூழ்நிலையில் ஆப்கானின் ஆட்சியாளர் முகம்மது தாவூதின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு 1978.04.27 இல் இராணுவத்தின் உதவியுடன் சதிப்புரட்சி மூலம் நூர் முகம்மது தராக் என்பவர் ஆட்சியை கைப்பற்றினார். 


இவர் கடந்தகாலத்து ஆப்கானிஸ்தானின் ஆட்சித் தலைவர்களைவிட ஒருபடி மேலே சென்று சோவியத் யூனியனின் அதி தீவிர விசுவாசி என்பதனை காண்பிக்கும்படியாக இவரது ஆட்சி இருந்தது.  


மதச்சார்பற்ற கொள்கையினைக்கொண்ட நூர் முகம்மது தராக் அவர்கள் பெண்களுக்கு சம உரிமையை வழங்கியதுடன், இவரது ஆட்சியில் மேக்கத்தேய ஆடை அணியும் கலாச்சாரமும் மேலோங்கியது. 


கிட்டத்தட்ட சோவியத் யூனியனின் கொமியுனிச கொள்கையினை போன்ற கொள்கையினை நூர் முகம்மது தராக் அவர்கள் ஆப்கானிஸ்தானில் நடைமுறைப்படுத்தினார். இது ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய அறிஞர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், அமெரிக்காவை நண்பனாக்கிக் கொள்வதற்கான காரணியாகவும் இது அமைந்தது.  


அத்துடன் நிலங்கள் அரசுடமையாக்கப்பட்டதனால் மக்கள் கொதித்தெளுந்தனர். அரசுக்கு எதிராக நாடுதழுவியரீதியில் சிறுசிறு போராட்டங்களும், வன்முறைகளும் உருவாக தொடங்கியது. 


இவ்வாறானதொரு சந்தர்ப்பத்திற்காக நீண்ட காலமாக காத்துக்கொண்டிருந்த அமெரிக்கா, மக்களின் சிறு சிறு போராட்டங்களை ஊதிப் பெருப்பிக்கும் செயலில் இறங்கியது. மிகவும் சவால்களும், கடினமும் நிறைந்த அந்த செயல் என்ன என்பதனை அடுத்த பதிவில் பார்க்கலாம். 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது





No comments