Breaking News

பொது வாழ்வுக்காக தனி நபராக இருந்து போராடிய இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாக வாழ்வு நம் அனைவருக்கும் படிப்பினையாக அமையட்டும்..!!

பொது வாழ்வுக்காக தனி நபராக இருந்து போராடிய இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாக வாழ்வினை நம் அனைவருக்கும் படிப்பினையாக அமைய வேண்டுமென ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும் உயர்பீட உறுப்பினருமான மௌலவி எம்.எஸ்.எஸ். ஸப்வான் விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில்;

இஸ்லாமிய சீர்திருத்த பணிக்காக தன்னையும் தனது குடும்பத்தினரையும் அர்ப்பணம் செய்த நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வாழ்வு உலக மக்கள் அனைவருக்கும் சிறந்த முன்மாதிரியாக அமைய வேண்டும்.


சுயநலம் மிக்க இந்த உலக வாழ்க்கையில் பொது வாழ்வுக்காக ஒரு தனி நபராக இருந்து போராடிய நபி இப்ராஹீம் அலை அவர்கள் போன்று,

எமது வாழ்வில் நாம் தனிமை படுத்தப்பட்டாலும் சமூகத்தோடு இணங்கி வாழ்கின்ற சூழல் கிடைக்கப் பெற்றாலும்

பொதுநலன் உடையவர்களாகவும்,

பொது வாழ்க்கையில் சுயநலன் அற்றவர்களாகவும்,

சொந்த வாழ்க்கையையே பொது நலனுக்காக அர்ப்பணம் செய்யக்கூடிய தியாகிகளாகவும் எம்மைப் மாற்றிக்கொள்வோம். 

பிறருக்கு துன்பங்கள் தராமலும் பிறர் நலனுக்காக உழைக்கின்றவர்களாகவும் எம்மை மாற்றிக்கொள்ள இந்நன்னாளில் உறுதி பூணுவோம்.


நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு தனி நபராக இருந்து பொதுப் பணியில் அவர் ஈடுபட்டமையாலும் இறைவனை மாத்திரம் நம்பி செயற்பட்டமையாலும் அவரை ஒரு சமுதாயதிற்கு நிகரானவர் என இறைவன் அல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான். 

எனவே இறைவிசுவாசத்துடன் தனி நபராக ஒருவர் சமூகப் பணிகளில் ஈடுபடும் போது இறைவன் அவருக்கு ஒரு சமுதாயத்தின் பலத்தை வழங்குகின்றான் என்பதை நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கையில் இருந்து படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.


அத்துடன் தனது குடும்பத்தினரே தவறு செய்தாலும் அதனை மூடிமறைத்து சமூகத்திற்கு துரோகம் செய்யும் நம்மவர்களுக்கு தன் தந்தையையே தட்டிக் கேட்க துனிந்த நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரச்சாரப் பணி பாடமாக அமைய வேண்டும்.


இத்தகைய மன வலிமையுடனும் இறை விசுவாசத்துடனும் புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் இலங்கைத் திருநாட்டின் முஸ்லிம்கள், எமது ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


பெருநாளுடைய நிகழ்வுகளையும் உழ்ஹியா (குர்பான்) விவகாரங்களையும் நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு, சுகாதார வழிமுமுறைகளைப் பேணி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டல்களுக்கு அமைவாக ஏற்படுத்திக்கொள்ளுமாறு சகல பள்ளிவாசல் நிருவாகிகளையும் பொதுமக்களையும் மிகவும் தாழ்மையாக கேட்டுக்கொள்கின்றேன்.


இவ்வாறு தெரிவித்தார்.


எம்.எஸ்.எம். ஸப்வான்

கொள்கை பரப்புச் செயலாளர்

ஐக்கிய காங்கிரஸ் கட்சி




No comments