பற்றி எரிகிறது கொழும்பு... பொரளையில் இருந்து ஆரம்பம் தொடர் 2...
[தொடர்-02]
கொழும்புக்கு உடல்கள் சென்றதும்...ஒரே பரபரப்பு நாட்டில்.அப்போதைய அரசுக்கே அச்சம்.
உடல்களை அவர்களின் ஊர்களுக்கு அனுப்பி வைத்தால் ஆபத்து.இனக்கலவரம் ஏற்படலாம்.
அஞ்சுகிறது அரசு.இதனால் பொரளை கனத்தையில் அடக்குவதற்குத் தீர்மானம். ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் முடிவு இது.
அதை நிராகரிக்கிறார் பிரதமர் ஆர்.பிரேமதாசா.அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே பிரேமதாஸாவின் தீர்மானம்.
இருந்தும்,ஜே.ஆரின் விருப்பப்படியே நடக்கிறது.
வெட்டப்படுகின்றன குழிகள்.14 குழிகள்.ஏன் 14..? மரணித்தவர்கள் 13 தானே...
காயமடைந்த உபாலி பெரேராவும் மரணமாம்.
அவருக்கும் சேர்த்துத்தான் குழி...
உபாலியின் வீட்டுக்கே போய் கூறுகிறார்கள் இராணுவத்தினர்.அவர் மரணித்துவிட்டார் என்றே.
கொழும்புக்கு வந்து உடலை எடுத்துச் செல்லுமாறு கூறுகிறார்கள்.
ஒடி வருகிறார்கள் உறவினர்கள் பதறியடித்துக்கொண்டு...கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு...
வந்து பார்த்தால் மகிழ்ச்சி...அவர் இறக்கவில்லை.உயிருடன்...
இப்போது எல்லோரின் கவனமும் கனத்தை மீதுதான்.படை எடுக்கிறார்கள் அங்கு.இறுதிக் கிரியைக்காக...
வழமைபோல் வியாபாரம்.பொரளை நடை பாதையில்...தமிழர்களின் கடைகள்தான் அதிகம்.
நடக்கப்போவது எதுவும் அறியா நிலையில் அவர்கள்.பாவம்.
பஸ்களுக்காக காத்து நிற்கின்ற கூட்டம் இன்னொரு புறம்.
இதைத் தவிர வேறு எந்த நிகழ்வுமே இல்லை.
கொழும்பு முழுவதும் இதே நிலைதான்...
வெறிச்சோடி கிடக்கிறது கொழும்பு.
நிரம்பி வழிகிறது கனத்தை...
அசம்பாவிதம் எதுவும் நடந்துவிடக்கூடாது.பொலிஸார் கூடுதல் கவனம்.
அதற்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள்.கூடிய கவனம் செலுத்துகிறார் பொலிஸ் உயர் அதிகாரி கபூர்.
மறுபுறம் இராணுவம்.அவர்கள் நிற்பதோ சடலங்களின் வருகையை எதிர்பார்த்து...
காத்து நிற்கிறார்கள் மக்கள்.உடல்களின் வருகையை எதிர்பார்த்து...ஆனால்,தாமதம்.இதனால் பதட்டம்.
குழம்புகிறார்கள்.இறங்குகிறார்கள் வீதிக்கு.நடத்துகிறார்கள் வேட்டையை...அந்தக் கலவரத்தை.
மறுபக்கமும் சிறு சலசலப்பு...அங்கு வந்து நிற்கும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சிலரால்...
அவர்களுக்கும் கபூரின் பொலிஸ் அணிக்கும் இடையில் வாக்குவாதம்.
அப்படியே இருக்கையில்..இன்னுமொரு சம்பவம்.அதுதான் கலவரத்தின் ஆரம்பம்.
சற்றுத் தள்ளி பாரிய தீ பிழம்பு...அது பொரல்லை சந்தியில்...
ஆம்... தீ வைக்கப்படுகின்றன அங்குள்ள தமிழர்களின் கடைகள்.
அந்தக் கடைகளின் மத்தியில் மூன்று தேங்காய் எண்ணெய் கடைகள்.அருகருகில்...
அக்கடைகளுக்கு முன்பாக முழுமையாக நிரப்பப்பட்ட எண்ணெய் பரல்கள் மூன்று.
முயற்சி செய்கிறார்கள் அவற்றைத் தூக்குவதற்கு.பல இளைஞர்கள் ஒன்றிணைந்து...
அது வெற்றியளிக்கவில்லை...
வீதியில் கவிழ்த்து விடுகிறார்கள் பரல்களை.பரலின் மூடிகளை கழட்டி...
ஓடுகிறது எண்ணெய்.வீதி நெடுகே...
வழுக்கி வீழ்கிறார்கள் அந்த வீதியால் வந்த மக்கள்.
பற்றி எரிகின்றன கடைகள்.அங்கு ஒரு கட்டடம்.ஆறு மாடிக் கட்டடம்.அது ஒரு வர்த்தக நிலையம்.
அதுவும் தீக்கிரை.வெடித்துச் சிதறுகின்றன அக்கட்டடத்தின் கண்ணாடிகள்.தீயின் சூட்டால்...
முழு பொரளை சந்தியும் கரும்புகைக்குள்.
அங்கிருந்து மருதானை பக்கம் திரும்பிப் பார்த்தால்...அங்கும் அதேநிலைதான்...
வீதியில் நிற்க முடியவில்லை.கடும் சூடு.தாங்க முடியா சூடு.
சிதறி ஓடுகிறார்கள் மக்கள் .நாளா பக்கமும்.சூட்டில் இருந்து தப்புவதற்காக..இறுதிக் கிரியைக்காக வந்தவர்கள் அவர்கள்.
பொருட்களை அள்ளிச் செல்கிறார்கள் சிலர்.எரியும் கடைகளுக்குள் புகுந்து...சூட்டையும் பொருட்படுத்தாது...
இப்படித்தான் ஆரம்பம் அந்த ஜூலை கலவரம்.இங்கிருந்துதான் ஆரம்பம்.பொரளையில் இருந்து...
நாட்டின் எல்லா இடங்களுக்கும் பரவுகிறது இந்தக் கலவரம்.வடக்கு-கிழக்கு தவிர...
அழிக்கப்படுகின்றன தமிழர்களின் வர்த்தக நிலையங்கள்-வீடுகள்-வாகனங்கள்-உயிர்கள் என எல்லாம்.
தொடர்ச்சியாக ஏழு நாட்கள் இதே நிலைதான்...
அப்போதைய ஐ.தே.க அரசு-ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன இதைக் கட்டுப்படுத்த எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
அன்றைய அரசின் கைக்கூலிகளே கலவரத்தின் சூத்திரதாரிகள்.
அமைச்சர் சிறில் மெதிவ் தலைமையில் அன்று இயங்கியது தொழில் சங்கம் ஒன்று.ஐக்கிய தேசிய கட்சியினுடையது.தேசிய சேவைகள் சங்கம்.
நாடு பூராகவும் அதன் உறுப்பினர்கள்.அவர்களின் கைகளில் தமிழர்களின் வாக்காளர் பட்டியல்.
அதை வைத்துக்கொண்டுதான் இலகுவாக முடித்தார்கள் தமிழர்களின் கதையை.அழித்தார்கள்-சூறையாடினார்கள் அவர்களின் சொத்துக்களை...
எப்படிப்பட்ட கொடுமை-எப்படிப்பட்ட அநியாயம்.
பார்ப்போம் நாளைய தொடரில்...
[ஊடகவியலாளர் எம்.ஐ.முபாறக் ]

No comments