ஜூலை கலவரத்துக்கு வித்திட்ட 13 படையினரின் கொலை: இலங்கையின் வரலாற்றையே மாற்றி எழுதிய திண்ணைவேலி சந்தி
இலங்கையின் வரலாற்றில் இரத்தக்கறை படிந்த நாட்கள் பல.அவற்றுள் ஒன்றுதான் கறுப்பு ஜூலை.தெற்கில் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட-சொத்துக்கள் அழிக்கப்பட்ட வரலாறு அது.
அந்தக் கலவரம் இடம்பெற்றது 24-ஜூலை-1983.அதாவது நாளை போன்றதொரு நாளில்...
அந்தக் கலவரத்துக்கு வித்திட்டது இன்றைய நாள் போன்ற ஒரு தினம்.23.07.1983 .
யாழில் 13 இராணுவத்தினரின் கொலைதான் ஜூலை கலவரத்தின் வித்து.
அது எப்படி இடம்பெற்றது...?
அதைத்தான் பார்க்கப்போகிறோம் இந்தத் தொடரில்...
புலிகளின் ஆரம்ப காலம் அது.மிகக் குறைந்த எண்ணிக்கையிலானோரே அந்த இயக்கத்தில்...
இயக்கத்தைப் பெரிதாக வளர்க்க வேண்டும்.அதற்குப் பணம் வேண்டும்.ஆயுதங்கள் வேண்டும்.உறுப்பினர்கள் வேண்டும்.
என்ன செய்வது...? யோசிக்கிறார்கள் புலிகள்.உதிக்கிறது ஒரு திட்டம்.
அதுதான்.... இராணுவத்தின் மீதான ஒரு பாரிய தாக்குதல்.அதனூடாக வளர்ச்சியடைதல்...
ஆனால்,அதற்கான ஆயுதங்கள் இல்லை அவர்களிடம்....
303 ரக துப்பாக்கி மற்றும் ஷொட் கன் ரக துப்பாக்கி.இப்படியான துப்பாக்கிகள்தான் அவர்களிடம் அப்போது....
இவற்றை வைத்து முடியுமானவரை ஒரு தாக்குதல்.இதுதான் புலிகளின் திட்டம்..
இராணுவ முகாம்களைத் தாக்க முடியாது இந்த ஆய்தங்களால்.
அப்படியானால் என்ன செய்வது...?
அதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு.
இரவில் ரோந்து வரும் படையினர் மீது தாக்குவதுதான் அந்த வழி.அம்பூஸ் கிடந்து...அதாவது பதுங்கிக் கிடந்து...
தேடித் திரிகிறார்கள் சந்தர்ப்பத்தை...கைகூடியே வருகிறது விரைவாக..
படையினர் புலிகளைத் தேடி அலையும் காலம் அது.ஒவ்வோர் இரவும் ரோந்து.அறிகிறார்கள் புலிகள் இதை.
இதுதான் சந்தர்ப்பம்.அருமையான சந்தர்ப்பம்.பயன்படுத்த வேண்டியதுதான்.
இராணுவம் ஒவ்வோர் இரவும் ரோந்து செல்ல...புலிகளைத் தேடிச் செல்ல...புலிகளும் அவர்கள் பின்னால்.படையினரை வேட்டையாடுவதற்காக...
இவ்வாறு பல நாட்கள்.கைகூடுகிறது ஒரு நாள்.அதுதான் ஜூலை 23 ஆம் திகதி நள்ளிரவு.
அன்றிரவு வாகன ரோந்து ஒன்றுக்குத் தயாராகிறார்கள் படையினர்.15 பேர்.இரண்டு வாகனங்கள்.
மாதகல் முகாமில் இருந்து புறப்படுகிறது அந்த டீம்.
பலாலி முகாமுக்கு சென்று அங்கிருந்து உத்தரவை பெற்றுக்கொண்டு யாழில் பல இடங்களில் சுற்றுதல்...புலிகளைத் தேடுதல்...
இரவு 12 மணிக்குள் குருநகர் வந்துவிட வேண்டும்.
படையினரின் ரோந்து நடவடிக்கையை முற்றாக அவதானிக்கிறார்கள் புலிகள்.
எங்கு வைத்துத் தாக்குவது...? எப்படித் தாக்குவது...?
தெரிவு செய்கிறார்கள் ஓரிடத்தை...அதுதான் திண்ணைவேலி சந்தி.
இவ்வழியால்தான் திரும்புவார்கள் படையினர்.அப்போதுதான் நடத்த வேண்டும் தாக்குதலை...
இப்போது புலிகள் இந்த சந்தியில் அம்பூஸ்...
படையினர் புலிகளை எங்கெல்லாமோ தேடித் திரிய..புலிகள் இங்கே...திண்ணைவேலி சந்தியில்...
இராணுவ வாகனங்கள் 2.ஒன்று ட்ராக்.அடுத்தது ஜீப்.
ஜீப்பில் லெப்டினன் வாசு குணவர்தன.அவருடன் ஒரு சில சிப்பாய்கள்.
மிகுதி படையினர் ட்ரக்கில்...
முன்னால் ஜீப்.பின்னால் ட்ரக்...
ரோந்து முடித்துவிட்டு குருநகர் முகாவுக்குத் திரும்பும் பயணம் அது.
இப்போது நெருங்குகிறார்கள் சந்தியை...திண்ணைவேலி சந்தியை...இலங்கையின் வரலாற்றையே மாற்றி எழுதப் போகும் சந்தியை...
தயார் நிலையில் புலிகள்.அத்தனை படையினரையும் போட்டுத் தள்ளுவதற்காக...
படையினர் சரியாக சந்தியின் நடுவே வர...செயலில் குதிக்கிறார்கள் புலிகள்.
திடீரென ஒரு சத்தம்.குண்டு வெடிப்புச் சத்தம்.
படையினரை நோக்கி வீசப்பட்ட குண்டு அது.
குண்டு என்றால் கைக்குண்டோ-கிளைமோரோ அல்ல.
காங்கேசன்துறை சீமெந்து தொழில்சாலையில் சுண்ணக்கல் உடைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு சாதாரண கருவி.
இந்த சம்பவத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பே அந்தக் கருவியை களவெடுத்துவிட்டார்கள் புலிகள்.
அதனால் பாரிய சேதத்தை ஏற்படுத்த முடியாது. ஒரு சத்தத்தை எழுப்பி படையினரின் வாகனங்களை நிறுத்துவதே அதன் நோக்கம்.
அவ்வாறே செய்கிறார்கள்...
அத்தோடு நிலைகுலைகிறார்கள் படையினர்.எதிர்பார்த்ததுபோல்...
வாகனங்கள் இரண்டும் அப்படியே நிற்க...சுற்றி வளைக்கிறார்கள் புலிகள்...
பிறகு என்ன...?
மழையெனப் பொழிகின்றன வெடிகள்.படையினர் சுதாகரிக்கும் முன்பே...
படையினரை நோக்கி வருகின்றன குண்டுகள்.வீழ்ந்து வெடிக்கின்றன பெரும் சத்தத்தோடு.
அவை குண்டுகள் அல்ல.எஸ்லோன் குழாய்களைக் கொண்டு-ஆணிகள் -சைக்கிள் சன்னங்கள் நிரப்பி தயாரிக்கப்பட்ட குண்டுகள்.
புலிகளின் சொந்தத் தயாரிப்பு...
படையினரை நோக்கி வீசுகிறார்கள் ஒவ்வொன்றாக...திரியில் நெருப்பை ஏற்றி...
வீழ்ந்து வெடிக்கின்றன பெரும் சத்தத்தோடு...
அந்த சத்தத்தோடு கலந்தே வருகின்றன வெடிச் சத்தங்களும்...
புலிகள் வளைத்து நின்று தாக்க...பதிலுக்கு இராணுவமும்..
வைத்துப் பிடிக்கிறார்கள் படையினர்.வளைத்து...வளைத்து...
நெருக்கமான இடம்.சுற்றி வீடுகள்.
இதற்கு முதல் நாள் போயா தினம்.இதனால் நிறைந்த நிலவொளி.எல்லாமே தெரிகிறது தெளிவாக...
புலிகள் மறைவில்...படையினர் சந்தியில்...
இதனால் சமாளிக்க முடியவில்லை படையினரால்...
புலிகளை நோக்கிய வெடில்கள் எல்லாம் வீண்.ஆனால்,புலிகளின் வெடிகள் எல்லாம் படையினர் மீது...
இருந்தும்,போராடுகிறார்கள் படையினர்.சுற்றிச் சுற்றி பிடிக்கிறார்கள்.புலிகளை நோக்கி...அதிர்கிறது அந்தப் பகுதியே...
பதறியடித்துக்கொண்டு எழும்புகிறார்கள் மக்கள்.நித்திரையில் கிடந்தவர்கள்.
அவர்களுக்கோ அது புதிது.இதற்கு முன் கேட்டிருக்கவில்லை இப்படியான துப்பாக்கிச் சத்தங்களை...
எதுவுமே புரியவில்லை...என்ன நடக்கிறது சந்தியில்...? எட்டிப் பார்க்கவும் முடியாது.
அச்சத்தில் அப்பகுதி மக்கள்.நடுக்கத்தோடு...வீறிட்டு அழும் குழந்தைகளின் வாய்களை கைகளால் பொத்திக்கொண்டு...
காதுகளை கிழிக்கின்றன வெடிச் சத்தங்கள்.இவ்வாறே நீண்ட நேரம்...
மெல்ல மெல்லக் குறைகிறது சத்தம்.வெடிச் சத்தம்..
ஆம்..ஒவ்வொன்றாகச் சரிகிறார்கள் படையினர்.
எல்லோரும் நிலத்தில்...தப்பியது இருவர் மட்டுமே.
ஒருவர் கோப்ரல் உபாலி பெரேரா.அடுத்தவர் லான்ஸ் கோப்ரல் சுமதிபால.
இருந்தும்,இருவருக்கும் வெடில்...
சுமதிபாலாவுக்கு நெஞ்சில்...உபாலிக்கு கால்களில்...
சாய்கிறார் சுமதிபால.நெஞ்சைப் பிடித்துக்கொண்டு...
ஓடிப் போய் தூக்குகிறார் அவரை உபாலி...
அருகில் ஒரு மதில்.இருட்டு அந்த இடத்தில்.சாத்துகிறார் அதில் அவரை.
இப்போது தானும் தப்ப வேண்டும்.எல்லா படையினருக்கும் வெடில்.தனித்து நின்று போராட முடியாது.
தோட்டாக்களும் கொஞ்சம்தான் இவர் கையில்.அதை வைத்து எதுவும் செய்ய முடியாது.SLR துப்பாக்கி இவரிடம்...
இடம் தேடுகிறார் தப்புவதற்கு...
அருகில் ஒரு மதில்...மிகவும் பணிவான மதில்...ஏறுவதற்கு வசதியான மதில்...
ஏறுகிறார் அதில்.அப்படியே தாவுகிறார் வீடு ஒன்றின் கூரை மீது...
புலிகள் காணவில்லை இதை...
புலிகள் நிற்கும் திசைக்கு மறு திசையில்தான் அந்தக் கூரை....
புலிகளின் கண்களுக்குப் படவே படாது...அந்த வீட்டில் ஏறி எல்லாப் பக்கமும் தேடினாலே தவிர...
போய் ஒளிந்துகொண்டார்.அதற்கு மேல்...
ஓடுகிறது இரத்தம்.அவரது கால்களில் இருந்து...
நிரம்புகிறது அவரது பூட்ஸ்.நிரம்பி வழிகிறது அதற்குள் இருந்து...
அகற்றுகிறார் இரத்தத்தை.பூட்ஸை கழட்டி...
இறுக்கி கட்டுகிறார் காயங்களை.பூட்ஸ் லேஸைக் கொண்டு...
இரண்டு கால்களிலும் வெடில்கள்.இடது காலில் சொட் கன் வெடில்.வலது காலில் 303 வெடில்.
303 புல்லட்கள் காலை கிழித்துக்கொண்டு போய்விட்டன.ஷொட் கன் சன்னங்கள் அப்படியே காலுக்குள்.வெளியாகவில்லை...
இந்த 2 வகையான ஆயுதங்கள்தான் அப்போது புலிகளிடம்.303 துப்பாக்கிகள்-ஷொட் கன் துப்பாக்கிகள்.
எல்லாம் பொலிஸ் நிலையங்களில் சுட்டவை.
இப்போது நைசாக எட்டிப் பார்க்கிறார் வீதியை...
ஓய்ந்து விட்டன வெடிச் சத்தங்கள்.படையினர் எல்லோரும் மரணித்துவிட்டதால்...
இப்போது படையினரிடம் வருகிறார்கள் புலிகள்.பிடுங்குகிறார்கள் படையினரிடம் இருக்கும் ஆயுதங்களை.உடற்பாகங்களை வெட்டி அகற்றி...
அப்படியே பின்வாங்குகிறார்கள் புலிகள்...
எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு...ஆயுதங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு...
பார்த்துக்கொண்டே இருக்கிறார் உபாலி எல்லாவற்றையும்...
எதுவும் செய்ய முடியாது.எதிர்த்துத் தாக்கவும் முடியாது.துப்பாக்கி ரவைகளும் கொஞ்சமே...
இப்போது இறங்குகிறார் கீழே.புலிகள் சென்றதும்...
வருகிறார் சம்பவ இடத்துக்கு...
சிதறிக் கிடக்கிறார்கள் படையினர்.அங்கும் இங்கும்.தட்டிப் பார்க்கிறார் ஒவ்வொருவரையும்...
உயிர் இருக்கிறதா...? இல்லை.எல்லோரும் சரி.
மூச்சு இழுக்கிறது ஒருவருக்கு...
மறுபக்கம் வீழ்ந்து கிடக்கிறார் லெப்டினன் வாஸ் குணவர்தன.அவர்தான் இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கியவர்.அவரும் சரி.
எதிர்பார்த்திராத சம்பவம் அது...
கலங்கி நிற்கிறார் உபாலி.தனித்து நிற்கிறார்.உதவிக்கு ஒருவரும் இல்லை.
அடுத்து என்ன செய்வது...?
முகாமுக்கு அறிவிக்க வேண்டும்.தேடுகிறார் கொமியுனிகேசன் செட்டை.அதை வைத்திருந்தவர் சார்ஜன் ஒருவர்.
மூச்சு வாங்கிக்கொண்டு இருப்பவர் அவர்தான்.எங்கோ வீழ்ந்துவிட்டது அந்தக் கருவி.
அவரிடம் கேட்க முடியாது.தேடிப் பார்க்கிறார்.கிடைக்கவில்லை.
வெடிச் சத்தம் முகாமுக்குக் கேட்டிருந்தால் அறிவிக்க வேண்டியதில்லை.உடனே இராணுவம் வந்திருக்கும்.
இந்த வெடிச் சத்தங்கள் எவையும் இராணுவ முகாம்களுக்கு கேட்கவில்லை.
ஏன் தெரியுமா...?
அவ்வாறு கேட்காதிருக்க ஒரு யுக்தியைக் கையாள்கிறார்கள் புலிகள்...
சண்டை நடக்கும்போது கோவில் ஒன்றில் பட்டாசு வெடில்களை சுடுகிறார்கள் புலிகள்.இது அவர்களின் ஒரு போர்த் தந்திரம்.
துப்பாக்கிச் சத்தங்கள் இராணுவ முகாமுக்கு கேட்கவில்லை.கேட்டதோ பட்டாசு சத்தம்தான்.
கோவில் நிகழ்வுகளில் அப்படி நடப்பது சகஜம்.அதை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்கிறார்கள் புலிகள்.
இப்போது என்ன செய்வது...?
கொமினிக்கேஷன் செட்டை கண்டு பிடிக்க முடியவில்லை.
மாற்று வழிதான் என்ன...?
தொலைபேசி இருக்கும் ஓர் இடத்தை நோக்கிச் செல்ல வேண்டும்.அங்கிருந்து முகாமுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
யோசிக்கிறார் உபாலி.அருகில் தொலைபேசி இருக்கும் இடம் எது...?
நினைவுக்கு வருகிறது ஓர் இடம்...
ஆம்...அது யாழ்.பஸ் டிப்போ.அங்கே இருக்கிறது தொலைபேசி.
அங்கே செல்கிறார்.ஓட்டமும் நடையுமாக..இரு கால்களில் இருக்கும் வலியோடு...
அடைகிறார் பஸ் டிப்போவை.துப்பாக்கி முனையில் பிடிக்கிறார்.அங்கு பொறுப்பாக இருப்பவரை...
அங்கிருந்து அழைப்பு எடுக்கிறார் பொலிஸ் நிலையத்துக்கு...
எத்திவைக்கிறார் தகவலை.உடனடியாக பலாலி இராணுவ முகாமுக்கு தகவல் கொடுக்குமாறு கூறுகிறார்.
அப்படியே நடக்கிறது...
உடனே விரைந்து வருகிறார்கள் இராணுவத்தினர் அந்த பஸ் டிப்போவுக்கு.லெப்டினன் வீரசிங்கவின் தலைமையில்...
விரைகிறார்கள் சம்பவ இடத்துக்கு...உப்பாலியையும் கூட்டிக்கொண்டு...
அங்கே எல்லோரும் சரி...
அடுத்து...?
காயமடைந்த இருவரும் யாழ்.வைத்தியசாலையில்...13 பேரின் உடல்களும் மறுநாள் கொழும்புக்கு..விமானம் மூலம்...
அடுத்து என்ன...? இனிதான் பெரும் கொடூரமே...
பார்ப்போம் நாளைய தொடரில்...
[ஊடகவியலாளர் எம்.ஐ.முபாறக்]

No comments