Breaking News

குவைத் அரசாங்கத்திடமிருந்து பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கு அன்பளிப்பு

முஹம்மத் பகீஹுத்தீன்

கொரோனா வைரஸ் கோவிட் -19 தொற்றுநோயின் துயரத்திலிருந்து மக்களைப் காப்பாற்றுவதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் குவைத் செம்பிறை சங்கம் பெருந்தொகையான மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. 


குவைத் அரசாங்கம் செம்பிறை சங்கத்தினூடாக துன்பியல் நிகழ்வுகளின் போது மக்களின் துயர் துடைப்பதற்காக தனது சக்தியால் முடியுமான அனைத்து நிவாரணப் பணிகளையும் செய்து வருவதாக குவைத் செம்பிறை சங்கத்தின் பொதுச்செயலாளர் மெஹா அல்-பர்ஜஸ் குவைத் செய்தி ஸ்தாபனத்துக்கு தெரிவித்துள்ளார்.


இலங்கை சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் தொற்றுநோய் எதிர்ப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி மருத்துவத் துறையை பலப்படுத்துவதற்காக இத்தகைய மனிதாபிமான உதவிகளை அவசரமாக இலங்கை மருத்துவமனைகளுக்கு வழங்குவதாக பொதுச்செயலாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.


குவைத் அரசாங்கத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள 300 மில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் 17.05.2021 வியாழன் அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன. 


மேற்படி மருத்துவ உபகரணங்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் கையளித்தது. அவற்றின் பெறுமதி 300 மில்லியன் ரூபாவாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மனிதாபிமான உதவிகளாக கிடைக்கப் பெற்ற இந்த மருத்துவ உபகரணங்கள் யாவும் குவைத் மக்கள் இலங்கை மக்களுக்கு வழங்கும் நன்கொடையாகும் என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


குவைத் நாடானது உலகளவில் துன்பங்களால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கும் தேவையுடையவர்களுக்கும் உரிய நேரத்தில் மனிதநேய உதவிகளை செய்வதில்  ஒரு முன்னோடியாக திகழ்கிறது என குவைத் நாட்டுக்கான இலங்கை தூதுவர் உஸ்மான் ஜவ்ஹர் பாராட்டியுள்ளார். இலங்கை தூதுவர் கூனாவிற்கு அளித்த அறிக்கையில் கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதற்கு மனிதபிமான உதவிகளையும் மருத்துவ உபகரணங்களையும் வழங்கியமைக்காக செம்பிறை சங்கத்தின் தலைவர் டொக்டர் அல்-சாயர் அவர்களுக்கு இலங்கை சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். 


குவைத் செம்பிறை சங்கமானது இதற்கு முன்பும் இலங்கை தாய் திருநாட்டிற்கு பல்வேறு வகையான மனிதநேய உதவிகளைளும் அபிவிருத்தித்திட்டங்களுக்கான உதவிகளையும் சுகாதாரத் துறைக்கு தேவையான நிவாரணப் பணிகளையும் வழங்கி வந்துள்ளமை நன்றியோடு நினைவுகூறப்பட வேண்டிய விடயங்களாகும். இவை யாவும் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான ராஜதந்திர உறவுகளின் பிரதிபலிப்பாகும் என்பதில் சந்தேகமில்லை.





No comments