Breaking News

வீரமும், விவேகமும் கொண்ட தைரியமான தலைமையாக மர்ஹூம் கே.ஏ.பாயிஸை கண்டுள்ளோம் : புத்தளம் மாவட்ட சமாதான நீதவான்கள் பேரவை இரங்கல்

இலங்கை அரசியலில் முஸ்லிங்களின் அரசியல் சுவடுகளில் எப்போதும் நீங்காத தடம் பதித்த புத்தளத்தின் தைரியமான, திடமான அரசியல் ஆளுமை அகால மரணமடைந்து போனார் எனும் துக்ககரமான அதிர்ச்சியான செய்திகேட்டு நாங்கள் உறைந்து போனோம். 


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபக பெரும் தலைவர் மர்ஹும் கலாநிதி எம்.எச்.எம்.அஷ்ரப்  அவர்களின் அரசியல் பாசறையில் இளவயது முதலே நன்றாக பட்டை தீட்டப்பட்ட திடமும், தீரமும், வீரமும் ஒருங்கமைந்து அமையப்பெற்ற ஒரு துடிப்பான அரசியல் தலைவனாக மர்ஹும் கே.ஏ.பாயிஸ் அவர்களை நாங்கள் கண்டுள்ளோம். 


முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப காலத்து போராளிகளில் ஒருவராக அரசியலில் நுழைந்த கே.ஏ.பாயிஸ், தனது அரசியல் வழித்தடத்தில் மிக நெருக்கமாய் புத்தளம் மண்ணின் மக்களுடன் பயணித்த சகோதரன் அவர். கே.ஏ.பாயிஸ் எனும் மக்கள் தலைவன் இந்த மண்ணில் விட்டுச்சென்ற தடயங்களும் எங்களை போலவே மீளாத்துயில் கொண்டு அவர் ஒன்றித்து பயணித்த நினைவுகளின் சுவடுகளை தரிசித்து நிற்கிறது.!


 மக்களுக்காய் துணிகரமாக சேவைகளாற்றி,  நம்மை விட்டு பிரிந்திருக்கும் புத்தளம் நகர பிதாவும், முன்னாள் பிரதியமைச்சருமான மர்ஹும் கே.ஏ.பாயிஸ் அவர்களின் மறுமை வாழ்வு பிரகாசிக்கவும், அகிலம் படைத்த எல்லாம் வல்ல அன்பான அல்லாஹ் அவரை உயர்ந்த சுவர்க்கத்தில் நிலைக்கச் செய்யவும் மானசீகமாய் நாங்கள் இருக்கரமேந்தி பிரார்த்திக்கின்றோம். 


அன்னாரை இழந்து தவிக்கும் அவரின் உறவினர்கள், அவரை மிகையாய் நேசிக்கும் புத்தளம் மக்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் எல்லோருக்குமாய் அவரின் இழப்பை ஏற்கும் மனவலிமையை வேண்டியும் பிரார்த்திக்கின்றோம்.


அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து 

ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சொர்க்கத்தை வழங்குவானாக..!

ஆமீன் 


சமாதான நீதவான்கள் பேரவை

புத்தளம் மாவட்டம்.




No comments

note