Breaking News

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி.!!

புண்ணியம் சுமந்து பாவக்கறை போக்கி அருள்தந்த றஃமத்தான ரமழானை கடந்து ஈகைத்திருநாளை கொண்டாடும் அனைவருக்கும்  தேசிய காங்கிரஸின் 

தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின்  வாழ்த்துச் செய்தி.


அல்லாஹுத்தஆலாவின் அருள் நிறையவே கிடைக்கப்பெறுவதுவும், பாவமன்னிப்புக்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதுமான மாதம் ரமழானில், இந்நாட்டில் மாத்திரமன்றி உலகம் முழுவதும் செறிந்து வாழும் முஸ்லிம் உடன்பிறப்புக்கள் நோன்பு நோற்று இராப்பகலாக நின்று வணங்கி அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புத் தேடியும் அல்லாஹ்வின் அருளை வேண்டியும் செயற்பட்டனர்.  அல்ஹம்துலில்லாஹ்.!


மேலும் அம்மக்கள் இன்றைய தினம் ஈதுல்பித்ர் ஈகைத்திருநாளைக் கொண்டாடி அல்லாஹ்வுக்கு சுக்ர்  செய்கின்றனர். அம்மக்களுக்காக எனது உள்ளம் கனிந்த நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மனநிறைவும் மட்டில்லா மகிழ்ச்சியும் அடைகின்றேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வையும் புகழ்கின்றேன்.


நோன்பின் மாண்பீகம்தான் மானிடனைப் பக்குவப்படுத்தும். அலங்காரங்களுக்காக இல்லாது, அல்லாஹ்வின் பொருத்தம் நாடி, ஒரு நல்லடியான் செய்யும் அந்தரங்க அமல்தான் புனித நோன்பு. உள்ளச்சமுள்ள எவனும் இந்த நல்லமலை பகட்டுக்காகச் செய்வதில்லை. இதனால்தான், இதற்கான நற்கூலிகளை வல்லவன் "அல்லாஹ்" நேரடியாகப் பொறுப்பேற்கிறான்.


நோன்பின் பயிற்சி ஒரு மனிதனைப் பக்குவப்படுத்தியே ஆகும். இந்தப் பக்குவத்தை வாழ்நாளின் அந்திம காலம் வரைக்கும் கடைப்பிடிப்பதில்தான், மானிடத்தின் வெற்றியும் தங்கி உள்ளது. ஏனையோரின் பசி,வலி, பட்டினி,வறுமைகளால் ஏற்படும் கஷ்டங்களைப் பொறுமையாகச் சகித்துக் கொள்ளும் புனித நோன்பின் இலட்சியங்கள், சகோதர வாஞ்சைக்கே வழிகாட்டுகிறது.


அதிகார இலக்குகளுக்கான சந்தர்ப்பவாதங்களால், இந்த வெற்றிகளை நாம் அடைய முடியாது. அவ்வாறு அடைந்தாலும் அவை காலப்போக்கில் நீர்த்துப் போவதாகவே இருக்கும். இவைதான், நாம் கடந்த காலங்களில் கற்றுக்கொண்ட பாடங்களாகவும் உள்ளன. 

எனவே, நோன்பின் படிப்பினைகளைப் பேணி, மானிடம் வாழ்தற்கான வழிகளில் பயணிக்க அனைவரும் தாயாராக வேண்டும்.


பல்லின மக்கள் வாழும் நமது நாட்டில் எல்லா இன மக்களும் ஒற்றுமையோடும் நிம்மதியோடும் வாழ்வதற்கும் ஏனைய இன மக்கள் முஸ்லிம்களைப் புரிந்து கொண்டும் மேலும் அவர்களோடும் நல்லுறவு ஏற்படவும் பிரார்த்திப்பதோடு இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்த முனையும் தீய சக்திகளின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுவதற்கும் எல்லாம் வல்ல இறைவனை இந் நன்நாளில் பிரார்த்திப்போமாக. ஆமீன்.


முஸ்லிம் நாடுகளில் இஸ்லாத்தின் விரோத சக்திகளால் திட்டமிட்ட பிரிவினைகள் தோற்றுவிக்கப்பட்ட பல அச்ச சூழ்நிலையிலும் நமது முஸ்லிம் உம்மத்துகள் இன்றைய தினத்திற்கு முகம் கொடுக்கின்றனர். அவர்கள் வாழ்விலும் நிலையான விடிவு ஏற்பட புனிதமிக்க இந் நன்நாளில் நாம் அனைவரும் இருகரமேந்தி பிரார்த்திப்போமாக.


நோன்பு நோற்று நிறைவான தியாகங்களின் பின் வந்திருக்கும் நோன்புப் பெருநாளை நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். அதில் அதில் ஏனைய இனத்தவர்களும் இணைந்திருப்பதை விரும்புவோம். இஸ்லாமிய சிறந்த முன்மாதிரிகளினால்தான் நாம் மற்றையவரை வென்றெடுக்க முடியும். அழகிய இலங்கைத் திருநாட்டில் அன்புரவாழ இப்பெருநாள் வழிகாட்டட்டும்.

 

ஏ.எல்.எம். அதாஉல்லா  (பா .உ)

தலைவர் - தேசிய காங்கிரஸ்.




No comments

note