மனிதப் பேரழிவை ஏற்படுத்தியுள்ள கொவிட் இல்லாதொழிய பிரார்த்திப்போம்; பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கல்முனை முதல்வர் ஏ.எம்.றகீப் வேண்டுகோள்
(அஸ்லம் எஸ்.மௌலானா)
முழு உலகையும் நிலைகுலையைச் செய்து, மனிதப் பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற கொவிட்-19 எனும் கொடிய வைரஸ் நோய் இல்லாதொழிந்து, மனித குலம் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்காக இப்புனிதத் திருநாளில் பிரார்த்திப்போம் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;
"கொவிட்-19 வைரஸ் தொற்று வீரியமடைந்துள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் தேச நலன் சார்ந்த விடயங்களில் முஸ்லிம்கள் மிகக் கரிசனையோடு நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
அந்த அடிப்படையில்தான் சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களின் பிரகாரம் முஸ்லிம்களாகிய நாம், விரும்பியோ விரும்பாமலோ பள்ளிவாசல்களில் றமழான் இபாதத்களைக் கூட மட்டுப்படுத்த வேண்டியிருந்தது. அந்த வகையில் இம்முறை ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முஸ்லிம்கள் எல்லோரும் தமது வீடுகளில் இருந்தவாறே கொண்டாடுவதன் மூலம் கொவிட்-19 ஒழிப்பு செயற்பாடுகளுக்கு எமது சமூகம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி வருவதை நிரூபிப்போம்.
அதேவேளை, கடந்த சில காலமாக கொவிட்-19 எனும் கொடிய நோய்க்கு மத்தியிலும் முஸ்லிம்கள் மீதான இனவாத செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டு வருவதுடன் மாற்று சமூகங்களுக்கிடையில் முஸ்லிம் சமூகம் தொடர்பில் தப்பபிப்பிராயங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற சூழ்நிலையில் முஸ்லிம்கள் அனைவரும் அனைத்து விடயங்களிலும் மிகக்கவனமாக செயற்படுவதுடன் ஏனைய சமூகத்தினருக்கு எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, முன்மாதிரியாக நடந்து கொள்வதுடன் இனவாத நெருக்கடி, அச்சுறுத்தல்களில் இருந்து இலங்கை முஸ்லிம் சமூகம் விடுதலை பெற வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.
றமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று ஆன்மீக ரீதியில் பக்குவப்பட்டிருக்கின்ற முஸ்லிம்கள், தாம் எதிர்கொள்கின்ற துன்ப, துயரங்கள் மற்றும் நெருக்கடிகளின்போது அவற்றை இறைவனிடம் பாரம்சாட்டி, பொறுமை, சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிப்பதுடன் எவரிடமும் விரோதம், குரோதம், பகைமை பாராட்டாமல் அனைவருடனும் ஐக்கியமாக வாழ்வதற்கு திடசங்கற்பம் பூணுவோம்.
மேலும், மனிதனைப் புனிதப்படுத்துகின்ற நோன்பு எமக்கு கற்றுத்தந்துள்ள அனைத்து நற்பண்புகளையும் முழு வாழ்க்கையிலும் கடைப்பிடிப்பதன் மூலமே நாம் நோற்ற நோன்புகள் அரத்தமுக்கள்ளதாக அமையும். அவ்வாறே நோன்பு நோற்று, ஏழை, எளியவர்களின் பசியையும் கஷ்டங்களையும் உணர்ந்துள்ள நாம், அவர்களின் வாழ்வாதாரத்திற்காகவும் நோய் பிணிகளுக்காகவும் நேசக்கரம் நீட்டுபவர்களாக மாறுவதற்கு இத்திருநாளில் உறுதி பூணுவோம்.
அனைத்து முஸ்லிம்களுக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். ஈத்முபாரக்.
No comments