Breaking News

றிசாத் பதியுதீன் குற்றவாளியென்றால் நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்காமல் நள்ளிரவில் கைதுசெய்து தடுத்துவைத்திருப்பது ஏன் ?

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் நேரடியாக சம்பந்தப்பட்ட எவரும் அண்மைய நாட்களில் கைது செய்யப்படவில்லை. 


ஆனால் இந்த தாக்குதலில் சம்பத்தப்பட்ட முக்கிய நபர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு, விசாரணையின்போது சந்தேக நபர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்வதுபோன்று றிசாத் பதியுதீன் அவர்களை நள்ளிரவில் கைது செய்துள்ளார்கள்.  


ஈஸ்டர் தாக்குதலில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகளை கண்டுபிடித்து உடனடியாக தண்டனை வழங்காமல், இதனை காண்பித்து இன்னும் எவ்வளவு காலங்களுக்கு அரசியல் செய்யபோகின்றார்களோ தெரியவில்லை. 


இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டார் என்ற சந்தேகத்தில் கடந்த வருடம் கைது செய்யப்பட்டு, பின்பு நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட றிசாத் பதியுதீனின் சகோதரர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 


அன்று நிரபராதி என்று கூறி விடுவிக்கப்பட்டவர் மீண்டும் சந்தேகநபராக மாறியதன் மர்மம் என்ன ? 


கடந்த நல்லாட்சியின்போது றிசாத் பதியுதீனை அமைச்சர் பதவியிலிருந்தும், ஆசாத் சாலி, ஹிஸ்புல்லா போன்றோர்களை ஆளுநர் பதவிகளிலிருந்தும் விலக்க வேண்டுமென்று கோரி பௌத்த இனவாதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், உண்ணாவிரதமும் இருந்தார்கள். 


இதன்போது குறிப்பிட்ட மூவரும் முஸ்லிம் அடிப்படைவாதிகள் என்றும், நாட்டுக்கு துரோகம் செய்தவர்கள் என்ற தோற்றப்பாடு அப்பாவி சிங்கள பாமர மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ளது. 


இவ்வாறான அடிப்படைவாதிகளை கைது செய்து கூண்டுக்குள் அடைப்பதன் மூலம் மட்டுமே தாம் தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்றிய திருப்தியை அடையலாம் என்று அரச தரப்பு கணித்திருக்கக்கூடும். 


அத்துடன் பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்கள் இலங்கையில் மதத்தீவிரவாதம் இல்லையென்று கூறிவிட்டு மறுநாள் அதனை மறுத்திருந்தார். அவ்வாறு அவர் மறுப்பு தெரிவித்ததற்கும் இந்த கைதுக்கும் சம்பந்தம் இல்லையென்று கூறமுடியாது. 


இராணுவ ஆட்சி நடைபெறுகின்ற நாடுகள் தவிர்ந்த ஜனநாயக ஆட்சி நடைபெறுகின்ற நாடுகளில் ஒரு அரசியல் கட்சியின் தலைவரை ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் சாதாரணமாக கைது செய்வதில்லை. 


ஈஸ்டர் தாக்குதல் காரணமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான இப்ராஹீம் என்னும் வர்த்தகரும் தாக்குதலில் பங்குபற்றிய அவரது புதல்வர்களும் றிசாத் பதியுதீனுடனும், அவரது சகோதரருடனும் தொடர்பு இருந்தது என்ற குற்றச்சாட்டுக்களையும் மற்றும் பயங்கரவாதிகள் நிதி பெறுவதற்கு உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டுகளையும் றிசாத் பதியுதீன் மீது சுமத்தக்கூடும். 


வர்த்தக அமைச்சர் என்றவகையில் வர்த்தகர்களுடன் உறவு வைத்துக்கொள்வது சாதாரண விடயமாகும். ஆனால் அந்த வர்த்தகர் தனது இரகசியமான தீவிரவாத நடவடிக்கைகளை அமைச்சருடன் எந்தவகையிலும் வெளிப்படுத்தியிருக்வோ, பகிர்ந்திருக்கவோ வாய்ப்பில்லை. 


ஆனால் நல்லாட்சியின்போது சிங்கள பாமர மக்கள் மத்தியில் அடிப்படைவாதிகளாக சித்தரிக்கப்பட்டவர்களை கூண்டுக்குள் அடைத்து தண்டனை வழங்காமல் அடுத்த தேர்தலுக்கு சென்றால் அது தங்களது வாக்குகளில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதனை ஆட்சியாளர்கள் புரியாமலில்லை. 


எனவேதான் சாதாரண நேரங்களில் றிசாத் பதியுதீனை கைது செய்திருந்தால், அது சிங்கள மக்கள் மத்தியில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்காது. 


நள்ளிரவில் கைது செய்ததன் காரணமாகவே முஸ்லிம் தரப்பினர் அரசுக்கெதிராக கண்டனங்களை தெரிவிகின்றனர். இதனால் றிசாத்தின் கைது தலைப்புச் செய்தியாக உருவெடுத்ததுடன் அரசுக்கு எதிராக குரல் எழுப்ப இருந்த சில தென்னிலங்கை சக்திகளை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கும். அத்துடன் பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்களையும் திருப்திப்படுத்தியிருக்கும். 


உண்மையில் றிசாத் பதியுதீன் குற்றவாளி என்றால் ஆதாரங்களை சமர்பித்து நீதிமன்றம் ஊடாக தண்டனையை வழங்க முடியும். அவ்வாறில்லாமல் விசாரணை என்றபோர்வையில் தடுத்து வைத்திருப்பதானது அரசியல் பழிவாங்கலே தவிர வேறு ஒன்றுமில்லை. 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது






No comments

note