Breaking News

கல்முனையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை; மேல் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீர்மானம்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற நீதி நிருவாக ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக, கல்முனை மாநகர சபை எல்லையினுள் போக்குவரத்துகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படவிருப்பதாக மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.


இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;


மாநகர சபைகள் கட்டளை சட்டம் 78 உப பிரிவு 03 இன் கீழ், மாநகர சபையின் அனுமதியின்றி வீதிகளில் மணல், கற்கள் (செங்கல், கருங்கல், 3/4 இஞ்சி கல் உள்ளிட்டவை), மரக்குற்றிகள், கிரவல், கட்டிட நிர்மாணப் பொருட்கள் மற்றும் குப்பைகளை குவித்து வைத்தல் அல்லது சேர்த்து வைத்தல், சீமெந்துக் கலவையிடல் என்பன தணடனைக்குரிய குற்றமாகும்.


அவ்வாறே, மாநகர சபைகள் கட்டளை சட்டம் 78 உப பிரிவு 04 இன் கீழ், மாநகர சபையின் அனுமதியின்றி வீதியில் வாகனங்களை நிறுத்தி வைத்தல், வீதியில் திறக்கும்படியாக வீட்டு நுழைவாயில் கதவு அமைத்திருத்தல், வீதியில் படிக்கட்டு அமைத்திருத்தல், மிருகங்களை கட்டி வைத்தல் போன்றவையும் தணடனைக்குரிய குற்றமாகும்.


மேலும், மாநகர சபைகள் கட்டளை சட்டம் 78 உப பிரிவு 05 இன் கீழ், வீதி வடிகான்களினுள் கழிவு நீரை விடுதல், வீட்டுக் கூரைகள் மற்றும் மாடிக் கட்டிடங்களில் இருந்து மழை நீர் வீதிகளில் விழும்படியாக குழாய்களை அமைத்திருத்தல் போன்றவையும் தணடனைக்குரிய குற்றமாகும்.


அத்துடன் 1951 ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டத்தின் நியம துணை விதிகளின் கீழ், மாநகர சபையின் அனுமதியின்றி வீதிகளில் விளம்பர பலகைகள் அமைத்திருத்தல், கூடாரம் அமைத்தல், அங்காடி வியாபாரம் மேற்கொள்ளல் போன்றவையும் தணடனைக்குரிய குற்றமாகும்.


மேற்படி குற்றச்செயல்களை புரிவோருக்கு 5000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என்பதுடன் சட்ட நடவடிக்கை மூலம் குற்றவாளியாக காணப்பட்ட பின்னர் அக்குற்றம் தொடருமாயின் வழக்கிடப்பட்ட தினத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் ரூபா 250 வீதம் தண்டப்பணம் அறவிடப்படும்.


ஆகையினால், இக்குற்றச் செயல்களை புரிவோர் அவற்றை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என மாநகர சபையினால் பணிக்கப்படுகின்றனர். அதேவேளை, வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாயில் கதவு, படிக்கட்டு மற்றும் கட்டுமானங்களை ஒரு மாத காலத்திற்குள் அகற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்படுகிறது.


இவற்றைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக கல்முனை மாநகர சபையில் வீதிப் பரிசோதகர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அத்துடன் கல்முனை பொலிஸ் நிலையத்தில் இதற்கென விசேட பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்விரு தரப்பினரும் இணைந்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.


கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி தலைமையில் இடம்பெற்ற நீதி நிர்வாக ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக மாநகர சபைகள் கட்டளை சட்டம் மற்றும் ஒழுங்கு விதிகள், தண்டனைச் சட்ட ஏற்பாடுகள் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை சட்டம் என்பவற்றை கல்முனை மாநகர சபை எல்லையினுள் உடனடியாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் மேலும் தெரிவித்தார்.




No comments

note