Breaking News

இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பும், பிரித்தானியாவின் அரசியலும். தமிழர்களின் அடுத்தகட்ட நகர்வுகள் என்ன ?

இறுதி யுத்தத்தின்போது நடைபெற்ற யுத்தக் குற்றம், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை பேரவையில் பிரித்தானியா தலைமையிலான மேற்கு நாடுகளினால் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரனைக்காக இன்று (2021.03.23) நடைபெற்ற வாக்கெடுப்பில் எதிர்பார்த்தது போன்று இலங்கை தோல்வியடைந்துள்ளது.


47 உறுப்பு நாடுகளைக்கொண்ட மனித உரிமை பேரவையில் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்ததுடன், 14 நாடுகள் நடுநிலைமை வகித்தது. அதாவது இலங்கைக்கு ஆதரவாக பதினொரு நாடுகள் மட்டுமே வாக்களித்துள்ளன. 


இலங்கை அரசு அதிஉச்ச ராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டிருந்தும், அதற்கு வளைந்து கொடுக்காமல் இந்தியா நடுநிலைமை வகித்ததானது, தமிழகத்தில் தேர்தல் காலம் என்று கருதப்பட்டாலும், ஈழத் தமிழர்கள் விடயத்தில் இந்தியாவின் மனோநிலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதென்று எடுத்துக்கொள்ளளாம்.   


தமிழர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் சர்வதேசத்தினால் இலங்கைக்கு எதிராக மனித உரிமை பேரவையில் பிரேரணை முன்வைப்பது இது முதல் முறையல்ல. மாறாக 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் முறையே முதலாவது, இரண்டாவது, மூன்றாவது பிரேரணைகள் கொண்டு வரப்பட்டிருந்தது. 


தமிழர்களின் தாயகப் பிரதேசங்களிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் நீதி கோரி தொடர்ச்சியாக நடாத்தப்பட்ட போராட்டங்களும், தியாகங்களும், விடாமுயற்சியுமே சர்வதேசத்தின் காதுகளை சென்றைடைந்ததுடன், அவர்களது இதயங்களை தட்டியெழுப்பி தமிழர்கள் மீது பரிதாபத்தினை ஏற்படுத்தியுள்ளது. 


ஆனாலும் எந்தவொரு சக்தியுள்ள நாடுகளும் தங்களது சுயநல அரசியல், பொருளாதார மற்றும் ஆதிக்க நலன் தவிர்ந்த, வேறு எந்தவொரு விடயத்திற்காகவும் பிரிதொரு நாட்டுக்குள் மூக்கை நுழைப்பதில்லை. 


உலகின் முதன்மை வல்லரசாக இருந்த பிரித்தானியா, தனது காலனித்துவத்தின்கீழ் இருந்து சுதந்திரம் பெற்ற நாடுகளுக்குள் தனது எதிரி நாடுகள் காலூன்றுவதனையோ, அங்கு ஆதிக்கம் செலுத்துவதனையோ ஒருபோதும் விரும்புவதில்லை. 


சீனா போன்ற மேற்குலகின் எதிரி நாடுகள் இலங்கையில் ஆழ வேரூன்றி ஆதிக்கம் செலுத்துவதனை பிரித்தானியா போன்ற வல்லரசு நாடுகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. 


அதன் பிரதிபலிப்பாகவே மேற்கு நாடுகளுக்கு சார்பான நிலைப்பாட்டில் இலங்கை அரசை பணிய வைப்பதுடன், இலங்கையிலிருந்து சீனாவை அகற்றும் நோக்கத்திற்காகவே மனித உரிமை மீறல் விவகாரத்தை பிரித்தானியா கையில் எடுத்துள்ளது.  


இன்று உலகில் சத்தமின்றி அமெரிக்காவுக்கு அடுத்ததாக உலகிலுள்ள நாடுகளில் தனது இராணுவ தளங்களை அமைத்துள்ள நாடு பிரித்தானியா ஆகும்.


முதலாவது உலக யுத்த காலத்தில் துருக்கி தலைமையிலான இஸ்லாமிய பேரரசு பிரித்தானியா தலைமையிலான நேச நாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்ததன் காரணமாக அன்றைய அரசியல் சூழ்நிலையை யூதர்கள் தங்களுக்கு சாதகமாக நன்கு பயன்படுத்தினார்கள். 


அதனால் இஸ்லாமிய பேரரசை வீழ்த்தியதுடன், பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் என்னும் பலமான யூத ராஜ்யத்தினை உருவாக்குவதற்கான அத்தனை முயற்சிகளையும் பிரித்தானியாவின் உதவியுடன் யூதர்கள் மேற்கொண்டு வெற்றிகண்டார்கள். 


அதுபோல் இன்றையை அரசியல் சூழ்நிலைகளை தமிழ் தரப்பினர் சரியாகப் பயன்படுத்தினால், பிரித்தானியா மற்றும் இந்தியாவின் உதவியுடன் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் தங்களுக்கான அதிகபட்ச உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும்.


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது



No comments

note